செவ்வாய், 15 ஜூலை, 2014

பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் பிரிவினருக்கான வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பலனைத் தருகிறது.

இந்த பதிவில் முதலில் என்னனென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு எப்படி பயன்படுத்தலாம் என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம்.

சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் கரிசனை
காட்டி இருக்கிறார்கள் 

இவ்வளவு நாள் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வருமானம் வந்தாலே வரி கட்ட வேண்டும். இனி 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே வரி கட்ட வேண்டும். இதனால் 10% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 5000 ரூபாயும், 20% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 10000 ரூபாயும், 30% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 15000 ரூபாயும் வருடத்திற்கு சேமிக்கலாம்.


இதே போல், மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விளிம்பு 2.5 லட்சமாக இருந்து வந்தது. இது 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சில முதலீடு மற்றும் சேமிப்புகளுக்கு இது வரை ஒரு லட்ச ரூபாய் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த வரம்பு தற்போது ஒன்றரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. NSC, PPF, EPF, ELSS Mutual Fund, Insurance போன்றவற்றில் ஒன்றரை லட்சம் முதலீடு செய்வதன் மூலம் வரியை சேமிக்கலாம்.

ஆக, வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டதாலும் தகுந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு இந்த பட்ஜெட் மூலமாக அதிகபட்சம் 30000 வரை பலன் கிடைக்கிறது.

கடைசி நிமிடத்தில் அங்கும் இங்கும் ஓடுவதற்கு பதிலாக தற்போதே திட்டமிட்டால் முறையாக 30000 வரை உங்களால் சேமிக்க முடியும்! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இனி ஒரு உதாரணத்தோடு விளக்கமாக பார்ப்போம்..

பட்ஜெட்டிற்கு பின்..

கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

அப்படி என்றால் தற்போதைய புதிய முறைகளின் படி, அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை     -   96,000 (12*8000)
80c முதலீடு    -  1,50,000 (NSC, PPF, EPF, ELSS, etc)
மொத்தம்   - 2,46,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000  - 2,46,000 = 9,54,000

இந்த நிகர வரி வருமானம் 9,54,000 என்பதை 2,50,000 + 2,50,000 + 4,54,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,
 • முதல் 2.5 லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,50,000 தொகைக்கு 0 ரூபாய்
 • 2.5 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 2,50,000 தொகைக்கு 25,000 ரூபாய்
 • 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 4,54,000 தொகைக்கு 90,800 ரூபாய்
 • 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அந்த வரம்பிற்குள் வருமானம் வராததால் 0 ரூபாய்.

ஆக மொத்த வருமான வரி = 0 + 25,000 + 90,800 + 0 = 1,15,800

அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,15,800 ரூபாய் வருமான வரியாக  செலுத்த வேண்டும்.

பட்ஜெட்டிற்கு முன்..

கணேசன் அதே சம்பளமும், அதே வீட்டு வாடகையும் கொடுக்கிறார். ஆனால் அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்யலாம்.

அப்படி என்றால் பழைய முறைகளின் படி கீழே உள்ளவாறு வருமான வரியைக் கணக்கிடலாம்.

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை     -   96,000 (12*8000)
80c முதலீடு    -  1,00,000
மொத்தம்   - 1,96,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000  - 1,96,000 = 10,04,000

இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்வோம்.

இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,

 • முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்
 • 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்
 • 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்
 • 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்

மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000

பட்ஜெட்டிற்கு முன் வருமான வரி 1,32,000 என்று வருகிறது. ஆனால் பட்ஜெட்டிற்கு பின், கணேசனது வருமான வரி 1,15,800 என்று வருகிறது.

ஆக, அருண் ஜெட்லி பட்ஜெட்டால் கணேசன் 16,200 ரூபாய் வருடத்திற்கு சேமிக்க முடியும்.  

English Summary:
<!–- google_ad_section_start -–> The union Budget gives the benefit of Rs.30000 per year to salaried employees as tax exemption. Public can save more money on pension and insurance schemes.
<!–- google_ad_section_end -–>
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

 1. ஆகக் கூடி ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவரின் ஒரு மாத வீட்டுச் செலவு 16500 என்கிறீர்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு செலவுக்கு பயன்படுத்தலாம் என்பது தான் எமது நோல்க்கம்..எனினும் அந்த வரி எடுக்கப்பட்டு விட்டது! நன்றி!

   நீக்கு
 2. மாதச் சம்பளதாரர்களுக்கு உண்மையிலேயே ஒரு பயனுள்ள சலுகை. முறையாக வருமான வரி கட்டுபவர்கள் அவர்கள்தானே!.பிப்ரவரி மாதம் சம்பளமே வாங்க முடியாத அரசு ஊழியர்கள் நிறைய பேர் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே! இது பயனுள்ள சலுகை தான்..நீங்கள் கூறிய பிப்ரவரி சம்பள நிலைமையும் முற்றிலும் உண்மை..

   நீக்கு