வியாழன், 19 ஜூன், 2014

ஏன் இந்தி(ய) ஒருமைப்பாடு திணிக்கப்படுகிறது?

நாடு முழுவதும் விலைவாசி உயர்வும், வேலையில்லா பிரச்சினையும் முக்கியமாக இருக்கும் வேளையில் முழுப் பெரும்பான்மை பெற்று பிஜேபி அரசாங்கம் தனது சொந்த கொள்கைகளை திணிக்க ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது.


அரசாங்கம் பல பிரதேசங்களில் வாழும் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு வளர்ச்சியை மேலே கொண்டு செல்ல முடியாது. அதற்கு ரஷ்யா தான் சான்று. பெரியண்ணன்களில் ஒருவராக இருந்த ரஷ்யா சிறிய பிரதேசங்களை புறக்கணித்ததால் 1991ல் சிதைவடைந்த பிறகு இன்று வரை மீளாமல் உள்ளது.

முதலில், காஷ்மீர் பிரச்சினையை கிளப்பியது. தற்போது இந்தியைக் கட்டாயமாக்க முயற்சி செய்வது. என்று குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாத பல குழப்பங்களை மத்திய மந்திரிகள் பேசத் தொடங்கியுள்ளார்கள்.

மத்திய அரசு அதிகாரிகள் இந்தியில் தான் தகவல் தொடர்பு மேற்கொள்ள வேண்டும் என்ற தற்போதைய ஆணை தேவையில்லாத ஒன்று. மத்திய அரசு என்பது இந்தி பேசும் அதிகாரிகள் மட்டும் உள்ள அரசு அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தி எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் நடந்ததல்ல. வட கிழக்கிலும் உள்ளது 

பீகார், உ.பி மக்களுக்கு தங்கள் தாய் மொழியைக் கற்க வேண்டும் என்றால், அவரவர் மாநிலங்களில் அந்த மாநில செலவுகளில் செய்வதே சரியாக இருக்கும். அதை விட்டு விட்டு அனைவரும் இந்தியைப் படிக்க வேண்டும் என்று திணிக்க முடியாது.

இந்தியா என்பது பல மொழி, கலாச்சராங்களுடைய ஐரோப்பிய யூனியன் போல் உள்ள நாடு தான். இங்கு நிர்வாக முறைகளுக்காகத் தான் நாம் அனைவரும் சேர்த்து இருக்கிறோம்.

சேர்ந்து இருப்பதால் தென் இந்தியாவின் கடல் வளமும், வட இந்தியாவின் கனிம வளங்களும் எளிதாக பகிர முடிகிறது. ஒற்றுமையாக இருப்பதன் மூலம் பாதுகாப்பையும் உறதி செய்ய முடிகிறது.

ஆனால் அதற்காக ஒரே மொழி,, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்று மற்றவர்கள் கலாச்சாரங்களை அழித்து விட்டு, ஒன்றைத் திணிக்க முடியாது.

எனது உறவுகளிடம் உணர்வு பூர்வமாக உரையாடுவதற்கு தாய் மொழி எளிதானது. அதே போல் மற்ற உலகத்தவரிடம் பேசுவதற்கு ஆங்கிலம் உள்ளது.

இப்படி இரண்டு வாசல்கள் மட்டும் இருந்தாலே நான் உலகில் வாழ்ந்து விடலாம் என்ற சூழ்நிலையில், ஏன் இடையில் ஒரு சிறிய வாசல் திணிப்பு அவசியம்?

ஆங்கிலம் ஏதோ பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் மட்டும் நாம் கற்கவில்லை. பல அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஆங்கிலத்தில் இருப்பதும் தான் முக்கிய காரணம்.

இதே அளவு தரவுகள் ஆங்கிலத்தை விட ஹிந்தியில் இருந்து இருந்தால் ஹிந்தி உலகில் தானாகவே கற்கப்பட்டிருக்கும். ஆங்கிலம் இந்த அளவு எந்த நாட்டிலும் திணிக்கப்பட்டதில்லை.

கீழ் உள்ள NDTV ஒளிக்காட்சியைப் பாருங்கள். நன்றாக உள்ளது. ஞானி அவர்கள் பேச்சும் நன்றாக இருந்தது. அதே நேரத்தில் ஹிந்திக்காக பேசும் அந்த பெண் எழுத்தாளரைப் பாருங்கள். கொஞ்சமும் சகிப்புத் தன்மை இல்லை.



இதே போல் சகிப்புத் தன்மையின்மையைத் தான் பல வட இந்தியர்களிடமும் பார்க்கலாம். ஏதோ இந்தி தெரியாவிட்டால், இந்தியன் இல்லை அளவு பேசுவாகள். ஆனால் உண்மையான இந்திய வளர்ச்சிக்காக பாடுபட மாட்டார்கள்.

இல்லாவிட்டால், இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடங்களில் இந்தி பேசும் மாநிலங்கள் வரிசையாக இருந்திருக்காது.

இந்தி மொழி வளர்ப்பதற்கு மத்திய அரசு பாடுபடும் என்றால், மற்ற மொழிகளை யார் வளர்ப்பார்கள்?

பல மொழி பேசும் மாநிலங்களிடம் வரும் பெரும்பாலான நிதியை மத்திய அரசு வாங்கி விடுகிறது. அந்த நிதியை வைத்து ஒரு மொழியை மட்டும் வளர்ப்பது எப்படி நியாயமாகும்?

English Summary:
Why Hindi is unnecessarily forced to Non-Hindi speaking peoples?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்: