திங்கள், 30 ஜூன், 2014

பட்ஜெட்டை நோக்கி பங்குச்சந்தை

நமக்கு வரும் மின் அஞ்சல்களில் ஒரு நண்பர் சந்தை அடுத்து 22,000 க்கு செல்லும் என்கிறார். இன்னொருவர் 28,000க்கு செல்லும் என்கிறார்.

அந்த அளவிற்கு துல்லியமாக கணிக்க முடியமா என்று தெரியவில்லை. ஆனால் சில காரணிகளை பட்டியலிடுகிறோம். அதிலிருந்து யூகமாக தெரிந்து கொள்ள முயலுவோம்.


அடுத்த சந்தையின் நகர்வு பட்ஜெட்டை நோக்கி உள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதுவரை அலை போல மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டே இருக்கும் என்று தெரிகிறது.

இந்த வருட பட்ஜெட் என்பது அடுத்த ஐந்து வருடங்களுக்கு செல்லும் திசையைக் கொடுப்பதாக அமையும் என்பதால் மிக முக்கியத்துவம் பெறுகிறது.


அவசரத்தில் ஏதோ குத்து மதிப்பாக முதலீடு செய்யாமல், பட்ஜெட்டை படித்து பயன் பெறும் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.

மோடி அரசு நினைத்து இருந்தால் சில முடிவுகளை தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110ன் கீழ் போல,  பட்ஜெட்டில் சேர்த்து கவர்ச்சியாக மாற்றி இருக்கலாம்.

ஜெட்லி மனசுல என்ன இருக்குதோ?
ஆனால் விரைந்து முடிவெடுப்பதற்காக சில முடிவுகளை முன்னரே அறிவித்து உள்ளார்கள். இது மிக நல்ல செயல்பாடு..

நாம் ஏற்கனவே பதிவில் குறிப்பிட்டது போல் சுகர் நிறுவனகளுக்கு கொடுத்துள்ள சலுகைகள் நீண்ட கால நோக்கில் அந்த நிறுவனங்களுக்கு அதிக பயன் தருபவை.

அது போல, தொய்வில் இருக்கும் ஆட்டோ துறைக்கு சிதம்பரம் சில வரி சலுகைகளை அளித்து இருந்தார். கடந்த ஜூன் 30 அன்று இந்த வரிச்சலுகைகள் காலாவதியானதை தொடர்ந்து, பட்ஜெட் வரை காத்திராமல் உடனடியாக புதிய அரசு நீட்டிப்பு வழங்கியுள்ளது.

ஆனால் இந்த வருடம் ஆட்டோ துறைக்கு பருவமழை என்ற ஒன்று கடின காலத்தை கொடுக்கவிருக்கிறது. கடந்த முறையை விட 42% மழை குறைவாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

அப்படி இருந்தால், ட்ராக்டர் போன்ற கனரக வாகன விற்பனை கடுமையாக பாதிக்கப்படும். அது போல் பணவீக்கத்தின் காரணமாக வங்கி கடன் விகிதங்களிலும் மாற்றம் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மழையின்றி உலகம் அமையாது என்று சொன்ன வள்ளுவரைத் தான் நினைக்க வேண்டியுள்ளது.

அடுத்து, அனைவருக்கும் வீடு என்ற பிஜேபி பிரசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியானால் ரியல் எஸ்டேட் முக்கியத்துவம் பெறும். இப்படி ஒரு சூழ்நிலை வரும் நிலையில் பெரிய ப்ரோஜெக்ட்களில் ஈடுபடும் நிறுவனங்களைக் காட்டிலும் டைல்ஸ், மார்பிள்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எமது சாய்ஸ்.

நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்கனவே அதிக அளவு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். எல்லாம் வட மாநிலங்களைக் குறி வைத்து உள்ளதால் அங்கு பயன் பெறும் நிறுவனங்களைப் பார்த்து முதலீடு செய்யலாம்.

12,000 கோடிக்கு புதிய மின் வழித் தடங்கள் தொடர்பான திட்டங்கள் சொல்லியுள்ளதால் Power Grid நிறுவனமும் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்படி பயன் பெறும் நிறுவனங்களை அடையாளம் கண்டு முதலீடு செய்யுங்கள்!

இன்று தருவோம் என்று சொன்ன எமது ஜூலை போர்ட்போலியோவை நண்பர்கள் திட்டமிடுவதற்க்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியிட்டு விட்டோம். நல்ல ரெஸ்போன்ஸ்! நன்றி..

இந்த வாரம் வரை அந்த போர்ட்போலியோவை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறோம். அல்லது எப்பொழுது 2% உயர்வை தாண்டி விடுகிறதோ அப்பொழுது நிறுத்தி விடுகிறோம்.

தொடர்பு முகவரி: muthaleedu@gmail.com

English Summary:
Indian share market is more looking towards Union Budget.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக