செவ்வாய், 27 மே, 2014

பங்குச்சந்தை முதலீட்டை ஊக்குவிக்க முயலும் அரசு

அமெரிக்காவில் ஒரு தனி மனிதனின் வருமானத்தில் 47% முதலீடு பங்குகளாக நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.


இதே போல் சீனாவில் 14% பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் பொது மக்கள் வெறும் 7% மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.

பெரும்பாலான முதலீடுகள் தங்கமாக மாற்றப்படுகிறது. அதன் பிறகு அந்த தங்கம் லாக்கரில் தூங்கி விடுகிறது.

இல்லா விட்டால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்படுகிறது.பங்குச்சந்தை முதலீடு என்பது ஒரு தனி மனிதனுக்கு மட்டும் லாபம் கொடுக்கிறது என்று அர்த்தமல்ல. அது ஒரு நாட்டின் வளர்ச்சியின் முக்கிய காரணியாக இருக்கிறது.

ஒருவரிடம் தொழில் செய்ய திறமையும், புதிய எண்ணங்களும் இருக்கலாம். ஆனால் பணம் இருக்காது.

இவ்வாறு நம்மிடம் இல்லாதைதையும், அவர்களிடம் இல்லாததையும் சேர்த்தால்தான் தொழில் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்.

அதற்கு பணமோட்டமும் சீராக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பணம் ஓரிடத்தில் முடங்கி கிடக்கிறது. அதனை வெளிக் கொணருவது தான் அரசின் முக்கிய வேலையாக உள்ளது.

அதனால் தற்போது அரசு பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு மேலும் 50,000 ரூபாய் வரிச்சலுகை அளிக்கலாம் என்று செபி பரிந்துரை செய்துள்ளது. இது வரை முதலீடுகளுக்கு 1,00,000 ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதனுடன் இந்த ஐம்பதாயிரமும் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் நடைமுறையில் வேறு சில தடைகள் இருக்கத் தான் செய்கின்றன.


அடிக்கடி நிதி நிர்வாகங்களில் நடக்கும் ஊழல்களும், சில சமயங்களில் நிறுவனங்களில் வெளிப்படையற்ற தன்மையும் பெரிய தடையாக உள்ளன.

இதனை தீவிரமாக கண்காணிக்க அரசு முயல வேண்டும்.

மற்றொன்று, தனி மனிதன் சார்ந்த விஷயம்..

என் அம்மாவிடமும், மனைவியிடமும் நீண்ட நாள் பங்குச்சந்தை முதலீடுகளை பற்றி சொல்லாமல் வைத்து இருந்தேன். அதன் பிறகு ஒரு நாள் சொன்னதிலிருந்து அதனை நிலமாக வாங்கி போடுவதற்கு தான் வற்புறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இது நிறைய வீட்டில் நடக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு வித பயமும் காரணமாக  இருக்கலாம்.

அதற்கும் அரசு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

(எங்களால விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதுப்பா..உங்களுக்கு வளர்ச்சி வேணும்னா நீங்க வந்து எங்க வீட்டு அம்மணிகளை சமாதானப்படுத்துங்க..:))

அப்பொழுது தான் பணத்தினை அதிகமாக தொழில் வளர்ச்சிக்கு திருப்பி அனுப்ப முடியும்.

English Summary:
Govt is planning to encourage stock market investments.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக