ஞாயிறு, 8 ஜூன், 2014

முதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 17)

கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை. ஆனாலும் இடைவெளிகள் ஒரு வித புத்துனர்ச்சியை அளிக்கத் தான் செய்கின்றன.


'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்

நாம் ஏப்ரல் போர்ட்போலியோவில் சில பங்குகளை பரிந்துரை செய்து இருந்தோம். அந்த பங்குகளில் சில 70%க்கும் அதிகமாக லாபத்தை இரண்டு மாதங்களில் கொடுக்கவே ஏப்ரலில் இணைந்த நண்பர்கள் அடுத்த மாதங்களில் வரும் போர்ட்போலியோவை தொடர்ச்சியாக கேட்கின்றனர்.

அதாவது மறைமுகமாக எமது பரிந்துரைகள் குறைந்த கால வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுவது நமது நோக்கத்தின் திசையை திருப்பி அனுப்பி விடுகிறது. அதற்கு பதிலாக தேவைப்படும் பங்குகளை மட்டும் எம்மிடம் பரிந்துரைகளாக கேட்கலாம்.

உண்மையில் சொன்னால், ஏப்ரல், மே மாதங்களைப் போன்று எல்லா மாதங்களும் மோடி அலையும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் எப்பொழுதுமே இந்த அளவு லாபம் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது.

தற்போது எந்த ஒரு தொழில் துறையும் வருடத்திற்கு 15% என்ற சராசரி விகிதத்திலே வளர்ந்து வருகிறது. அதில் நாம் தேர்ந்தெடுக்கும் பங்கு மிக நல்லதாக அமைந்தால் வருடத்திற்கு 25% மேல் லாபம் கொடுத்தாலே நல்ல பங்கு தான்.

பங்குச்சந்தையில் வர்த்தகத்திற்கும்(TRADING), முதலீட்டிற்கும்(INVESTMENT) உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வதன் மூலம் நம்மை மேலும் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.வர்த்தகம் என்பது அடிக்கடி கை மாறப்படுவது. அதாவது முழு நேரத் தொழிலாக செய்யப்படுவது. ஏற்கனவே நடைபெற்ற தொடர்ச்சியாக சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து வரையறுக்கப்படுவை.

இங்கு நிகழ்வுகள் தான் முக்கியமே தவிர, நிறுவனம் அந்த அளவு முக்கியம் இல்லை.

ஒரு கெட்ட செய்தி வருகிறது என்றால், இன்போசிஸ் என்ற பெரிய நிறுவனமும், கிங் பிஷர் என்ற திவாலான நிறுவனமும் ஒரே மாதிரியே பார்க்கப்படும்.

ஆனால் நிறுவன அடிப்படைகள் என்பது அதிக அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

கிட்டத்தட்ட வர்த்தகத்தை ஜோதிடம் போலும் சொல்லலாம்.

சிம்ம ராசிக் காரர்கள் எல்லாம் 'அம்மா' போல் கோபக்காரர்களாவே இருப்பார்கள் என்று பொதுவாக சொன்னால் அது எல்லா சிம்மக்காரர்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

அது போல் தான் தின வர்த்தகங்களுக்கான வரைபடங்களும் தீட்டப்படுகிறது.

ஒரு பங்கு மேலே சென்று மீண்டும் ஒரு குறுகிய காலத்தில் கரெக்சனுக்காக கொஞ்சம் கீழே வந்தால் அதனை வலது தோள்பட்டை, தலை, இடது தோள்பட்டை என்று ஏற்ற, இறக்கத்தில் வடிவமைத்து உள்ளார்கள்.

ஆக இங்கு இயற்கை நிதிப்படி மேலே அதிக உயரம் சென்ற எந்த ஒன்றும் நிலைப் பெறுவதற்காக கொஞ்சம் கீழே வந்து தான் தீர வேண்டும் என்ற தத்துவம் தான் முக்கியத்தில் உள்ளது.

ஆனால், ஒரு பொருள் சரியான விகிதத்தில் உயரே சென்றால் அதற்கு கரெக்சன் என்ற ஒன்று தேவையில்லாமல் போய் விடுகிறது. இங்கு இந்த தத்துவம் பொய்த்து விடுகிறது.

இதே போல் நிறைய நிகழ்வுகளும், தத்துவங்களும், செய்திகளும் தான் தினசரி வர்த்தகத்தின் முக்கிய காரணிகள்.

மேலே செல்ல செல்ல ரிஸ்க் குறைகிறது

ஆனால் முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு வாங்கிப் போடும் ஒரு சொத்து போன்றது.

சொத்தை வாங்கிப் போடுவதற்கு முன் அதிகம் யோசிக்க வேண்டும். நல்ல இடமா? பிற்காலத்தில் வளர்ச்சி இருக்குமா? என்று பல காரணிகளை ஆராய்வோம்.

வாங்கிய பிறகு பிறகு தினமும் சென்று அதன் விலை எப்படி உள்ளது என்று அறிய வேண்டும் தேவையில்லை.

ஒரு குறிப்பிட்ட நீண்ட  இடைவெளியில் அதன் மதிப்பை அறிந்து கொண்டால் போதும்.

அது போல் தான் நீண்ட கால பங்கு முதலீடு, முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் அடிப்படைகளும் எதிர்காலத் திட்டங்களும் பற்றி முதலில் நன்கு தெரிந்து ஆராய வேண்டும்.

அதன் பிறகு மூன்று மாதத்திற்கு பின் வரும் நிதி அறிக்கைகளை படித்தாலே போதும். நிறைய விடயங்கள் புரிந்து விடும்.

எப்பொழுது நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை கீழே செல்ல ஆரம்பிக்கிறதோ அப்பொழுது விற்று விடலாம்.

இங்கு குறுகிய கால நிகழ்வுகளும், சம்பந்தமில்லாத செய்திகளும் புறந்தள்ளப்படுகின்றன.

இந்த எளிமையின் காரணமாக வேலை செய்து கொண்டு பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த நீண்ட கால முதலீடே ஏற்றதாக உள்ளது.

கீழ் நாம் குறிப்படும் உண்மைகள் மேலும் தெளிவினைத் தரும்.

~ தினசரி வர்த்தகத்தில் உள்ளவர்கள் 15% வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒரு வருட காலத்திற்கு மேல் பங்குகளை வைத்து விற்றால் வரி கட்ட வேண்டிய தேவையில்லை.

- தினசரி வர்த்தகத்தை ஊக்கப்படுத்துபவர்கள் நீங்கள் ட்ரேடிங் கணக்கு வைத்துள்ள தரகர்களே. அப்பொழுது தான் அவர்களுக்கு அடிக்கடி கட்டணங்கள் கிடைக்கும்.

- பங்கு வர்த்தகத்தில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் வாரன் பப்பெட், ஜுன்ஜுன்வாலா என்று பலரும் நீண்ட கால முதலீட்டாளர்களாகவே மேலே வந்தவர்கள்.

இந்த பதிவில் நாம் தினசரி வர்த்தகத்தைக் குறை கூற முற்படவில்லை. ஆனால் தினசரி, நீண்ட கால வர்த்தகம் என்று இரண்டையும் கலந்து செய்து குழப்பிக் கொள்ள வேண்டாம்

அதனால் நாம் செய்யப்போகும் பங்கு முதலீடு எந்த வகை என்பதை தீர்மானித்த பிறகு முதலீடினைத் தொடருங்கள்!

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.


English Summary:
Trading is the short term buying and selling the stocks. Technical analysis is playing key role in Trading. Investment is the long term investing from the stocks fundamental analysis.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. அருமையான தகவல்..தினசரி வர்த்தகத்தில் உள்ளவர்கள் 15% வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில் ஒரு வருட காலத்திற்கு மேல் பங்குகளை வைத்து விற்றால் வரி கட்ட வேண்டிய தேவையில்லை. நான் செய்வது Swing Trade நாண்கு நாட்கள் வைத்திருப்பேன். பின்பு விற்று விடுவேன்.. இதற்கு வரி எவ்வளவு?

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் STCG வரி கட்ட வேண்டும். தோராயமாக 15% வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு