வியாழன், 13 நவம்பர், 2014

தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்

முதலீடு' தளத்தின் ஆரம்ப கால கட்டுரையில் முதலீடுகளை பிரிப்பது எப்படி? என்று ஒரு சிறு தொடரை சுருக்கமாக எழுதி இருந்தோம். அதில் முதலீடுகளை ஒரே இடத்தில முதலீடு செய்யாமல் பரவலாக முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.


உதாரனத்திற்கு ஒரு எதிர்மறையான நிகழ்வை கற்பனையாக எடுத்துக் கொள்வோம்.

திடீரென்று பிஜேபி கட்சிக்குள் ஒரு குழப்பம் வந்து அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பங்குச்சந்தை குறைந்தபட்சம் 30~40% சரிந்து விடும். இந்த சமயத்தில் நமது முழு முதலீடையும் பங்குச்சந்தையில் போட்டு இருந்தால் நஷ்டமும் ஏற்படும். அதே சமயத்தில் நஷ்டத்தில் விற்க மனமில்லாமல் பணமும் லாக் ஆகி விடும்.

இதே போல் தான் ரியல் எஸ்டேட்டும். நமது முழு பணத்தை வைத்து 'முதலீடாக' 50 லட்சத்தில் ஒரு பிளாட் வாங்குகிறோம். வேறு கையில் சுத்தமாக காசு இல்லாத சூழ்நிலை. அந்த சமயத்தில் மருத்துவ செலவிற்காக ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. வெறும் ஐந்து லட்சத்திற்காக ஐம்பது லட்ச முதலீட்டை இழக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் பிளாட்டை வைத்துக் கொண்டு உயிரையும் இழக்க முடியாது.



ஆக, எந்தவொரு முதலீட்டிலும் தேவைப்படும் நேரத்தில் எளிதாக பணத்தை கையாளவும் முடிய வேண்டும். ஒரு சிறிய தொகையை பெறவும் அந்த முதலீடு உதவ வேண்டும். இதனைத் தான் LIQUIDITY, EQUIDITY என்ற இரண்டு பதங்களில் குறிப்பிடுகிறார்கள்.

இதற்காகத் தான் நமது முதலீட்டை அதிக ரிடர்ன் பெற பங்குச்சந்தை, பாதுகாப்பான முதலீடாக இருக்க ரியல் எஸ்டேட், எளிதில் கடன் வாங்க தங்கம் என்று பரவலாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பகுதியில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளைப் பற்றி அலசுவோம்.

தங்கத்தின் மிக முக்கிய சாதக அம்சம் என்னவென்றால் இது பங்குச்சந்தைக்கு மாற்றான முதலீடு. அதாவது இது வரை நடந்த வரலாற்றை பார்த்தால் எப்பொழுதெல்லாம் பங்குச்சந்தை குறைகிறதோ அப்பொழுது தங்கத்தின் விலை கூடி விடும். அதே போல் பங்குச்சந்தையில் புள்ளிகள் கூடும் போது தங்கத்தின் தேவை குறைந்து விடும். இப்படி இரண்டும் எதிர்மறையான தொடர்பை பெற்றுள்ளன.

இந்த தொடர்பை சரியான முறையில் பின்பற்றினால் கஷ்ட காலத்தில் கடனுக்கு அலையும் நிலையை கணிசமாக குறைக்க முடியும்.

எம்மிடம் கேட்டால் குறைந்த பட்சம் நமது முதலீட்டின் 10% தொகையை தங்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது பொருளாதார தேக்கத்தில் வேலை எதுவும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் ஆறு மாத வீட்டுச் செலவிற்கான தொகையாவது தங்கத்தில் வைத்துக் கொண்டால் சூழ்நிலையை கையாளுவது எளிது.

தங்கத்தை நாம் இது வரை நகை மூலமாக வைத்திருப்பதையே கண்டிருக்கிறோம். ஆனால் நகை வாங்கி அணிவதில் இருப்பதை இருக்கும் சந்தோசத்தை தவிர்த்து முதலீடாக பார்த்தால் இந்த முறை அவ்வளவு பயனளிக்கும் விடயம் இல்லை.

நாம் வாங்கும் போது 10 முதல் 20% வரை செயகூலி மற்றும் சேதாரமாக பிடித்து விடுவார்கள். என்றாவது தேவைக்கு அதே கடையில் மீண்டும் விற்றால் கூட அந்த செயகூலியை கொடுப்பதில்லை. இதனால் வாங்கும் போதே இழப்புடன் தான் வாங்குகிறோம்.

இதற்கு சில மாற்று முறைகள் தற்போது உள்ளன.

தங்கத்தை வெறும் நாணயமாக வாங்கலாம். இந்த நாணயங்கள் டாடாவின் தானிஷ் போன்ற நகைக் கடைகளில் விற்கப்படுகின்றன. வங்கிகளும் விற்கின்றன. வங்கிகளில் வாங்கும் நானயங்களில் பிரச்சினை என்னவென்றால் நாம் அவர்களிடம் வாங்கத் தான் முடியும் .ஆனால் மீண்டும் விற்க சென்றால் வாங்க மாட்டார்கள். இதில் 5 முதல் 8% வரை செயகூலிகள் உண்டு. ஆனால் நகையை விட செய்கூலி குறைவாக இருக்கிறது.

அடுத்து காகித தங்கங்களாகவும் வாங்கலாம். காகித தங்கங்கள் என்றால் கற்பனையான தங்கம். அன்றைய மதிப்பில் தங்க பத்திரங்களாக வைத்துக் கொண்டு விற்கும் தேதியில் என்ன விலையோ அதற்கு விற்றுக் கொள்ளலாம். இது எளிதானது.  இதில் எந்த வித செய்கூலி, சேதாரம் கிடையாது. வழக்கமான டிமேட் கணக்குகளை வைத்தே வாங்கி விடலாம்.


இங்கு Gold ETF, Gold fund என்றும் இரண்டு வகைகள் உண்டு.

Gold ETF என்பதில் நீங்கள் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வீர்கள். Gold fund என்பது ம்யூத்ச்சல் பண்ட் போல..உங்களுக்கு பதிலாக இன்னொருவர் சரியான நேரத்தில் முதலீடு செய்வார். இந்த இரண்டு முறைகளிலும் ஒரு சதவீதம் அளவு கமிசனாக கொடுக்க வேண்டி இருக்கும்.

இது Equity based Gold Funds என்றும் ஒரு பண்ட் உள்ளது. இங்கு தங்கத்தில் முதலீடு செய்யாமல் தங்கத்தை வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இது கிட்டத்தட்ட பங்குச்சந்தைக்கு ஒப்பான ரிஸ்க் உள்ளது என்பதால் பரிந்துரைக்கவில்லை.

இந்த கட்டுரையின் நோக்கம் பங்குச்சந்தையில் இருந்து விலகி இருக்க சொல்வதில்லை. முதலீடு பரவலாக வைத்து இருக்க தங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே..

நாம் தங்கத்திற்கான முதலீட்டிற்கு அட்சய திருதி எல்லாம் பார்ப்பதில்லை. வருட தொடக்கத்தில் மனைவி மூலமாக வாங்க சொல்லி விடுவது. இதனால் இரண்டு சாதகமான விஷயங்கள் உள்ளன. ஒன்று, முதலீடு பரவலாக்கபப்டுகிறது. இன்னொன்று வருடத்தின் அடுத்த பத்து மாதங்களுக்கு வீட்ல நச்சரிப்பு போன்ற தொல்லைகள் பெருமளவு குறைந்து விடுகிறது.:)

நாளை இரவு எமது போர்ட்போலியோவை பகிர்கிறோம். விரும்பும் நண்பர்கள் இன்று இரவிற்குள் இணைந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க.. அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்க..

வார இறுதியை குதூகலமாக கொண்டாட எமது வாழ்த்துக்கள்!

தொடர்புடைய பதிவுகள்:


English Summary:
The various methods to invest in Gold in India. Apart from pysical Gold, Other Gold ETF, Equity based Gold Funds are giving more safe and flexible ways to invest in Gold.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: