சனி, 24 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்பு மசோதா தற்பொழுது தேவைதானா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவிலுள்ள 70% ஏழை மக்களுக்கு மாதம் தோறும் மூன்று ரூபாய்க்குள் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை கிடைக்க வழி செய்கிறது.இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வருடத்திற்கு அரசுக்கு 1,25,000 கோடி ரூபாய் செலவாகும். இது இந்திய உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகும்.உண்மையில் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால் இது மிக நல்ல திட்டமே. தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்து விடலாம் என்றார் பாரதி. அது போலவே எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதில் எமக்கும் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்காக அவசர கோலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டத்தினை நாம் அலச விரும்புகிறோம்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பின்னரும் பாதிக்கு மேல் உள்ள மக்களை முழு உணவு கூட கிடைக்காமல் பசியோடு வைத்திருப்பது நமது ஆட்சியாளர்களே முழு காரணமாக இருப்பர்.

இந்த திட்டம் ஏதோ புதிதாக கொண்டு வந்த திட்டம் என்று நினைக்க வேண்டாம். 1971ல் கொண்டு வந்த பொது விநியோக திட்டத்தின் விரிவாக்கமே(Public Distribution System) ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களே PDS திட்டத்தினை நன்றாக செயல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்கள் அதிலும் பீகார், உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் மிக மோசமான நிலையில் இந்த திட்டம் உள்ளது. ஒரு சர்வேயில்  51% உணவு  பயனாளிகளுக்கு கிடைப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது. மற்ற வழிகளில் சென்று விடுகிறது.

தற்பொழுது கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலில் பயனாளிகள் யாரென்று தெளிவாக வரையறுக்க முடியவில்லை. பயனாளிகள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்று அரசு சொல்கிறது. இதில் யார் ஏழைகள் என்று நமக்கும் தெரியாது, அரசுக்கும் தெரியாது. திட்டக்கமிசன், மாநில அரசுகள் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு வரைமுறைகளில் ஏழைகளைப் பிரிக்கின்றனர்.

அதிலும் திட்டக்கமிஷன் படி பார்த்தால் ஒரு நாளில் 30 ரூபாய் அளவு சம்பாதித்தாலே வறுமை கோட்டுக்கு மேல் என்று சொல்கிறது. அப்படி என்றால் 25% மக்களே ஏழைகள் பிரிவில் வருவார்கள். அதன் பிறகு அரசு ஏன் 70% மக்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது?

இந்த திட்டத்திற்கான உணவு யாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அரசு கூறவில்லை. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக கருதினால் விவசாயியின் மிகப்பெரிய நுகர்வோராக அரசே இருக்கும். அப்படி என்றால் அரசின் தேவை போக மீதமுள்ள் உற்பத்தியை திறந்த சந்தையில் விற்கும் விவசாயி தேவை குறைவாக இருப்பதால் நல்ல விலை கிடைக்காமல் திணறி விடுவான். இது நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் நலிவடையவே செய்யும்.

நமது உணவை பதப்படுத்தும் வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் 44000 கோடி மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணாகின்றன என்று இன்று தான் சரத் பவார் கூறியுள்ளார். அப்படி என்றால் இந்த திட்டத்தின் உணவு எவ்வாறு பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் என்று சொல்லப்படவில்லை?

இப்படி  திட்டத்தின் அடிப்படைகளை தெளிவாக வரையறுக்காமல் இவ்வளவு அவசரமாக இந்த திட்டம் ஏன் கொண்டு வரப்பட வேண்டும்? ஏற்கனவே உள்ள பொது விநியோக திட்டத்தை சீர் படுத்தலாமே?


எனக்கு தேவை இருந்தால் தான் நான் வேலைக்கு போகணும். என்னுடைய அடிப்படை தேவைகள் அனைத்தும் அரசின் மூலமே இலவசமாக வந்து விட்டால் நான் ஏன் வேலைக்கு போகணும் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நினைத்து விட்டால் நாட்டின் உற்பத்தி எப்படி அதிகரிக்கும்? இந்த 1,25,000 கோடி அரசுக்கு எப்படிக் கிடைக்கும்?

நம்மை சோம்பேறியாக மாற்றுவதில் அரசு அவ்வளவு ஆர்வமாக உள்ளது. இந்த ஆர்வத்தை ஏன் சுத்தப்படுதப்பட்ட குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை, வேலைவாய்ப்பு என்று காட்டக்கூடாது?

தற்போது திட்டக் கணக்கு பற்றாக்குறையும் அந்நிய செலவாணியும்  மிக மோசமான நிலையில் இருக்கும் போது இவ்வளவு செலவு மிகுந்த ஒரு அவசர திட்டம் தேவைதானா?

ஒட்டு வங்கி அரசியல் நம்மைப் பிடித்த ஒரு சாபக்கேடு. வெறும் காகித திட்டங்கள் நமது ஏழ்மையைப் போக்கி விடாது.

இந்த பதிவு குறித்து தங்கள் கருத்துக்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Is Food Security Bill really needed?

தொடர்புடைய பதிவுகள்:

ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. நண்பரே,முதலில் எனது வணக்கங்கள்.. தாய் மொழி தமிழில் அருமையான பதிவு.. நன்றி..

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் அலசி ஆராய்ந்து பதிவு செய்துள்ளிர்கள்.மிக்க நன்றி என்னுடைய வாழ்த்துகள் என்பதை விட நன் மேலும் இது போன்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்பதை மிக பணிவுடன் கேட்டுகொள்கிறேன்

    பதிலளிநீக்கு