திங்கள், 16 ஜூன், 2014

உப்பு விற்பது அரசாங்கத்தின் தொழிலா?

தற்போதைய தமிழக அரசின் 'அம்மா' கம்பெனி தயாரிப்புகளை குறை சொல்ல முடியாது. மலிவு விலையில் உணவகங்கள் திறக்கப்படுவதும், காய்கறிகளை குறைவான விலைக்கு விற்பதும் மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்றே.


ஆனால் இதெல்லாம் அரசின் வேலையா என்பதில் தான் கேள்வி எழுகிறது.

விலைவாசி உயர்கிறது என்று எல்லா பொருட்களையும் அரசே விற்க ஆரம்பித்து விட்டால் உலகிலே பெரிய கார்ப்பரேட் கம்பெனியாக தமிழ்நாடு அரசு தான் இருக்க முடியும்.

அரசின் வேலை மறைமுகமாக இருந்து விலைவாசியைக் குறைப்பது தான் தவிர இப்படி நேரடியாக சந்தையில் இறங்கி பொருட்களை விற்பனை செய்வது அல்ல.

விலைவாசியைக் குறைப்பது என்றால் தனியார் முதலாளிகளின் லாப விகிதத்தைக் குறைக்க சொல்ல வேண்டும். அல்லது விற்பனை வரிகளைக் குறைக்க வேண்டும்.

இட்லி முதல் உப்பு வரை, அடுத்து உப்புமா?


கடந்த வாரம் 'அம்மா உப்பு' விற்பனைக்கு வந்துள்ளது.

சோடியம் குறைக்கப்பட்ட டாடா உப்பின் விலை 25 ரூபாய். தமிழ்நாடு அரசு உப்பின் விலை 21 ரூபாய். ஆக, ஒரு கிலோ அரசு உப்பை வாங்கும் ஒருவருக்கு 4 ரூபாய் லாபம் ஏற்படுகிறது.

ஒரு கிலோ உப்பை நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்தது மூன்று மாதங்கள் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

அப்படி என்றால், ஒரு குடும்பம் மூன்று மாதத்திற்கு 4 ரூபாய் சேமிக்கிறது. ஆக, ஒரு மாதத்திற்கு 1 ரூபாய் 33 காசு சேமிக்கப்படுகிறது.

தற்போதுள்ள விலைவாசியில் ஒரு ரூபாயின் மதிப்பு என்பது மிகக் குறைவே.

இறுதியில் அரசு உப்பு பொது மக்களை விட ஹோட்டல் நடத்துபவர்களுக்கே அதிக அளவு பயன்படும். ஏனென்றால், அவர்கள் தான் அதிகம் வாங்கி பயன்படுத்துவார்கள்.

இவ்வளவு குறைவாகவே பொது மக்களுக்கு பயன் இருக்கும் சூழ்நிலையில் முன் அனுபவம் இல்லாத, ஆனால் பெருமளவு சம்பளம் கொடுக்கப்படும் அரசு அலுவலர்கள் கணிசமாக உப்பு தயாரிக்கவும், விற்கவும் நியமிக்கப்படுவர்.

அதனால் ஏற்படும் நிர்வாகச் செலவு மக்கள் பெறும் பயனை விட கணிசமாக அதிகமாக இருக்கும்.

அடுத்த ஆட்சி மாற்றம் வந்தால், இந்த திட்டத்திற்கு உத்தரவாதமும் இல்லை.கடைசியில்  பெருமளவு முதலீடு உப்பு தண்ணீரில் கரைவதைப் போல் ஒன்றும் இல்லாமல் போகவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
 - - - (குறள் 385)
என்ற குறள் ஆட்சியாளர்களால் தவறாக புரியப்பட்டுள்ளது.


English Summary:
Is it Tamilnadu Govt duty to sell salt in Market?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:


  1. ஏழை மக்களுக்குக் கொடுப்பது அம்மையாரின் எண்ணமானால் எல்லாப் பொருட்களிலும் அவர் படத்தையும் பெயரையும் பெரிதாக ஏன் போட வேண்டும், அதுவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வரும் பொருட்களில். (அம்மா நீர் பாட்டிலில் அவர் படம் தவிற அம்மா என்று எழுத்து கூட இருக்கிறது) இதில் தரமற்ற, சுயநல அரசியல்தான் தெரிகிறது.

    கோபாலன்

    பதிலளிநீக்கு