புதன், 25 நவம்பர், 2015

சென்னை வெள்ளமும், சூழும் பொருளாதார பாதிப்பும்

கடந்த இரு வாரங்களாக சென்னையில் பெய்த மழை படகு, பைக், கார் என்று எல்லாவற்றையும் ஒரே பாதையில் செல்ல வைத்துள்ளது.


ஒரு நகரம் வளரும் போது அதன் கட்டமைப்பும் அதே வேகத்தில் வளர வேண்டும்.ஆனால் தொழில் துறையில் வளர்ந்த சென்னை கட்டம்மைப்பில் எவ்வளவு பின் தங்கி உள்ளது என்பதை இந்த மழை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இன்னும் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலருமே ரகசியமாக தான் நிவாரண வேலைகளை பார்க்க வேண்டியுள்ளது என்பது தமிழக அரசியலின் சோதனையான காலக்கட்டம் தான்.

மத்திய அரசிடம் கேட்பதற்கு ஈகோ, மக்களிடம் உதவி கேட்பதற்கு கூட ஈகோ என்று மாநில அரசின் எண்ணம் வெளிப்படையாகவே தெரிகிறது.

ஊர் ஒன்று கூடினால் தான் இந்த மாதிரியான இடர்களில் இருந்து மீள முடியும். எந்த ஒரு தனி நபரும் தனி ஆளாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது தான் யதார்த்தம்.

நிவாரண நிதியை யாரிடம் கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் தேடினால் கூட ஒரு உருப்படியான பதிலும் கிடைக்கவில்லை.

மறு பக்கம், நமது தேசிய மீடியாக்களுக்கு சென்னையில் சூழ்ந்துள்ள வெள்ளத்தை விட அமீர் கான் சொன்னது பெரிதாக போனதால் தமிழ்நாட்டிற்கு வெளியே ஒன்றும் தெரியவில்லை.

உத்தரகாண்ட், மும்பை வெள்ளங்களுக்கு நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் செய்யும் மீடியாக்கள் தமிழ்நாடு என்றால் ஒதுங்குவது ஏனென்று தான் தெரியவில்லை?

இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் பாதி சென்னையில் தான் உற்பத்தியாகிறது. இதனால் கார் நிறுவனங்கள் புக் செய்தவர்களுக்கு தங்கள் டெலிவரிகளை தாமதப்படுத்தியுள்ளன.

ஐடி நிறுவனங்கள் ஒரு வார காலம் மூடப்பட்டு இருந்தால் நஷ்டம் பல மடங்கு அதிகமாகி விடும். வளர்ந்த நாடுகளில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு நாளில் வடிந்து விடும். அதனால் மழையை சாக்கு சொல்லி இரண்டு வாரங்கள் மூடி இருந்தால் அங்குள்ள கிளின்ட்கள் கடுப்பாகி விடுவார்கள்.

இதனால் ஐடி நிறுவனங்கள் சிரத்தையாக பெங்களூர் போன்ற மற்ற நகரங்களுக்கு முக்கிய பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளனர். மற்ற பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை பார்க்கவும் பணித்து உள்ளனர்.

சில நிறுவனங்கள் படகுகளை வாடகைக்கு பிடித்து வைத்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இப்படி பாதிப்புகள் எல்லா துறைகளிலும் தொடர்கின்றன.

இனி சென்னைக்கு முதலீடுகள் வருவதற்கு இந்த மழையும் அதனால் வெளிக்காட்டப்பட்ட கட்டமைப்பு குறைவும் பெரிய தடையாக இருக்கும்.

வயலில் வீட்டைக் கட்டியதற்கு நாமும் கொஞ்சம் பொருளாதார ரீதியாக அனுபவித்து தான் பார்க்க வேண்டும்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக