வியாழன், 29 மே, 2014

புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)

இந்தக் கட்டுரையில் நிறுவனங்களின் புத்தக மதிப்பை வைத்து பங்குகளை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

'பங்குசந்தை ஆரம்பம்' என்ற தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.

புத்தக மதிப்பு என்பது ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.  (Book Value)



அதாவது, நிறுவனத்தின் சொத்து மதிப்புகளை அந்த நிறுவனம் வாங்கிய கடன்களிலிருந்து கழித்துக் குறிக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பு தெரிய வரும்.

உதாரனத்திற்கு, ஒரு நிறுவனம் 95 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும், 75 லட்சத்துக்கு கடனும் வங்கி இருந்தால் அதன் புத்தக மதிப்பு 20 லட்சம் ஆகும்.

இதனால் ஒரு நிறுவனம் கடனில் உள்ளதா அல்லது நல்ல மதிப்புடன் உள்ளதா என்பதனை அறிவதற்கு தோரயமாக புத்தக மதிப்பை பயன்படுத்துகிறார்கள்.

புத்தக மதிப்பினை நிறுவனத்தின் "Balance sheet" என்ற அறிக்கையினை  படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது சில இணையதளங்களில் புத்தக மதிப்பையும், இதர விகிதங்களையும் தெளிவாகக் கோடிட்டு காண்பிப்பதால் நிதி அறிக்கைகளையும் படிக்க தேவையில்லாமல் போய் விடுகிறது.

புத்தக மதிப்பினை வைத்து பங்கு விலை சரியாக உள்ளதா? இல்லையா ? என்பதனை அறியவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு மேலே உள்ள உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.

அதே நிறுவனம் மொத்தம் பத்தாயிரம் பங்குகளை வைத்து இருப்பதாக கொள்வோம். அந்த நிறுவனத்தின் மொத்த புத்தக மதிப்பு 20 லட்சம் என்பதாகும்.

அப்படி என்றால், ஒவ்வொரு பங்கிற்கும் உண்மையான மதிப்பு எப்படி என்பதை இவ்வாறு கணக்கிடலாம்.

One share price = Book Value/Total no. of outstanding shares

ஒரு பங்கின் மதிப்பு = புத்தக மதிப்பு / பங்குகள் எண்ணிக்கை

ஒரு பங்கின் மதிப்பு = 20 லட்சம் / 10,000 = 200 ரூபாய்.

இதன் அர்த்தத்தை கற்பனையாக இப்படிக் கருதலாம்.

அந்த நிறுவனம் தற்போது விலைக்கு போவதென்றால், உங்களுடைய ஒரு பங்கின் உண்மையான மதிப்பான 200 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.

இதனை மேலும் தெளிவாகக் காண்பிக்க ஒரு விகிதம் வைத்துள்ளார்கள்.

அதன் பெயர் Price-To-Book(P/B) விகிதம் என்பது. இந்த விகிதத்தை பயன்படுத்தி விரைவில் நிறுவனத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

Price-To-Book விகிதத்தினை இவ்வாறு கணக்கிடலாம்.

P/B = தற்போதைய பங்கு விலை / ஒரு பங்கின் புத்தக மதிப்பு

மீண்டும் மேலே உள்ள உதாரனத்துக்கு செல்வோம்.

அதே பங்கு சந்தையில் 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் உண்மையான பங்கின் மதிப்போ புத்தக மதிப்பின் படி 200 ரூபாய்.

இதனால் இதன் P/B மதிப்பு = 300/200 = 1.5.

அதாவது ஒன்றரை மடங்கிற்கும் அதிகமாக பங்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.  இதிலிருந்து பங்கின் விலை சிறிது அதிகமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் புத்தக மதிப்பிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

என்னவென்றால், இந்த சொத்து மதிப்பு என்பது வெறும் அசையா சொத்துகள் மற்றும் கைவசம் உள்ள பணம் போன்றவற்றை மட்டும் வைத்தே கணக்கிடப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் பிராண்ட், காப்புரிமை வருமானங்கள், மனித உழைப்பு, எதிர்கால வளர்ச்சி போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சில துறைகளில் இது தவறாகி விடுகிறது.

உதாரணத்துக்கு, மென்பொருள் நிறுவனங்களுக்கு அசையா சொத்துகளை விட மனித திறன் என்பது மிக முக்கியமானது. ஆனால் புத்தக மதிப்பு வெறும் சொத்துகளை வைத்து கணக்கிடுவதால் இங்கு சிறு தவறாகி விடுகிறது.

இதனால் HCL நிறுவனத்தின் புத்தக மதிப்பு  9 என்ற அளவில் இருந்தாலும் எதிர்கால வளர்ச்சி என்பதைக் கருத்தில் கொள்ளும் பொது முதலீட்டிற்கு ஏற்றதே.

இந்த சமயங்களில் அதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்களை ஒப்பிடுவதன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வங்கி பங்குகளுக்கு புத்தக மதிப்பு பெரும்பாலும் சரியாக அமைகிறது.

பொதுவாக P/B மதிப்பு ஒன்றிற்கு அருகில் இருப்பது பங்கின் விலை சரியான விலையில் இருக்கிறது என்று கருதிக் கொள்ளலாம்.

P/B மதிப்பு எதிர்மறையில் இருந்தால் நிறுவனம் கடனில் மூழ்கி இருக்கிறது என்று கருதலாம்.

ஆனாலும் சில துறைகளில், வளரும் நிறுவனங்களில். P/B மதிப்பு பத்து வரைக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இதனால் புத்தக மதிப்பையும் பங்குகளை வாங்குவதற்கு முன்பு சரிபார்க்கும் ஒரு வித அளவுகோலாகக் கருதிக் கொள்ளலாம்.

இந்த கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துகளை பகிருங்கள். எதிர்காலத்தில் இதே போல் உள்ள கட்டுரைகளை எழுதுவதற்கு மிகவும் பயன்படும்.

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

  1. Useful information. In which industry the P/B ratio is high?

    I think, the industry P/B ratio also to be considered while evaluating particular stock's P/B ratio. By the way, whether buy or sell option can be exercised only based on Lower and Upper Price Band of the stocks?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for your comment!
      Yes. The industry P/B ratio also to be considered while evaluating.
      Mostly, I would like to prefer growth based stocks. So most of the times, not worrying about 52 week highs.


      நீக்கு
  2. நன்றி . நன்றாக உள்ளது . நிறைய எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
  3. P/B மதிப்பு எதிர்மறையில் இருந்தால் நிறுவனம் கடனில் மூழ்கி இருக்கிறது என்று கருதலாம்.//// அப்படியான நிறுவனம் ஏதும் உள்ளதா நண்பா??

    பதிலளிநீக்கு