ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஏமாற்றங்களுக்கு காரணம் அதிக எதிர்பார்ப்புகள்

நேற்று முன்தினம் எமது டிசம்பர் போர்ட்போலியோ பகிரப்பட்டது. நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி!

ஒவ்வொரு போர்ட்போலியோ தயார் செய்யும் போதும் சில காரணிகளின் அடிப்படையில் பங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்த முறை எத்தனால் தொடர்பான அரசின் கொள்கை மாற்றங்கள், சர்க்கரை நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகள், GST வரி தொடர்பான எதிர்பார்ப்புகள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி  போன்ற காரணங்கள் முக்கிய பங்கை வகித்தன.இது போக அடுத்த வருடங்களில் பங்கு முதலீடு தொடர்பான அதிக எதிர்பார்ப்புகளில் இருக்கும் நண்பர்களுக்கு ஒரு பொதுவான கருத்தை முன் வைக்கிறோம்.

இந்த 2014ம் வருடம் பங்குச்சந்தை கணிசமாக லாபத்தைக் கொடுத்து உள்ளது. இதைப் போல் அடுத்த வருடங்களும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதை நண்பர்களின் மெயில்களில் அறிந்து கொள்ள முடிகிறது.

2014ல் தேர்தல்கள், அரசு கொள்கை மாற்றங்கள், நிர்வாகம் நன்றாக செயல்படுவது, பொருளாதார தேக்கங்கள் குறைவு போன்ற நேர்மறை காரணங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதாவது சந்தை என்னவெல்லாம் எதிர்பார்த்ததோ அதெல்லாம் அப்படியே வந்து வந்து எளிதில் விழுந்தன.

இதே நிகழ்வுகள் அப்படியே அடுத்த வருடங்களிலும் தொடரலாம் என்பது கடினமே!

இந்த தருணத்தில் சந்தை ஏற்ற, இறக்கங்களுக்கேற்ப நமது மன நிலையை தயார் செய்வது தான் பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு நம்மைத் தொடர வைக்க உதவும்!

உதாரணத்திற்கு எமது போர்ட்போலியோ இரண்டு ஆண்டுகளில் 40% வருமானம் கொடுக்குமளவு எண்ணியே தயார் செய்வது வழக்கம். அதாவது வருடத்திற்கு 20% ரிடர்ன் எதிர்பார்ப்பு. இது எந்த ஒரு தொழிலில் எதிர்பார்க்கும் சராசரி வளர்ச்சி தான். ஆனால் சாத்தியமானது கூட.

அதற்கு மேல் கிடைப்பது முற்றிலும் புறக்காரணிகள் அடிப்படையிலே. முதலீடு செய்யும் நேரமும், சூழ்நிலையும் நன்றாக இருந்தால் கொஞ்சம் அதிகமான வருமானம் கிடைக்கும்.

ஆனால் தற்போது செய்திகளில் ஒவ்வொரு ப்ரோக்கரும் இந்திய சந்தைகள் ஐந்து அல்லது ஆறு மடங்குகள் அதிக ரிடர்ன் கொடுக்கும் என்று சொல்லி வருகிறார்கள். இந்த செய்திகள் சிறு முதலீட்டாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை தோற்றுவிக்கிறது. கடன் வாங்கி கூட பங்குகளில் முதலீடு செய்வதாக அறிய முடிகிறது.

ஆனால் இதற்கான சாத்தியங்கள் அவ்வளவு எளிதல்ல என்பதையும் சிறு முதலீட்டாளர்கள் உணர வேண்டும் 

அதிக லாபம் கிடைத்தால் நமக்கு யோகம் என்று எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமே குறைந்த எதிர்பார்ப்பாக வைத்துக் கொண்டால் நல்லது.

எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு முதலீடுகளை தொடருங்கள்! ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும்!

English Summary:
Brokers in India share market directs small investors for over expectation. 2014 Modi magics may not continue in coming years. Believe on minimum growth factors will be more meaningful.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக