புதன், 17 டிசம்பர், 2014

Make In India: ராஜன் விமர்சனத்தின் பின்புலத்தில் ஆசிய நாடுகளின் வீழ்ச்சி

நேற்று முன்தினம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் Make In India தொடர்பான தமது கருத்துக்களை விமர்சனமாக வைத்து இருந்தார். தமது பொறுப்பில் இருந்து கொண்டு அரசின் கொள்கை தொடர்பாக துணிவாக கூறியது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையும் கூட.


மோடி அவர்களின் "Make In India" கொள்கையின் படி, நீங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்பது தான். அதாவது ஏற்றுமதி சார்ந்த பொருளாதரத்தை (Export Oriented Economy) முன் வைக்கிறார். 




சீனா, கொரியா, தாய்லாந்து, மலேசியா போன்ற கிழக்கு ஆசியா நாடுகளின் பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கை தான் இது.

ராஜன் இது தொடர்பாக கூறும் போது, சீனாவில் பின்பற்றி வந்த கொள்கை இந்தியாவிற்கு எளிதில் பொருந்துவது கஷ்டம். அரசு உற்பத்தி என்ற ஒரே துறையை மட்டும் கவனம் செலுத்தாமல் எல்லா துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்த உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பது தான்.

அதாவது ராஜனின் கருத்தை இப்படி சுருக்கமாக சொல்லலாம்.  'Make for India' will be better than 'Make in India'

அவர் சொல்லியதன் பின்புலத்தை நாம் வரலாற்று பூர்வமாக பார்க்கலாம். இதனை 1997 East Asia Financial Crisis என்று சொல்வார்கள்.

90ம் ஆண்டுகளில் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, தைவான் போன்ற நாடுகள் பின்பற்றிய பொருளாதாரம் தான். Export Oriented Economy

இந்த நாடுகளில் பார்த்தால் இயற்கை வளங்கள் என்பது மிக குறைவு. ஒரே பலம் அங்கு இருக்கும் மக்கள். அது போக சிறிய நாடுகள் கூட. இதனால் உள்நாட்டு மக்களின் தேவையை மட்டும் நம்ப முடியாது.

இந்த சூழ்நிலையில் தான் ஏற்றுமதி சார்ந்த பொருளாதரத்தை அவை தேர்ந்தெடுத்தன.  அதாவது மூலப்பொருளை ஒரு நாட்டிடம் வாங்கி அதனை உற்பத்தி பொருளாக மாற்றி இன்னொரு நாட்டிடம் விற்று விடுவது தான் இந்தக் கொள்கை.

இவ்வாறு உற்பத்தி பொருளாக மாற்றுவதற்கு ஏகப்பட்ட முதலீடுகள் தேவைப்படும். அதற்காக செயற்கையான முறையில் வட்டி விகிதங்களை உயர்த்தி வைத்து விட்டன.

இதனால் நிறைய வட்டி கிடைக்கும் என்ற ஆர்வத்தில் அதிக வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தன. நாட்டு பொருளாதாரமும் தொடர்ந்து பல ஆண்டுகளாக 10% வளர்ச்சி அளவைக் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் தான் 1997ல் அமெரிக்கா தனது வட்டி விகிதங்களைக் கூட்டியது. இதனால் கிழக்கு ஆசியா நாடுகளில் குவிக்கப்பட்ட பணம் அதிக வட்டி கிடைப்பதால் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றது.



இது கிழக்கு ஆசியா நாடுகளின் கடுமையான அந்நிய செலாவணி பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டது. தொடர்ச்சியாக நாணய விகிதங்கள் பாதிக்கும் மேல் வீழ்ந்தன.

ஒரு டாலர் 800வோனுக்கு மாறிக் கொண்டு இருந்த கொரியா நாணயம் ஒரு சில வாரங்களில் 1700க்கு சென்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வீழ்ச்சியின் தாக்கம் எப்படி என்று.

உள்நாட்டு நாணயம் வீழ்ந்ததால் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை அதிக விலைக்கு வெளிநாடுகளில் விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்த சமயத்தில் தான் சீனா தன் பங்காக மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்க முனைந்தது.

இது போக, முதலீடுகளும் சென்று விட்டதால் மேற்கொண்டு நிறுவனங்களை நடத்த முடியாத சூழ்நிலை.

இப்படி உலகக் காரணிகள் ஒன்று சேர்ந்து கிழக்கு ஆசியா நாடுகளை ஒன்று இல்லாமல் செய்து விட்டன.

ஏன். தற்போதும் சீனாவை விட மலிவான விலையில் விற்கும் ஒரு புதிய நாடு முளைத்து விட்டால் சீனா ஒன்றும் இல்லாமல் ஆகி விடும். இது தான் ஏற்றுமதி பொருளாதாரத்தின் உண்மை நிலை. நீண்ட கால வளர்ச்சி என்பது இங்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும்.

அதற்கு பதிலாக இந்தியா தன் உள்நாட்டுக் கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல் போன்றவை சார்ந்து வரும் திட்டங்கள் தான் நீண்ட காலத்திற்கு நமக்கு பயனாக இருக்கும்.

ஏற்றுமதி பொருளாதரத்தில் நேரம் நல்லா இருந்தால் தங்க பானையை வைத்தும் விருந்து சாப்பிடலாம். வீழும் போது மண் சட்டி கூட கிடைக்குமா என்று தெரியாது. சட்டி கிடைத்தாலும் சோறு இருக்காது.

English Summary:
Reserve Bank of India Governor against export oriented economy. This may lead to quick growth. But not stable. Domestic consumption, Infrastructure development, Administrative developments helps to stable growth and benefits to all.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக