திங்கள், 1 டிசம்பர், 2014

திருவள்ளுவர் தேசியரானதும் கூடவே வரும் பயம்

கடந்த வாரம் திருவள்ளுவர் தினத்தை தேசிய தினமாக கொண்டாடவும், திருக்குறளை வட இந்தியாவில் கற்பிக்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.


இதற்காக குரல் கொடுத்த தருண் விஜய்க்கு நன்றி! காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போதே இதற்காக குரல் கொடுத்தவர் என்பதால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை.ஆனால் அங்கீகாரத்தைக் கொடுத்தவர்களை பார்க்கும் போது தான் கூடவே ஒரு பயமும் வந்து விடுகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கிறார்கள். பரிசீலிக்கப்படும் என்று கேட்டுப் பழகிய நமக்கு உடனே அரசானையும் கொடுக்கிறார்கள் என்றவுடன் பயமும் சேர்ந்து வருகிறது.

இந்தியை மறைமுகமாக காங்கிரஸ் திணிக்கும். பிஜேபி நேரடியாகவே திணிக்கும் இது தான் காங்கிரஸ் கட்சிக்கும், பிஜேபி கட்சிக்கும் இடையே உள்ள உள்ள பெரிய வித்தியாசம் என்று சொல்லலாம்.

கடந்த ஆறு மாதங்களாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் எங்கெல்லாம் திணிக்க முடியுமா அவ்வளவு திணித்தார்கள். ட்விட்டர், பேஸ்புக், அலுவலகங்களில் கட்டாய இந்தி பயிற்சி, பயிற்சிக்கு வரா விட்டால் அபராதம், இந்தி படிக்காவிட்டால் பதவி உயர்வு கிடையாது என்று பயமுறுத்தல் என்று பல வழிகளில் இந்தி கொண்டு வரப்பட்டது.

எல்லா மொழிக்கும் தாய் சமஸ்கிருதம் என்றும் போகிற போக்கில் பல கண்டுபிடிப்புகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்தியாவில் 75% பேருக்கு இந்தி தெரியும் என்றும் தெரியாத ஒரு உண்மை பகிரப்பட்டது.

75% பேர் என்பதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே இருந்தாலும் மீதி இருக்கும் ஒவ்வொரு சதவீதமும் இந்தியாவில் பெரிய எண்ணிக்கை என்பது ஆட்சியாளர்களுக்கு புரியாமலே உள்ளது. ஒவ்வொரு சதவீதமும் ஒரு கோடிக்கும் மேல் உள்ள மக்களைக் குறிக்கும். அது ஒன்றும் சாதாரண தொகை அல்ல.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி என்பது சிறிய கணக்கு அல்ல. இது பல உலக நாடுகளை விட அதிக அளவு மக்கள் தொகை கண்ட மாநிலமே. அதனால் மைனாரிட்டி என்று நினைத்து கண்டதையும் திணிக்க வேண்டாம். இது நமது அடிப்படை உரிமைகளை பறிப்பது போலவே.

இவங்களை நம்பலாமா? வேண்டாமா?

இவ்வளவு பின்னணியில் தான் அரசு திருவள்ளுவர் தினத்தை தேசிய அளவில் கொண்டாடப் போவதாக அறிவித்து உள்ளது. இது போக கேட்காமலே பாரதியையும் சேர்த்துக் கொண்டாடுவதாக அறிவித்து உள்ளார்கள். இதனால் தான் சந்தேகம் வருகிறது.

நேற்று தான் நினைத்து இருந்தோம். திருக்குறளை நாங்கள் படிக்கிறோம். அதனால் இந்தியை நீங்கள் படியுங்கள். என்று ஒரு எக்சேன்ச் சலுகை வரும் என்று.

இன்று ஆர்.எஸ்.எஸ் புதிய கல்வி கொள்கையை வழிமொழிகிறது என்ற செய்தியை படித்தவுடன் அந்த சலுகையை உறுதிப்படுத்தி விடலாம் என்று தான் தோன்றுகிறது.

இந்த புதிய கொள்கையில் நிறைய விஷயங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். அதில் ஒன்றாக தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் போன்றவையும் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று ஒரு குறிப்பு உள்ளது., நமது கல்வியை தீர்மானிப்பதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு என்ன பங்கு உள்ளது?

மேற்கு நாடுகளில் ஒன்றைப் பார்த்தால் தெரியும். மத சார்புள்ள எந்த அமைப்பும் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடாது. ஏன் கிழக்கு ஆசிய நாடுகளில் கூட இந்த நிலை இல்லை. ஆனால் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் மதத்தையும் நிர்வாகத்தையும் சேர்த்துக் குழப்பும் மோசமான நிலைமை நீடித்துக் கொண்டே வருகிறது.. இது தான் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.

வடக்கில் வாழும் நண்பர்களே! நீங்கள் திருக்குறளை விருப்பம் இருந்தால் படியுங்கள். உங்களைக் கட்டாயபடுத்தவில்லை. அதே போல் எங்களிடம் எதையும் திணிக்காதீர்கள்!

பிஜேபி ஒரு காலை வளர்ச்சியை நோக்கியும், இன்னொரு காலை பின்னோக்கியும் வைக்கிறது. ஆனால் நகர்வதற்கு இரண்டு கால்களும் ஒரே திசையில் இருப்பது அவசியம். பாகிஸ்தானில் இருப்பது போன்ற உள்நாட்டு பிரச்சினை இந்தியாவில் சிறிது வெடித்தால் கூட பத்து வருடங்கள் நம்மை பின்னோக்கி தள்ளி விடும்.

என்ன காரணமாக இருந்தாலும் தமிழுக்கு ஒரு தனி இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி! இந்தியாவில் அழுதாலும் புரண்டாலும் கிடைக்காதது தான் அரசியலில் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு பரிகாரமாக நம்மிடம் ஏதேனும் திணிக்கப்பட்டால் எதிர்ப்பதற்கும் தயாரக இருப்போம்.

English Summary:
Indian Govt. celebrates Thiruvalluvar and fear is coming along with.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: