சனி, 19 ஜூலை, 2014

பதற்ற பூமிகளால் தவிர்க்க வேண்டிய பங்குகள்

இஸ்ரேல் காசாவில் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் உள்ளூர் பிரச்சினைகளில் ஒன்றுமே தெரியாமல் வானில் சென்ற உயிர்கள் பலி வாங்கப்படுகின்றன. அரசியலும், நாட்டின் எல்லைகளும் உண்மையிலே அவசியம் தேவைதானா? என்று  நினைக்க வைக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

சாதாரண மக்களை மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையிலும் அவ்வப்போது இந்த பிரச்சினைகள் எட்டிப் பார்த்து தான் செல்கிறது.

உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு நேற்று சந்தை ஆரம்பத்தில் சரிவில் ஆரம்பித்தது. அதன் பிறகு மீண்டும் உயரத்திற்கு வந்தது.


ஆனால் போர் பதற்றங்கள் இன்னும் தணியாமலே உள்ளது என்பதையும் கவனிக்க. இராக், இஸ்ரேல் பிரச்சினைகள் இன்னும் உச்ச நிலைக்கு சென்றால் கச்சா எண்ணைய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீண்டும் பெட்ரோல் விலைகள் ஏற்றப்படும் போது பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்க்காகவும், ஏற்கனவே அரசு பெட்ரோல், எரிவாயு விலைகளை கணிசமாக கூட்டியுள்ளதாலும் மீண்டும் எண்ணெய், எரிவாயு விலைகள் அதிகரிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

அந்த சமயங்களில் நஷ்டங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் தலையிலே கட்டப்படும். அதனால் தற்போதைய சூழ்நிலையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் பெட்ரோலிய விநியோக நிறுவனங்களைத் தவிர்த்து விட்டு உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை வாங்கிப் போடலாம்.

அடுத்து, உக்ரைன் பிரச்சினைகளால் உக்ரைன், ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து துறை நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு நேரடியாக சில அழுத்தங்கள் ஏற்படலாம்.

அதே போல் மருந்து விலை கட்டுப்பாடு கொள்கை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த கொள்கையின் படி, பல அத்தியாவிச மருந்துகள் விலை 60% வரை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மருந்து நிறுவனங்களுக்கு லாபம் 5% வரை குறைய வாய்ப்புள்ளது.நீதி மன்றத்தில் வழக்கு மருந்து நிறுவனங்களுக்கு சாதகமில்லாமல் வரும் பட்சத்தில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் சில நாட்கள் கடுமையான இறக்கங்களில் காணப்படும். ஆனால் மருந்து நிறுவனங்கள் இல்லாமல் ஒரு போர்ட்போலியோவை வைத்திருப்பது மிக கடினம். அத்தகைய இறக்க நிலைமைகளை வாங்கும் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நேரத்தில் இன்போசிஸ், டிசிஸ் நிறுவனங்கள் நிதி அறிக்கைகள் வெளிவந்து மென்பொருள் பங்குகளை மேலே கொண்டு செல்கின்றன. போர் பதற்றங்கள் மேலும் தொடரும் வேளையில் ரூபாய் மதிப்பில் குறைவு ஏற்படும். அதுவும் சாப்ட்வேர் பங்குகளுக்கு சாதகமாக இருக்கும்.

அடுத்து HCL நிறுவனத்தின் நிதி அறிக்கையை எதிர்பார்த்து உள்ளார்கள். நன்றாக இருக்கும் சமயங்களில் HCL பங்குகள் மேலும் 10% வரை உயரலாம்.

இந்த சூழ்நிலையில் எந்த வல்லரசும் போருக்கு தயாராகவில்லை அல்லது போரை விரும்பவில்லை என்பது தான் நம்மிடம் இருக்கும் ஒரே சாதகமான விஷயம்.

English Summary:
The war tension makes fluctuation in share market.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக