வியாழன், 19 நவம்பர், 2015

நேரடி மானியத்தால் அதிக பயன் பெறும் சர்க்கரை உற்பத்தி துறை

எம்மிடம் கடந்த வருடம் கட்டண போர்ட்போலியோ பெற்று வந்த நண்பர்களுக்கு சில மாதங்கள் சர்க்கரை பங்குகளையும் பரிந்துரை செய்து இருந்தோம்.


கிட்டத்தட்ட ஒரு வருடமாக மந்தமாக இருந்து வந்த சுகர் பங்குகள் தற்போது தான் நல்ல பலனைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.இதற்கு சர்க்கரை விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள ஒரு புதிய முடிவு ஒட்டு மொத்த சர்க்கரை உற்பத்தி துறைக்கும் நல்ல பயனைத் தர வாய்ப்புள்ளது காரணமாக அமைந்தது.

இதற்கு முன்பு பார்த்தால் ஒரு குவிண்டாலுக்கு 4.50 ரூபாய் ஒவ்வொரு கரும்பு விவசாயிக்கும் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மானியம் சரியாக விவசாயிகளுக்கு போய் சேருமா என்பதில் அதிக அளவு சந்தேகம் இருந்து வந்தது.

ஒரு குவிண்டால் சர்க்கரை 230 ரூபாய்க்கு குறைந்த பட்சம் விற்கப்பட வேண்டும் என்பது அரசின் விதி முறை. அதில் 4.50 ரூபாய் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய மானிய பணம்..

ஆனால் இந்த பணம் இடைத் தரகர்கள் வழியாகத் தான் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பது ஊரறிந்த ரகசியம். அப்படி வரும் போது, 4.50 ரூபாய் மானிய பணத்தில் இரண்டு ரூபாயாவது விவசாயிகளுக்கு கிடைத்தாலே அரிது தான்.

ஆனால் தற்போது அரசு இந்த பணத்தை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு கொடுப்பதாக சொல்லியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு மானிய பணம் முழுமையாக கிடைத்து விடும்.

அதே நேரத்தில் நிறுவனங்களுக்கும் சர்க்கரையை  குறைந்த பட்சம் குவிண்டாலுக்கு 230 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்பது 225.50 ரூபாய் என்று குறைந்து விடுகிறது.

சர்க்கரை நிறுவனங்களுக்கு பிரச்சினையே வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் குவியும் அதிகப்படியான சர்க்கரை இறக்குமதி தான். அவற்றுடன் போட்டி போட முடியாமல் சர்க்கரை விற்பனை இங்கு தேங்கி விடுகிறது.

ஆனால் தற்போது குறைந்த பட்ச விலை என்பது குறைந்துள்ளதால் ஓரளவு வெளிநாட்டு சர்க்கரையுடன் போட்டி போட முடியும்.

அதற்கடுத்து உலக வர்த்தக அமைப்பு வளரும் நாடுகள் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து விலையை கூட்டுவதை நிறுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் இப்படி நேரடி மானியம் கொடுக்கும் போது பொருட்களின் விலைகளுடன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாதால் இந்த விதி முறையில் இருந்தும் தப்பி விடும்.

மொத்தத்தில் மானியத்  தொகையில் மாற்றம் எதுவமில்லை. ஆனால் அதனை செயல்படுத்தும் விதத்தில் பலன் பல மடங்கு பெருகி விடுகிறது.

எப்படி செயலாக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்து இந்த திட்டத்தின் வெற்றி அமையும். ஆனாலும் சர்க்கரை துறையில் மத்திய அரசின் சில முயற்சிகள் நீண்ட கால நோக்கில் நல்ல பயனை தர வல்லது.

இதனை நெல், கோதுமை உற்பத்தி செய்யும் மற்ற விவசாயிகளுக்கும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக