செவ்வாய், 29 ஜூலை, 2014

பங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப.ஆ - 25)

இன்று 'பங்குச்சந்தை  ஆரம்பம்' தொடரின் பகுதியாக நிறுவன நிதி அறிக்கைகளில் வரும் 'DEPRECIATION'  என்ற பதத்தைப் பற்றி பார்ப்போம்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின்  முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
புதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ - 24)

நிதி நிலை அறிக்கைகளைப் புரிந்து கொள்வதற்கு அந்த சொற்களின் அர்த்தங்களையும் புரிந்து கொள்வது தேவையாக உள்ளது. இது கொஞ்சம் போரடிக்கும் விஷயம். ஆனால் தெரிந்து கொள்வது அவசியம். அதனால் தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது இடைச் செருகலாக இந்த மாதிரியான பதிவுகளை இணைக்கிறோம்.



DEPRECIATION என்பதன் தமிழ் அர்த்தத்தை 'மதிப்பு குறைதல்' என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சில பொருட்கள் அதன் மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும். இந்த இழப்பைத் தான் depreciation என்று குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இன்றைக்கு வாங்கும் மொபைல் ஒரு வருடம் கழித்து விற்றால் பாதிக்கும் குறைவான மதிப்பு கிடைப்பது அரிது. இது உராய்வால் பாதிக்கப்படும் மெக்கானிகல் இயந்திரங்களுக்கும் பொருந்தும். 

ஆனால் நிதி அறிக்கைகளில் பயன்படுத்தும் போது depreciation மதிப்பை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? அது ஒவ்வொரு நிதி அறிக்கைகளில் எவ்வாறு எதிரொலிக்கிறது? என்பது தான் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் நமது தேவையாக உள்ளது.

அதற்கு ஒரு எளிமையான உதாரணத்தை எடுத்துக் கொள்ளவும்.

உதாரணத்திற்கு கணிப்பொறி சம்பந்தமான ஒரு நிறுவனத்தை நடத்தும் ஒருவர் ஒரு லேப்டாப்பை 36,000 ரூபாய்க்கு வாங்குகிறார்.

ஒரு லேப்டாப்பின்  சராசரி ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என்று எடுத்துக் கொள்வோம். அதாவது 36 மாதங்கள்.

36 மாதங்களுக்கு பிறகு அந்த கணினி மதிப்பு பெறாது. அதாவது பூஜிய மதிப்பு.

அப்படி என்றால், ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் மதிப்பு குறைந்து வந்துள்ளது. (36,000 / 36 = 1000)

இந்த மதிப்பு குறைவு சமநிலைப்படுத்துவதற்காக ஒரே சமயத்தில் கணக்கிடப்படாமல் ஒவ்வொரு காலாண்டு நிதி அறிக்கையிலும் எதிரொலிக்கும்.

மேலுள்ள உதாரணத்துடன் படி ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் 3000 ரூபாய் செலவு அல்லது இழப்பாக நிறுவனத்திற்கு கருதப்படும். (3*1000)

இந்த செலவு நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கணக்கிடப்படும்.

ஆக, நிகர லாபம் என்பது மதிப்பு குறைதலைக் கழித்த பிறகு கிடைப்பதாகும்.

இந்த மதிப்பு குறைதலைக் கணக்கிட பல முறைகள் உள்ளன. ஆனால் எளிதான புரிதலுக்கு மேல் உள்ளது போதுமானது.

இதில் ஆட்டோ நிறுவனங்களுக்கு  depreciation மதிப்பு பொதுவாக அதிகமாக இருக்கும். ஏனென்றால், அங்கு முக்கிய விடயமான மெக்கானிகல் இயந்திரங்களின் விலைகள் மிக அதிகம். அந்த இயந்திரங்கள் அதிக அளவில்  உபயோகிக்கப்படும். அதனால் மதிப்பு குறைதலும் அதிகமாக இருக்கும்.





"பங்குச்சந்தை ஆரம்பம்" தொடரின் அடுத்த பாகமாக முக மதிப்பின் முக்கியத்துவம் (ப.ஆ - 26) விளக்கப்பட்டுள்ளது.

English Summary:
Depreciation is the value decreases over time in machinery or other products. Depreciation needs to be taken care while reading financial profit/loss statements. This shoul be excluded from the business.
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக