செவ்வாய், 17 நவம்பர், 2015

வெளிநாட்டு இந்தியர்கள் வீட்டுக் கடன் பெறுவது எப்படி?

பலரும் வெளிநாடு சென்று வேலை பார்ப்பதன் முக்கிய நோக்கம் ஊரில் வீடு கட்டுவது என்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.


ஆனால் நாம் வெளிநாடு சென்று இருக்கும் போது இருபது லட்ச லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடுகள் ஐந்து வருடம் கழித்து திரும்பி வரும் போது ஐம்பது லட்சமாக மாறி இருக்கும்.



அந்த சமயத்தில் நாம் சம்பாதித்து வைத்த தொகையை வீட்டு மதிப்புடன் பார்த்தால் மீண்டும் ஒரு ஐந்து ஆண்டுகள் வேலை செய்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும்.

இப்படியே கால தாமதம் ஆகி இறுதியில் ஒரு வீடு கட்டுவது ஒரு கனவாகி விடும்.

முதலீடுகளின் மதிப்பு காலத்துடன் சேர்ந்து கணிசமாக கூடுகிறது. ஆனால் நமது சம்பளம் அந்த அளவு கூடுவதில்லை என்பது தான் இங்கு ஒளிந்து இருக்கும் விடயம்.


இதனால் முதலீடுகளை முடிந்த அளவு முன்னரே செய்து விட்டால் நமது சேமிப்புடன் முதலீடுகளும் பல மடங்கில் தானாகவே அதிகரித்து வரும்.

அதற்கு வங்கிகள் வழங்கும் NRI வீட்டுக் கடன்கள் பெரிதும் உதவும்.

பொதுவாக வங்கிகள் 80% வரை வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. அதனால் இருபது லட்ச ரூபாய் மதிப்பிற்கு வீடு வாங்க திட்டமிட்டால் கையில் ஐந்து லட்ச ரூபாய் அளவு சேர்ந்த பிறகே வீடு வாங்க திட்டமிடலாம்.

ஆனாலும் NRIகள் வங்கி கடன் பெறுவதற்கு வங்கிகள் சில நிபந்தனைகள் விதிக்கின்றன. அதனை முன்னரே தெரிந்து விட்டால் திட்டமிட எளிதாக இருக்கும்.

SBI போன்ற அரசு வங்கிகள் வெளிநாடுகளில் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வேலை செய்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. அதே நேரத்தில் தனியார் வங்கிகளிடம் ஒரு வருடம் வேலை பார்த்து இருந்தாலே போதுமானது.

முன்பு தான் உள்நாட்டு இந்தியர்களுக்கும் NRIகளுக்கும் வட்டி விகிதங்களில் வேறுபாடு இருந்து வந்தது. ஆனால் தற்போது கிட்டத்தட்ட ஒரே வட்டி விகிதத்திலே கடன்கள் கிடைக்கின்றன.

இதில் சில வங்கிகள் குறைந்த பட்சம் 3000 அமெரிக்க டாலர்களை மாதமாக சம்பளம் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன.

இந்த வங்கிகளில் கடன் பெறுவதற்கு நமது பாஸ்போர்ட் நகல், விசா, மற்றும் பணியிட தகவல்கள் விவரங்கள் வங்கிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் கடைசி ஆறு மாதங்களில் வாங்கிய சமபள நகலும் சமர்ப்பிக்க வேண்டும்.

சில வங்கிகள் வெளிநாட்டு வங்கிகளில் நாம் வைத்து இருக்கும் வங்கி கணக்கு விவரங்களையும் கேட்கிறார்கள்.

உள்ளூரில் இருந்தால் வங்கிகள் இருபது வருடம் வரை வங்கி கடன் கொடுக்க தயாராக உள்ளன. ஆனால் வெளிநாட்டு இந்தியர்களுக்கு 15 வருடங்கள் தான் அதிகபட்சம். அதுவே நமக்கு போதுமானது. ஏனென்றால் பொதுவாக வெளிநாட்டில் எவரும் அவ்வளவு நீண்ட காலம் இருப்பதில்லை.

நாம் வங்கியில் வாங்கும் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு NRE அல்லது NRO வங்கி கணக்குகளை திறந்து வைப்பது அவசியமானது. அதன் மூலம் தான் மாத EMI செலுத்த வேண்டி வரும்.

ஒரு வேளை நாம் வாங்கிய கடனை முழுவதுமாக முன்னரே திருப்பி செலுத்த வேண்டும் என்றால் தனியார் வங்கிகள் மீதி அசல் தொகையில் 2% அளவு கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் அரசு வங்கிகளில் அந்த பிரச்சினை இல்லை.

இந்தியாவில் வாடகை போன்ற ஏதேனும் மூலங்களில் வருமானம் வருவதாக இருந்தால் இந்த வீட்டுக் கடன்களை வரி விலக்கிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கால தாமதமான முதலீடுகளை தவிர்ப்பதற்கு இந்த NRI வீட்டுக் கடன்கள் அதிக அளவில் பயனளிக்கும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக