வியாழன், 24 ஜூலை, 2014

அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்

பாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி!


இந்த தளத்தை பகுதி நேரமாகவே நடத்தி வருவதால் நேரம் ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் அவரது நல்ல கருத்தை ஏற்று ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்த வாரத்தின் பங்குச்சந்தை முக்கிய நிகழ்வுகளை தொகுத்து எமது நடையில் எழுதுகிறோம். அத்தகைய ஒரு பதிவே இது.

கடந்த இரு வாரத்திற்கு முன்பு 26,000க்கு மேல் இருந்த சென்செக்ஸ் 24,500க்கு வந்தது. அந்த சமயங்களில் நண்பர்கள் பதற்றப்படாமல் இதனை வாங்கும் வாய்ப்புகளாக கருதலாம் என்று சொல்லி இருந்தோம்.. அதே போல், சந்தை தற்போது 26,200 என்ற இலக்கையும் தாண்டி விட்டது. நண்பர்கள் பயன் பெற்று இருப்பார்கள் என்று நம்புகிறோம்!

மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு 


இதே போல் அடுத்த வாரத்தில், சில லாப உறுதிபடுத்துதல்(Profit Booking) இருக்கலாம். மாத இறுதி என்பதால் F&0 ட்ரேடிங் செய்பவர்களால் சில திருத்தங்களும் இருக்கலாம். அதனால் அடுத்த வாரத்தில் 500 முதல் 700 புள்ளிகள் வரை கரெக்சன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்குகளை குறைந்த விலைகளில் தவற விட்டவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலே கூறிய கருத்து முற்றிலும் எமது யூகமே. ஆனாலும் முதலீடு செய்வதற்கு பணத்தை தயார் செய்து வைப்பதன் மூலம் பங்குகள் குறையும் போது உடனே வாங்கி விடலாம்.

இது போக, தற்போது நிதி நிலை அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

இதில் மென்பொருள் நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் நன்றாக உள்ளது. ஆட்டோவும் கடந்த வருடத்தை விட நன்றாக உள்ளது. உற்பத்தி துறையும் பரவாயில்லை.

ஆனால் வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் எதிர்பார்த்த அளவு இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட HDFC, YES Bank போன்ற வங்கிகளின் நிதி அறிக்கைகள் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்த காலாண்டில் வங்கிகளின் நிதி அறிக்கை இதை விட வளர்ச்சி அடையும் என்று சொல்லியுள்ளார்கள். கடந்த வருடத்தில் உயர்ந்த வாராக் கடன்களின் விளைவே என்று நினைக்கிறேன். ஆனாலும் இரண்டு வருட காலத்திற்கு மலிவு விலையில் கிடைக்கும் வங்கி பங்குகளை வாங்கிப் போடலாம்.

வரும் வருடங்களில் பொருளாதார வளர்ச்சி கூடும் போது வங்கிகளும் பெரிதும் ஆதாயம் அடையும். SLR விகிதம் குறைக்கப்பட்டுள்ளதும் சாதகமான விடயம். இது ரிசர்வ் வங்கி மேலும் CRR, Repo rateகளை குறைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

மருந்து கட்டுப்பாடு கொள்கை வர விருப்பதால் 300க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை குறைந்த பட்சம் 25% வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. பொது மக்களுக்கு இதனால் நல்ல நன்மை. முதலீட்டாளராக இல்லாமல் பார்த்தால் அரசின் முயற்சிக்கு நன்றி.! இதில் பெரும்பாலான மருந்துகள் நீரழிவு நோய் மருந்துகள். இதனால் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு மாத மருந்து செலவு கணிசமாக குறையும்.

முதலீட்டாளராக பார்த்தால் மருந்து நிறுவனங்களின் பங்குகளை போர்ட்போலியோவில் 10%க்கும் குறைவாக வைத்து இருப்பது நல்லது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பிரீமியம் விலையில் விற்கப்படும் பெரிய மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தான். அதனால் சிறிய நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும். சிறிய மருந்து நிறுவனங்களை வாங்க வேண்டிய தருணம் இது.

இதே போன்ற தொகுப்பை அடுத்த வாரம் பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக