புதன், 16 ஜூலை, 2014

உலக வங்கியின் ஆளுமையைக் குறைக்கும் பிரிக்ஸ் வங்கி

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவிற்கு பிறகு அந்த நாடுகளை சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் உலக வங்கி. பெயரில் தான் உலகம் என்று இருக்கிறதே தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தது.


பழைய படங்களில் பார்திருப்போம். ஜமீன்தார் தன்னிடம் வேலை பார்க்கும் விவசாயிகளுக்கு கடன் கொடுப்பார். ஆனால் கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது சந்தோசப் படமாட்டார். ஏனென்றால் அவருடைய எண்ணம் அந்த கடனை வைத்து விவசாயியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது ஆகும்.

அது போல் தான் உலக வங்கி செயல்பட்டு வந்தது.கடனைக் கொடுத்து வட்டியை பெறுவது தான் அதனுடைய எண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக கடனைக் கொடுத்து, நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்கும் தேவையற்ற நிபந்தனைகளை விதித்து வந்தது. அந்த கடன் மூலம் மேற்கு நாடுகளின் கொள்கைகளைத் திணித்து வந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் NTPC நிறுவனத்தின் பங்கு மதிப்பு 250க்கு அருகில் இருந்தது. ஆனால் தற்போது 140ல் உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் வெப்ப மயமாதலைக் காட்டி உலக வங்கி புதிய மின் திட்டங்களுக்கு குறுக்கீடு செய்தது. அதனால் NTPC நிறுவனத்தால் புதிய திட்டங்களைத் தொடங்க முடியவில்லை. இதே போல் பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தது.

வளரும் நாடுகளும் உணவிற்காகவே உலக வங்கியிடம் கை ஏந்தும் நிலை இருந்து வந்ததால் பண்ணையார் கையில் அகப்பட்ட விவசாயி நிலையில் தான் இருந்தார்கள்.

ஆனால் தற்போது வளரும் நாடுகள் மேற்கு நாடுகளுடன் போட்டி போடும் அளவு நிலைமை சென்று விட்டது. இதனால் ஏற்பட்ட மாற்றமே பிரிக்ஸ் (BRICS) வங்கி.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் தற்போது இணைந்து ஒரு குழுவாக செயல்பட ஆரம்பித்துள்ளன. அவர்களால் கொண்டு வரப்பட்ட ஒரு மிக நல்ல திட்டமே பிரிக்ஸ் வங்கி.

இந்த வங்கியில் பொருளாதார தேக்கங்கள் வரும் போது பயன்படுத்துவதற்கு தக்க ஒரு அவசர கால நிதி உருவாக்கபப்டுகிறது. அதில் 100 பில்லியன் டாலர் அளவு இருப்பு வைக்கப்பட்டு இருக்கும். அதாவது நமது மதிப்பில் சொன்னால் 6 லட்சம் கோடி ரூபாய்.

இவ்வளவு தொகை என்பது மிகப் பெரியது தான்.. ஆனால் உலகின் பாதி மக்கள் தொகையும் கொண்டு, 20% பொருளாதரத்தில் பங்களிக்கும் வளரும் நாடுகளால் இது சாத்தியமே.

இந்த தொகையில் 41 பில்லியன் சீனாவும், 18 பில்லியன் பிரேசில், ரஷ்யா, இந்தியா, போன்ற நாடுகளும் 5 பில்லியன் தென் ஆப்ரிக்காவும் வழங்கும்.

இந்த நாடுகள் தங்களது முதலீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கத் தேவையில்லை. 2 பில்லியனை மட்டும் பணமாக வழங்கினால் போதும். மற்றவற்றை தங்கள் நாட்டு ரிசரவ் கரன்சியாகவே வைத்துக் கொள்ளலாம்.

எல்லா நாடுகளுக்கும் சம உரிமையும் வழங்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் வற்புறுத்தாலலே வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சீனாவின் ஆளுமை குறையும்.

இந்த புதிய வங்கி "New Development Bank" என்று அழைக்கப்படும். இதில் புதிய நாடுகளும் இணைந்து கொள்ளலாம். ஆனால் நிர்வாகம் பிரிக்ஸ் நாடுகளிடமே இருக்கும் வகையில் 55% பங்குகள் அவர்களிடம் இருக்கும்.

இந்த முயற்சியைத் தடுக்க மேற்கு நாடுகள் கடினமாக முயலும். அதனை எதிர்கொண்டு பிரிக்ஸ் நாடுகள் ஒற்றுமையாக இருந்தால் இந்த நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய மாற்றமாக அமைய வாய்ப்புள்ளது.

உக்ரைன் பிரச்சனை காரணமாக ரஷ்யா அமெரிக்கா அல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்க முயன்றுள்ளது. அதனால் எண்ணெய் வளங்களையும் பகிருந்து கொள்ளலாம் என்ற யோசனையைக் கூறியுள்ளது. இது இந்தியா, சீனாவை பொறுத்தவரை மிகவும் பயனளிக்கும் விடயம். இப்படியொரு மாற்றம் ஏற்படுமாயின் டாலரின் ஆதிக்கம் கணிசமாக குறைக்கப்படும்.

ஆக, அங்க அங்க நடக்கிறதெல்லாம் நமக்கு சாதகமாகத் தான் இருக்கிறது.

90களில் கோதுமை இறக்குமதி செய்வதற்காக தங்கத்தை அடமானம் செய்த இந்தியா இன்று மற்ற நாடுகளுக்கு கடன் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது மகிழ்வைத் தருகிறது.


English Summary:
BRICS bank replaces the power of World Bank. India, China, Russia are aggressively promoting BRICS bank which helps to growth of developing countries by providing capital loans.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக