செவ்வாய், 10 நவம்பர், 2015

பண்டிகைக்கு செலவை குறைக்கும் மக்கள்

நேற்று ஊருக்கு போன் பேசும் போது இந்த வருடம் தீபாவளிக்கு ஊரில் முன்பை போல் சரவெடிகள் அதிகம் இல்லை என்று சொன்னார்கள்.


அதற்கு முந்தைய நாள் தான் அசோசெம் அறிக்கையை பார்க்க முடிந்தது. அதற்கும் மேலே கேட்டவற்றிற்கும் உள்ள தொடர்பை அதன் பிறகு யூகிக்க முடிந்தது.அசோசெம் அறிக்கையில் இந்த வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் 43% செலவை குறைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்கள்.

ஒரு பக்கம் பணவீக்கம் குறைந்தது என்று அறிக்கை வந்தாலும் உணவு பொருட்களின் பணவீக்கம் பெரிதளவு குறையவில்லை என்றே தோன்றுகிறது. அது மக்களையும் பருப்புடன் சேர்த்து பாதிக்கத் தான் செய்கிறது.

இது போக, இந்த வருடம் மழையும் வருவேனா இல்லையா என்று தண்ணி காட்டி விட்டது.

இதனால் கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருந்தவர்கள் முதலில் கை வைப்பது என்றால் இந்த பண்டிகை ஆடம்பர செலவுகளைத் தான் தொடுவார்கள்.

சிட்டி பக்கம் வந்தால் ஐடி இன்ஜினீயர்கள் இன்னைக்கா நாளைக்கா என்று வேலையை நினைத்து மன உளைச்சலில் இருக்கின்றனர்.

என்ன தான் மோடி வந்தாலும், பங்குச்சந்தைகள் உய்ரந்தாலும் மக்களிடம் தங்கள் வேலை தொடர்பான பாதுகாப்பில் முழு நம்பிக்கை இல்லாமல் தான் உள்ளது.

தெரிந்தோ தெரியாமலோ ஒரு வணிக பொருளாதார வாழ்க்கையில் சிக்கி உள்ளோம்.

இந்த வருடம் கார் மற்றும் பைக் விற்பனை கூடியுள்ளது. அதனால் ஆட்டோ துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருப்பார் என்று நம்பலாம்.

அடுத்த வருடம் வேறு எந்த துறை நன்றாக இருக்கிறதோ அந்த துறை ஆட்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் போல.

இப்படி மகிழ்ச்சியும் சுழற்சி முறையில் செல்ல ஆரம்பித்துள்ளது.

முந்தைய தலைமுறையிலும் இதே போல் இதை விட வறட்சி, பஞ்சம், பட்டினி என்று வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அதனை எதிர்கொள்ள தேவையான மன வலு மக்களிடம் இருந்தது. தேவைகளையும் சுருக்கி வைத்து இருந்தார்கள்.

இன்று மாறி விட்டது. ஏசி இல்லாமல் வாழ முடியாது. ஸ்மார்ட் போன் இல்லாமல் சமூக அந்தஸ்து இல்லை. கார் இல்லாமல் குடும்பம் இல்லை.

இப்படி தேவையில்லாதவைகள் இல்லாவிட்டால் கூட மன அழுத்தம் வருமளவு பாதிக்கபப்ட்டு உள்ளோம்.

பங்குச்சந்தையில் கோலோச்சிய வாரன் பப்பெட் உலகின் இரண்டாவது பணக்காரராக இருந்தார். ஆனாலும் அவர் இரண்டு பெட் ரூம் இருந்த வீட்டில் தான் கடைசி வரை குடி இருந்தார். பிராண்ட் சட்டைகளை போட விருமபியதில்லை.அவரது இரண்டு மேற்கோள்கள் தற்போதைய காபிடலிச சமுதாயத்தில் இருக்கும் நமக்கு பொருத்தமாக இருக்கும்.
  • தேவையில்லாதவைகளை இப்பொழுது வாங்கினால் பிறகு தேவையானவகளையும் விற்க வேண்டி வரும். 
  • செலவு செய்த பிறகு சேமிக்காதீர்கள், சேமித்த பிறகு செலவு செய்வோம்.

அதிலும் பென்சன், மெடிக்கல் இன்சுரன்ஸ் போன்றவை இல்லாத ஒரு பாதுகாப்பில்லாத சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் சேமிப்பே ஒரு வழி.

தேவையில்லாத செலவு செய்ய வேண்டாம். அதே நேரத்தில் அதிக ஸ்ட்ரெஸ் கொடுத்தும் சேமிக்க வேண்டாம்.

கஞ்சன், ஊதாரி என்ற இரண்டிற்கும் உள்ள மெல்லிய இடைவேளியை புத்திசாலித் தனமாக பயன்படுத்திக் கொள்வோம்!« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக