செவ்வாய், 10 ஜூன், 2014

ரியல் எஸ்டேட்டை விட பங்கு முதலீடு எப்படி சிறந்தது? (ப.ஆ - 18)

எல்லாருக்கும் முதல் ஆசை சொந்தமாக வீடு வைத்து இருப்பது.

வாடகை வீட்டில் இருந்து கொண்டு வீட்டு உரிமையாளருக்கு பயந்து கொண்டும், ஒவ்வொரு வருடமும் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடு வீடாக மாறுவதும் நரக வேதனை.


பணம் சம்பாதிப்பது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருப்பதற்கு தான். அதனால் முதல் வீடை வாங்காமல் இருப்பது தவிர்க்க இயலாதது.

ஆனால் அதன் பிறகு முதலீட்டிற்கு ரியல் எஸ்டேட் என்பதை மட்டும் சாராமல் பங்கு முதலீடு, நிலையான பத்திரங்கள் போன்றவற்றில் பரவலாக முதலீடு செய்யலாம். 

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
முதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 17)

தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையில் பங்கு முதலீடு என்பது ஒரு தீண்டத்தகாததாக அல்லது சூதாட்டமாக கருதப்படுகிறது. அதற்கு மாற்றான விவரங்களைக் கொடுக்கும் வகையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது.உதாரணத்திற்கு இன்று பெரு நகரங்களில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 40 லட்சம் தேவை. ஆனால் எல்லோ ரிடமும் அவ்வளவு பெரிய தொகை இருப்பதில்லை. அதற்காக வங்கி கடனுக்காகத் தான் செல்ல வேண்டி இருக்கும்.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பங்கு முதலீட்டின் 'Liquidity' முக்கியத்துவம் பெறுகிறது.

அதாவது நம்மிடம் இருக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் கூட நாம் பங்கு வாங்கலாம். அதன் பிறகு நமது முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முடியும். ஆனால் நிலங்களில் அப்படி செய்ய முடியாது.

அதே போல் எப்பொழுதும் பங்குகளை வாங்க முடியும். எப்பொழுதும் பங்குகளை விற்கவும் முடியும். ஆனால் நில முதலீட்டில் அப்படியல்ல. நேரம் என்பது மிக முக்கியம்.

வீடுகளை வாங்குவதற்கு தேவையான பத்திர செலவுகள் போன்றவற்றை பங்கு முதலீட்டில் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அதை விட முக்கியமாக தேவையில்லாமல் அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தேவையில்லை.

நிலம் வாங்குவதில் புரோக்கர், பில்டர் என்று ஏராளமான இடை மனிதர்களைத் தாண்டியே வாங்க வேண்டி உள்ளது. இதனால் சொத்துகளுக்கான நம்பகத்தன்மையை பெறுவது மிகக் கடினம்.

ஆனால் பங்குகளை வாங்கும் போது நிறுவனங்களைப் பற்றிய தகவல்கள் மிக நன்றாகவே இணையங்களிலும் பொதுவிலும் கிடைக்கப் பெறுகிறது. இதனால் ஓரளவு வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

எளிதாக இருந்த இடத்தில இருந்து கொண்டே நமது பங்குகளின் நிலையை பார்க்க முடியும். இணையத்தில் இருந்த இடத்திலே பங்குகளை வாங்கவும், விற்கவும் செய்யலாம். ஆனால் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் நேரடி கண்காணிப்பு என்பது அவசியமாகிறது.

பொதுவாக நிலங்களின் மதிப்பீடலை செய்வது மிகக் கடினம். ப்ரோக்கர்கள் தான் விலை நிர்ணயம் செய்பவர்கள். பெரும்பாலும் விலை என்பது சொத்துக்கள் கைகளில் மாறப்படுவதன் அடிப்படையிலே இருக்கிறது.

ஆனால் பங்குகளில் நிரூபணம் செய்யப்பட ஏராளமான மதிப்பீடல் முறைகள் உள்ளன. அதனால் பங்கு சரியான விலையில் உள்ளதா என்பதை கணக்கீடுகளில் கண்டுபிடித்து விடலாம்.

பங்கு முதலீட்டில் ஒரு வருடத்திற்கு மேல் முதலீடு செய்து இருந்தால் வரி கட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் மற்ற சொத்துக்களில் மூன்று வருடங்களில் விற்று விட்டால் வரி கட்ட வேண்டி இருக்கும்.

இந்தக் காரணங்களால் பங்கு முதலீடு எளிதாகவும், அதிக வருமானம் தருவதாகவும் உள்ளது.

ஆனால் பங்கு முதலீட்டிற்கு அதிக அளவு அனுபவ அறிவும், புத்தக அறிவும் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டம் எளிதில் ஏற்பட்டு விடும். ஆனால் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமல்ல. சொத்துக்களை வாங்குவதற்கு இந்த அளவு அனுபவமும், அறிவும் தேவையில்லை.

இந்த சூழ்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான வாரன் பப்பெட் அவர்களின் ஒரு கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

பப்பெட் அவர்களிடம் சொந்த வீட்டைத் தவிர வேறு சொத்துக்கள் கிடையாது.

ஒரு நாள் "நீங்கள் ஏன் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வில்லை?" என்று ஒரு நிருபர் பப்பெட்டிடம்  கேட்டதற்கு

"பங்குகளை எளிதாக வாங்கும் வாய்ப்புகள் உள்ள போது நான் ஏன் கஷ்டப்பட்டு அசையா சொத்துக்களை வாங்க வேண்டும்?" என்று கேட்டாராம்.

அது நமக்கும் பொருந்தலாம்.

நம்ம ஊர்க்காரர் ஒருவர் கோடீஸ்வரரான கதையும் பல மாதங்கள் முன் பதிவாக எழுதி இருந்தேன். அதையும் படித்துப் பாருங்கள். நாமும் கோடீஸ்வரராவது தொலைவில் இல்லை என்பது புரியும்.
வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்

நாம் ரியல் எஸ்டேட்டை முழுமையாக ஒதுக்கச் சொல்வதில்லை. ஆனால் பரவலாக முதலீடு செய்யலாம்  என்பது தான் கட்டுரையின் மையக் கருத்து.

அடுத்து எமது சொந்த அனுபவத்தில் ரியல் எஸ்டேட், பங்கு முதலீடு முதலீடுகளின் கிடைத்த லாபங்களை பற்றி ஒரு ஒப்பீடு செய்கிறோம். மேலும் தெளிவுப்படுத்த உதவும்.

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.

பிளாட் வாங்குவது அவ்வளவு லாபமா? (ப.ஆ - 19)


English Summary:
Share markets are more risky than real estate investments. But high liquidity and higher returns are attracting in share market. Diversifying investments is the best solution for optimizing risk and returns.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக