ஞாயிறு, 1 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் இருந்து சன் டிவி விலகுமா?

கலாநிதி மாறன் தலைமையில் இயங்கும் சன் டிவியின் பங்கு மிகவும் மலிவான விலையில் சென்று கொண்டிருக்கிறது.


இதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு தான் மதிப்பீடலில் உள்ளது.



இந்த காலாண்டில் கூட நல்ல நிதி அறிக்கை கொடுத்துள்ளது.

ஆனாலும் அவர்கள் நிறுவனம் அரசியலுடன் பிண்ணி பிணைக்கப்பட்டிருப்பதால் என்ன ஒரு மாற்றங்களுக்கும் பங்கு விலை கீழே விழுந்து விடுகிறது. அதன் பிறகு மேலே வரவும் செய்வதில்லை.

இன்னும் தயாநிதி மற்றும் கலாநிதி மாறன்களின் மேல் உள்ள வழக்கு முடியாததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் பெற முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

அதனால் தான் நல்ல நிதி அறிக்கை கொடுத்ததும் கூட பங்கு உயரவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் சன் டிவி பங்குகளை சந்தையில் இருந்து திரும்பி வாங்குவதாக அறிவித்துள்ளது. அதனால் ஒரே நாளில் பங்கு விலை 5% ஏற்றம் கண்டது.

தற்போதைக்கு பங்கிற்கு என்ன விலை என்பதெல்லாம் அறிவிக்கப்படவில்லை. அந்த திட்டம் இருப்பதாக மட்டுமே கூறி உள்ளனர்.

பங்கு விலை அறிவிக்கப்பட்ட உடன் முதலீட்டாளர்கள் நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

கலாநிதி மாறனை பொறுத்த வரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை விற்ற பிறகு அந்த பணத்தை இது வரை வேறு எதிலும் பெரிதளவு முதலீடு செய்ததில்லை. அந்த பணத்தை சன் டிவியை நோக்கி திருப்பி விடும் நடவடிக்கையாக பார்க்கலாம்.

அதே நேரத்தில் சந்தையிலும் பங்கு மிக மலிவாக இருப்பதால் 500 ரூபாய் அளவு மதிப்புள்ள பங்கு 390 ரூபாய்க்கு கிடைத்து விடும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால்,

கலாநிதி மாறன் ஏற்கனவே சன் டிவியில் 75% பங்குகளை வைத்துள்ளார். செபியின் விதிப்படி தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் 75% பங்குகளை தான் கையில் வைத்துக் கொள்ள வேண்டும். மீதியை பொது மக்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய BuyBack திட்டத்தின் படி, சந்தையில் உள்ள பங்குகளை வாங்கி ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். அதாவது பணமாக வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனால் மொத்த பங்குகளின் எண்ணிக்கை குறையும்.

மொத்த பங்குகளின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் கலாநிதி மாறனும் தனது பங்கு எண்ணிக்கையை 75% வரம்பின் படி குறைக்க வேண்டும்.

கொஞ்சம் புரிவதற்கு கடினம் என்பதால் ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

சன் டிவி மொத்தம் 1000 பங்குகளை வைத்து இருப்பதாக கருதிக் கொள்வோம். அதில் 750 (75%) பங்குகளை கலாநிதி மாறன் வைத்து இருக்கிறார்.

தற்போது சந்தையில் மீதி உள்ள 250 பங்குகளை சந்தையில் இருந்து வாங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதில் 100 பங்குகளை அவரால் வாங்க முடிந்தது என்று கருதிக் கொள்வோம். வாங்கிய பிறகு அந்த 100 பங்குகளை ரத்து செய்து விடுகிறார்.

தற்போது மொத்த பங்குகளின் எண்ணிக்கை 900 என்று குறைந்து இருக்கும்.

அதில் 75% தான் கலாநிதி மாறன் வைத்து இருக்க முடியும் என்றால், அவரால் 900*0.75 = 675 பங்குகளை விற்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த நிலையில் அவர் கையில் வைத்து இருக்கும் 75 பங்குகளை விற்க வேண்டியது  வரும்.

ஆக, 100 பங்குகளை வெளியே வாங்குபவர் தம்மிடமுள்ள 75 பங்குகளை விற்க வேண்டும் என்றால் அதில் பெரிய அளவு பலன் இல்லை..

அதே நேரத்தில் சன் டிவி நிறுவனத்தை முழுமையாக பங்குச்சந்தையில் இருந்து விலக்கும் DELISTING நடவடிக்கைக்கு முன்னோட்டமாக இதனைக் கருதிக் கொள்ளலாம்..

எதுவாக இருந்தாலும் அரசியலுடன் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த பங்கில் முதலீடு செய்து இருந்தால் நல்ல நேரத்தில் விற்று விலகுவது சிறந்தது.

தொடர்புடைய கட்டுரைகள்:
பங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக