ஞாயிறு, 20 ஜூலை, 2014

இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்

திருட்டை ஒழிக்க திருடன் திருந்த வேண்டும் அல்லது ஏமாறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையிலும் இது மிகவும் பொருந்தும். அதனால் தான் பங்குச்சந்தை ஊழல்கள் மற்றும் மோசடிகளை பற்றி அடிக்கடி நாம் எழுதுவதற்கு காரணம்.

இதற்கு முன், சஹாரா மோசடி,  AstraZeneca ஏமாற்றல்,  NSEL மோசடி  என்ற தலைப்புகளில் எழுதி இருந்தோம். அந்த வரிசையில் இந்த முறை 'சத்யம் ஊழல்'.

கடந்த வாரம் சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ உட்பட ஐந்து பேருக்கு 1500 கோடி அளவிற்கு நீதி மன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களது மோசடிகளின் விளைவுகள் பணம், அபராதம் என்றவற்றையும் தாண்டி ஒட்டு மொத்த இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை உலக அளவில் பாதித்தது.



எளிதாக புரிவதற்காக ஒரு நிகழ்வைத் தருகிறோம்.

எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் அண்ணன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். சில வருடங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தார். ஆனாலும் தனது மனைவி முன் உண்மைய சொல்லாமல், பெருமைக்காக இன்று இவ்வளவு கூடியது, இவ்வளவு வருமானம் கிடைத்தது என்று பொய்களை சொல்லி வந்தார்.

அந்த நஷ்டதை ஈடுகட்ட வெளியில் கடும் வட்டியில் கடன் வாங்கி வீட்டு செலவோடு அல்லாமல் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்து வந்தார். அவர் முதலீடு செய்தது 2008ம் ஆண்டில். அவரோட அதிர்ஷ்டம் இல்லாத நிலைமை முதலீடு செய்த சில மாதங்களில் 19000 புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 8000 வரை வந்து சென்றது. அதனால்  கடன் வாங்கி முதலீடு செய்ததும் கரைந்து போனது.

அந்த நிலையில் அவரது மொத்தக் கடன் 40 லட்சம். வேறு சொத்துக்களும் இல்லாததால் கடன் பிடி இறுக, இறுதியில் தற்கொலை முயற்சிக்கு செல்லும் போது அது தடுக்கப்பட்டது.

இது கற்பனைக் கதை அல்ல. உண்மையானதே.. பங்குவர்த்தகத்திலும் லாட்டரி வாங்குவதிலும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.. அதாவது ஆசையிலிருந்து பேராசைக்கு மாறும் போது நடப்பவை.

இதே போல் தான் சத்யம் நிறுவனரின் வாழ்க்கையில் நடந்தது.

அவர் செய்த மோசடிகளால் அவருக்கு கடைசி வரை பலன் கிடையாது. தான் வளர்த்த நிறுவனம் அதிகம் லாபம் சம்பாதிக்கிறது என்று வெளியில் பேசப்பட வேண்டும் என்பதற்காக செய்த சில காரியங்கள் தான் கோபுரத்தில் இருந்த அவரை கீழே இறக்கி விட்டு சிறையிலும் அடைத்தது.

ஹார்வேர்டில் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த ராஜூ வெறும் 20 பணியாளர்களைக் கொண்டு சத்யம் நிறுவனத்தை ஆரம்பித்து ஒரு கட்டத்தில், 2004ல் FORTUNE 500 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார்.

ஆனால் அதன் பிறகு அந்த பெயரைத் தக்க வைப்பதற்காக அவர் செய்த சில முயற்சிகள் தான் அவரை படு பாதாளத்தில் தள்ளி விட்டன.

நிதி அறிக்கை - உண்மையும் பொய்யும் 

தமக்கு போட்டியாக உள்ள மென்பொருள் நிறுவனங்களை விட சத்யம் அதிகம் சம்பாதிக்கிறது என்று வெளியில் காட்டுவதற்காக போலி இன்வாய்ஸ்களை தயாரித்தார். அப்படிக் கூடுதலாக வந்த இல்லாத வருமானத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து இருப்பதாகக் கூறினார். அதற்காக போலி வங்கி அறிக்கைகளைத் தயார் செய்தார்.

அந்த அறிக்கைகளில் கணிசமான பணம் வங்கி பிக்ஸ்ட் டெபொசிட்களில் இருப்பதாகக் கூறினார். ஆனால் வருமானம் உயர வேண்டும் என்றால் அதற்கு தக்க பணியாளர்களும் அதிகரிக்க வேண்டும். அதனால் இல்லாத 13,000 போலி பணியாளர்களைக் காட்டினார்.

நிதி அறிக்கைகளில் EPS மதிப்பு அதிகரித்துக் காட்டப்பட்டது. இதனால் P/E மதிப்பு குறைந்து நல்ல நிறுவனம் என்று காட்டியது. இதனால் முதலீட்டாளர்களும் வருமானம் அதிகரித்துள்ளது என்று நம்பி சத்யம் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இப்படி எதிலும் போலி என்று ஏழு வருடங்கள் தொடர்ந்து செய்ய பாலன்ஸ் சீட்டில் 7200 கோடி துண்டு விழுந்தது. இவ்வளவு நிகழ்வுகளுக்கும் புகழ்பெற்ற ஆடிட்டிங் நிறுவனமான PWCயும் உடந்தையாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் என்ன செய்தால் தப்பலாம் என்று யோசிக்க, மதிப்பே பெறாத தனது மகன்கள் நடத்தும் MAYTAS நிறுவனத்தை 7500 கோடி கொடுத்து சத்யம் நிறுவனம் வாங்கும் என்று அறிவிக்கவே, விஷயம் வெளியில் தெரிய வர ஆரம்பித்தது.

மென்பொருள் துறையில் உள்ளவர், ஏன் சம்பந்தமே இல்லாத ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வாங்க வேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த திட்டமும் தோல்வி அடைந்தது.

இவ்வாறு நிலைமை கை மீறி சென்றது. அதனால் வேறு வழியின்றி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதன் பிறகு சில நாட்களிலே 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த சத்யம் பங்கு 6 ரூபாய்க்கு சென்றது. 80%க்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.



இந்த கடுமையான இழப்பின் காரணமாக பல முதலீட்டாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது போக இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை உலக அளவில் குறைந்தது.

அந்த சமயத்தில் கடுமையான பொருளாதார தேக்கம் வேறு. இதனால் இந்திய பொருளாதாரம் நான்கு வருடங்கள் பாதிக்கப்பட ராமலிங்க ராஜும் ஒரு காரணமாக இருந்தார்.

இவ்வாறு விளைவுகள் தனிப்பட்ட மனிதனுக்கு என்று இல்லாமல் ஒரு பெரிய நாட்டிற்கே பாதிப்பை ஏற்படுத்தியது.

எமது முந்தைய பதிவுகளில் P/E மதிப்பை அடிப்படையாக வைத்து பங்குகளின் மதிப்பை எப்படிக் கணக்கிடுவது என்று சொல்லி இருந்தோம். ஆனால் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் நினைத்தால் P/E மதிப்புகளையே மாற்றி விட முடியும் என்பதை விளக்கவே இந்த கட்டுரையை விரிவாக எழுதினோம்.

ஆதலால் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் நிர்வாகத்தையும், அதன் செயல்பாடுகளையும் அதிக அளவில் ஆராய வேண்டும். நம்பகத் தன்மை என்பது மிக முக்கியமானது.

அதிலும் பென்னி பங்குகளில் முதலீடு செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், பல நிறுவனங்கள் உண்மையான நிலவரத்தையே செபிக்கு கொடுப்பதில்லை.

English Summary:
Satyam scam impacts the loss of hopes on Indian Corporate Companies.

English Summary:
Satyam scam is the biggest scam in Indian share market during 2007 recession time. The scam impacts the loss of confidence in Indian IT Companies. The fake profit statements made Earning per share value artificially high.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக