வியாழன், 31 ஜூலை, 2014

தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்

பெரும்பாலும் எமது பங்கு பரிந்துரைகள் அதிக அளவு ரிடர்ன் என்பதை மையமாக வைத்து இருக்காது. அதிக அளவு ரிடர்ன் என்றால் அதிக அளவு ரிஸ்க் உள்ளது என்பதும் உண்மையே. ஆதலால் பாதுகாப்பிற்காக போர்ட்போலியோவில் மிக அதிக ரிஸ்க் உள்ள பங்குகளை பரிந்துரை செய்வதில்லை.


இந்த முறை வித்தியாசமாக ஒரு அதிக ரிஸ்க் உள்ள பங்கை பொதுவில் பரிந்துரை செய்கிறோம். அதனால் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Fundamental Valuation முறைப்படி உள்ள எமது பங்கு கால்குலேடரை இந்த பங்கில் பயன்படுத்தினால் வேலை செய்யாது. ஏனென்றால் இந்த பங்கில் கடந்த கால நிதி அறிக்கைகள் நஷ்டத்தில் தான் உள்ளன. சீரான லாபத்தில் சென்று கொண்டிருக்கும் பங்குகளுக்கு தான் அந்த கால்குலேட்டர் வேலை செய்யும்.
ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு மற்றவருக்கு சாதகமாக அமைகிறது.

ஆமாம். முன்பொரு பதிவில் எழுதப்பட்டிருந்த NSEL மோசடியால் பாதிக்கப்பட்ட அதன் கிளை நிறுவனம் FINANCIAL TECHNOLOGIES. அந்த மோசடிக்கு பிறகு FTக்கு பல பிரச்சினைகள் உள்ளதால் அதன் வாடிக்கையாளர்கள் மற்றொரு மாற்று நிறுவனத்தை தேட ஆரம்பித்துள்ளனர். அப்படியொரு தேடலில் ஆதாயம் அடையப் போகும் நிறுவனம் தான் DION Global Solutions.

FT, DION என்ற இரண்டு நிறுவனங்களுமே ஒரே வித வியாபரத்தன்மையைக் கொண்டுள்ளன. அதாவது பங்கு நிதி சார்ந்த நிறுவனங்களுக்கு மென்பொருள் தயார் செய்து கொடுப்பதே அவற்றின் பணி.

இந்த துறையில் மிக சில மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே இருப்பது DION நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

2007-08ல் வங்கித் துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டத்தை கொடுத்து வந்தது. இவ்வாறு தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனம் கடந்த காலாண்டில் தான் லாபத்திற்கு மாறியுள்ளது.

இது போக, சில வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கியதும் பணப்புழக்கத்தை குறைத்தது. இவ்வாறு வாங்கப்பட்ட நிறுவனங்கள் இனி மேல் தான் பலன் கொடுக்க ஆரம்பிக்கும் என்று தெரி்கிறது.

டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த நிறுவனத்தின் 16% பங்குகளை வாங்கி, சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. இது புதிய ஆர்டர்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.

இது போக, உலக அளவில் செயல்படும் வங்கிகள் BASEL III என்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுள்ளது. நமது கரூர் வைஸ்யா வங்கியில் கூட இந்த முறைக்கு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு தேவையான மென்பொருளை இந்த நிறுவனம் ரெடியாக வைத்துள்ளது. அது வெற்றி பெறும் பட்சத்தில் லாபங்கள் மடங்குகளில் உயரலாம்.

FT நிறுவனத்தின் பிரச்சினைகளால் 'மாற்று' தேட ஆரம்பிக்கும் வாடிக்கையாளர்கள் DION நிறுவனம் பக்கம் திரும்ப வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது வரை வெளிநாடுகளில் மட்டுமே அதிக வியாபாரம் பெற்று வந்த நிறுவனம் உள்நாட்டிலும் அதிக வாய்ப்புகளை பெறலாம்.

இப்படி மேலுள்ள காரணங்களால், நிறுவனத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிய ஆரம்பித்துள்ளது.

அதனால் மதிப்பீடுகள் அடிப்படையில் இல்லாமல் வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்த பங்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் அவசர தேவைக்கு வைத்து இருக்கும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். அதனால் சும்மா இருக்கும் பணத்தை மட்டும் இந்த பங்கில் போட்டால் மடங்குகளில் ரிடர்ன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக மொத்த போர்ட்போலியோவில் 5% மட்டும் முதலீடு செய்யவும். தற்போதைய பங்கு விலை 93 ரூபாய்.

எமது கட்டண சேவைகள் செப்டெம்பர் ஒன்று முதல் மீண்டும் துவங்குகிறது. தேவைப்படுபவர்கள் ஆகஸ்ட் 15 முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

English Summary:
DION stock is recommended by growth and recovery basis. Due to fall of financial technologies, DION is on demand. High risk investors can go for the same with long term investment.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: