புதன், 2 ஜூலை, 2014

சாஸ்கென் நிறுவனத்திற்கு கிடைத்த 185 கோடி

சில வருடங்களுக்கு முன்னர் மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாக இருந்த நிறுவனம் சாஸ்கென்(SASKEN).

இந்திய மென்பொருள் அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு இடையே ஒரு தனித்தன்மையுடன் செயல்பட்டு வந்த இந்திய நிறுவனம்.

இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களைப் பொறுத்த வரை மென்பொருள் வல்லுனர்களை தங்கள் நுகர்வோர் நிறுவனங்களுக்கு அனுப்பி 'தலைக்கு இவ்வளவு வீதம்' என்று வசூலித்து விடுவார்கள்.

185 கோடி !!!!

வேறு விதமாக சொன்னால், இந்தியாவில் இருந்து மென்பொருளை ஏற்றுமதி செய்யாமல் மென்பொருள் வல்லுனர்களை ஏற்றுமதி செய்து வந்தார்கள்.

அந்த காலக் கட்டத்தில் டெலிகாம் தொடர்பான நிறுவனங்களுக்கு உரிமம் சார்ந்த மென்பொருள்களை தயாரித்து வழங்கும் பணியை சாஸ்கென் நிறுவனம் செய்து வந்தது.

ஆனால், டெலிகாம் என்று மட்டும் தங்கள் வெளியை மட்டுப்படுத்திக் கொண்டதால், டெலிகாம் துறை வீழ்ச்சியை சந்தித்த பிறகு நிறுவனமும் வீழ்ச்சி அடைந்தது.

அதாவது, 500 ரூபாய்க்கு வர்தகமாகிக் கொண்டிருந்த சாஸ்கென் பங்கு 50 ரூபாய்க்கு வந்தது.

அதன் பிறகு தான் தங்கள் மென்பொருள் வெளியை காப்பீடு, ரீடைல் என்று மாற்றத் தொடங்கினார்கள்.

அனுபவம் வாய்த்த நிர்வாகத்தைக் கொண்டிருந்ததால் எமக்கும் அது ஒரு பிடித்தமான பங்கு. நமது வாசகர்களுக்கு பரிந்துரை செய்யலாம் என்றால், இன்னும் அதிக அளவு தரவுகள் தெரிய வேண்டி உள்ளது. அதனால் வெயிட்டிங் லிஸ்டில் வைத்து இருந்தோம்.

தற்போது அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம்.

முன்னர் சொன்னது போல், உரிமம் சார்ந்த மென்பொருளை விற்பனை செய்வது சாஸ்கென் நிறுவனத்தின் முக்கிய பணியாக இருந்தது.

உரிமம் சார்ந்த மென்பொருள் என்பதை எமது அனுபவத்தில் ஒரு எளிய விளக்கமாக கூறுகிறோம்.

முன்னர் LG நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது தெரிந்த அனுபவம். LG மூலம் விற்பனையாகும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 1$ என்ற தொகை BNSoft என்ற நிறுவனத்திற்கு சென்று விடும்.

அதாவது, BNSoft நிறுவனம் முக்கியமான மென்பொருளை தயார் செய்து கொடுத்ததால் லாபத்தின் ஒரு பகுதியை Royalty என்ற பெயரில் கொடுத்து விட வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இதே போல் தான் சாஸ்கென் நிறுவனம் Spreadtrum என்ற நிறுவனத்திற்கு உரிமம் சார்ந்த டெலிகாம் மென்பொருளை வழங்கியுள்ளது. அதற்கு 2012 வரை ராயல்டி கொடுத்து வந்த Spreadtrum அதன் பிறகு நிறுத்தி விட்டது.

இதனை அமெரிக்க நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற சாஸ்கென் நிறுவனம் தற்போது ராயல்டியுடன் சேர்த்து வட்டியையும் இழப்பீடாக பெற உள்ளது. இது 31 மில்லியன் அமெரிக்கா டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனாலும் சாஸ்கென் நிறுவனத்திற்கு Spreadtrum நிறுவனம் அந்த மென்பொருளைப் பயன்படுத்தி எவ்வளவு விற்பனை செய்தது என்று இன்னும் சரிவர தெரியாமல் உள்ளதால் இதை விட தொகை அதிகமாக செல்லவும் வாய்ப்பு உள்ளது.

இது தொய்வில் சென்ற அந்த நிறுவனத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதனால் ஒரே நாளில் சாஸ்கென் 20% வரை சென்றது.

இன்னும் சாஸ்கென் நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த முழு தகவல்கள் சரி வர தெரியாததால் பங்கினை பரிந்துரைக்க முயலவில்லை.

இனி ஆள் பிடித்துக் கொடுக்கும் வேலையை விட இத்தகைய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தான் மென்துறையில் இனி கோலோச்சும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary:
Sasken got the surprise gift worth of Rs.1850 Crore on Royalty


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக