ஞாயிறு, 4 ஜனவரி, 2015

லாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு

TCS தனது 35,000 பணியாளர்களை நீக்க, செய்யவிருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி உலவி வருகிறது. TCS நிறுவனத்தின் சார்பிலும் மறுப்பு ஏதும் இல்லாததால் செய்தி உண்மையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.


ஏதோ நட்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் ஆட்குறைப்பு செய்கிறது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், கடந்த காலாண்டில் கூட நல்ல லாப அறிக்கையே கொடுத்துள்ளது.இந்த சூழ்நிலையில் தான் அடுத்த காலாண்டில் அதிகம் எதிர்பார்க்காதீர்கள், லாபம் குறையலாம் என்று நிறுவனம் வலிய வந்து சொல்லியது. அதற்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் என்று கூட காரணம் கூறியது.

இது வருஷம் வருஷம் நடக்க கூடியது தானே. இதுக்கு கூட்டம் போட்டு சொல்லனுமா என்று நாமும் ஒரு கட்டுரையில் கூறி இருந்தோம்.

பார்க்க: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபமடையும் IT பங்குகள்

இப்பொழுது அதன் சூட்சமம் புரிகிறது.இவ்வாறு காரணம் காட்டுவதால் வேலை நீக்கங்கள் எளிதாக அமையலாம் என்று நிறுவனம் கருதுவதை யூகிக்க முடிகிறது..

பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் லாப விகிதம் (Operating Profit Margin) மற்றும் Utilization Rate என்ற இரண்டும் மென்பொருள் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது.

TCS நிறுவனத்தை பொறுத்தவரை இது மற்ற மென்பொருள் நிறுவனங்களை விட குறைந்த விகிதத்திலே உள்ளது. அதனை சரி செய்யும் நடவடிக்கையாகவே இந்த வேலை நீக்கங்களை பார்க்கிறோம்.

அதனால் தான் வேலை நீக்கம் செயபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் அதிகம் சம்பளம் வாங்கும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பத்து வருடங்களுக்கு முன் உள்ள நிலையுடன் ஒப்பிட்டால் தற்போது மென்பொருள் நிறுவனங்களை பொறுத்தவரை புதிதாக எந்த மென்பொருளும் அதிக அளவில் உருவாக்கப்படுவதில்லை. இதனால் தற்போது ஒட்டுப் போடும் புனரமைப்பு பணிகளே அதிகம் நடக்கின்றன.

இதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை என்பதும் கட்டாயம் கிடையாது. இவர்களுக்கு பதிலாக குறைந்த சம்பளத்தில் கல்லூரி முடித்து வெளிவருபவர்களைப் போடுவதன் மூலம் கணிசமான தொகையை சேமிக்கலாம். இதனால் லாப விகிதத்தைக் கூட்டலாம்.

இது தான் உண்மை நிலை. இங்கு போய் திறமை இல்லாதவர்களை நீக்குகிறோம் என்று நிறுவனம் சொல்வது அண்டப்புளுகாகவே பார்க்கலாம். அதாவது அவர்களுக்கு தேவையில்லாதவர்களை நீக்குகிறார்கள்.

இந்த கொள்கை அவர்களுக்கே எதிர்காலத்தில் எதிராக அமையலாம். இந்த வேலை நீக்கங்களால் புதிதாக மென்பொருள் துறை சம்பந்தப்பட்ட படிப்புகளில் இணைவதற்கு பலர் யோசிப்பார்கள். இதனால் திறமை வாய்ந்தவர்கள் இந்திய மென்பொருள் துறைக்கு கிடைப்பதே அரிதாகும்.

அதை நம்பித் தொழில் புரியும் இந்திய மென்பொருள் தரகு நிறுவனங்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விளைவு நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் நிறுவனர்கள் தப்பி விடுவார்கள். 

ஏனென்றால் HCL, Wipro போன்ற நிறுவனங்களின் நிறுவனர்கள் மென்பொருள் அல்லாத வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவதையும் கவனிக்க. இன்போசிஸ் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை வேகமாக விற்று வருவதையும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் ஓரளவு அனுமானித்து இருப்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

பார்க்க: சிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்?எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்கள் என்றால் நிறுவனம், பணியாளர்கள், சமூகம், முதலீட்டாளர்கள் போன்றவை உள்ளடக்கியது என்று தான் வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் லாபம் அதிகமாக வரும் போது நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் அதிக பயன் பெறுவர். அதே வேளையில் நஷ்டம் வந்தால் மற்ற அனைவரையும் விட அதிக சுமைகள் பணியாளர்களிடம் இறக்கி வைக்கப்படுகிறது.

அதனால் நாமும் வேலையை விரும்புவோம். ஆனால் நிறுவனத்திடம் காதல் கொள்ள வேண்டாம். நிறுவனம் என்பது சமூக அக்கறை கொஞ்சமும் இல்லாத லாப வெறி பிடித்த ஒரு மூடர் கூடமே.

மென்பொருள் வல்லுனர்கள் சோர்வடையாமல் ஒரு மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும் தருணமாகவும் இந்த சூழ்நிலையை கருதிக் கொள்ளலாம். நம்மை அடுத்தக் கட்டத்திற்கு தயார் செய்யும் இடைவேளியாகவே இந்த நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.

இப்பொழுதாவது சமூக அக்கறையுடன் அணி திரள்வதன் அவசியம் மென்பொருள் பொறியாளர்களுக்கும் புரிந்திருக்கும்!

தொடர்பான கட்டுரைகள்:

English Summary:
TCS is doing massive layoff for showing good profit margin to investors. Experienced employees are fearing more about job less.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக