வியாழன், 12 நவம்பர், 2015

அமெரிக்க குடியுரிமையை விடத் தயாராகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு கிடைத்து விட்டால் இந்தியர்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கு சென்றது போல் தான்.


மேல்தட்டு வாழ்க்கை, அமெரிக்க அரசின் சமூக பாதுகாப்பு உதவிகள், எளிதாக வேலை கிடைத்தல் என்ற சௌகரியங்கள் இருப்பதால் கிரீன் கார்டு மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது.



ஆனால் தற்போது நிலைமை மாறுகிறது. ஐம்பது சதவீதற்கும் மேல் கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.

அதற்கு வரி சம்பந்தப்பட்ட ஒரு ஒப்பந்தமும் முக்கிய காரணமாக போனது.

அமெரிக்காவை பொறுத்தவரை பல நாடுகளுடன் Foreign Account Tax Compliance Act (FATCA) என்ற ஒப்பந்தத்தை செய்துள்ளது.

இதன்படி அமெரிக்க பாஸ்போர்ட் வைத்து இருக்கும் யாவரும் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் வருமானத்தை கணக்கு காண்பிக்க வேண்டும். அதற்கு வரியும் செலுத்த வேண்டும்.

ஆனால் இந்தியாவுடன் FATCA ஒப்பந்தத்தை அமெரிக்க இது வரை செய்ததில்லை.

இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வைத்து இருந்தால் அதனைக் கண்டறிவது என்பது மிகக் கடினமான செயல்.

ஆனால் இந்த வருடம் இந்தியாவும் அமெரிக்காவுடன் FATCA ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் நிலைமை மாறி விட்டது.

இன்றைக்கு எமது டிமேட் கணக்கில் லாகின் செய்தால் நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவரா என்று சொல்லி ஒரு படிவத்தை நிரப்ப சொல்கிறார்கள். இதே போல் இனி அணைத்து வங்கிகளும் இந்த படிவத்தை நிரப்ப சொல்லலாம்.

இது ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கும் பொருந்தும். அதனை எப்படி ஆய்வு செய்வார்கள் என்று தெரியவில்லை.

ஆனாலும் ஒரு வேளை கண்டுபிடிக்கப்பட்டால் அமெரிக்க சட்ட விதி முறைகளில் இந்தியாவைப் போல் எளிதில் தப்ப முடியாது. ஏதேனும் வரி ஏய்ப்பு செய்து இருந்தால் 100% வரை அபராதம் விதிக்கப்படும். கடினமான நிலையில் சிறைத் தண்டனையும் கிடைக்கலாம்.

இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் வருமானத்திற்கு அமெரிக்காவில் 40% வரை வரி செலுத்த வேண்டி இருப்பதால் அமெரிக்க இந்தியர்கள் கிரீன் கார்டை திருப்பிக் கொடுத்து இந்திய பாஸ்போர்ட்டை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.



தங்களது உறவுகளின் பெயரில் சொத்துக்களை அல்லது முதலீடுகளை மாற்றி வைப்பது இதற்கு ஒரு தற்காலிக தீர்வு தரலாம். ஆனால் எவ்வளவு காலம் அப்படி அடுத்தவர்கள் பெயரில் முதலீடுகளை வைத்துக் கொள்ள முடியும் என்பது ஒரு யதார்த்தமான கேள்வி. அதே வேளை கணிசமான ஸ்டாம்ப் டுட்டி இந்திய அரசுக்கும் கொடுக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

கிரீன் கார்டு மேல் மோகம் மட்டும் கொண்டு செல்லாமல் பின்னர் எங்கு இருக்கப் போகிறோம், எதற்காக செல்கிறோம் என்பதை திட்டமிட்டு அதன் பிறகு இந்திய பாஸ்போர்ட்களை திரும்பி கொடுப்பது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்று.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக