வெள்ளி, 27 நவம்பர், 2015

வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.


எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.


ஆனால் இந்த ரிடர்ன் படிவங்கள் நமது நிதி நிலை குறித்த ஒரு நம்பிக்கையான ஆவணங்களாக இருப்பதால் இதன் தேவை பரவலாக பல வங்கி, அரசு அலுவலக வேலைகளில் தேவைப்படுகிறது என்பது ஒரு யதார்த்தமான உண்மை.

எந்தவொரு வங்கி கடன் எடுக்கும் போதும் கடந்த மூன்று வருட ஐடி ரிடர்ன் படிவங்களை கேட்கிறார்கள். இது போக, வெளிநாடுகளுக்கு செல்லும் போது விசா எடுப்பதற்கும் இந்த படிவங்கள் தேவைப்படுகிறது.

இது போக, கடந்த வருடம் முதல் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாதவர்களை Non-filers Monitoring System (NMS) என்ற கணினி அமைப்பின் பட்டியலுக்குள் இணைக்கவிருக்கிறார்கள்.

சமீப காலமாக இந்திய வருமான வரித்துறை நமது வங்கி கணக்குகளை பெரிய அளவிலான கணினி சர்வர்களை வைத்து கண்காணிக்கவும் தொடங்கி உள்ளார்கள்.

அதனால் ரிடர்ன் தாக்கல் செய்யாவிட்டால் வருமான வரித்துறை பிடியில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நம்மைக் கண்காணிப்பதும் அதிகம்.

தற்போது எல்லாமே ஆன்லைனில் பண்ணி விடலாம். முன்பு போல் ஆன்லைனில் நிரப்பிய படிவத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டிய தேவை கூட இல்லை. அந்த அளவு எளிதாக போனது. அதனால் ரிடர்ன் பதிவு செய்து கொள்வது மிகவும் நல்லது.

இது போக, கூடுதல் கொசுறு செய்தி. நமது ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிங் மூலமே வருமான வரி படிவத்தை நிரப்பிக் கொள்ள முடியும். OTP போன்ற தொல்லைகள் எல்லாம் கிடையாது. இந்த முறை வங்கி மூலம் ரிடர்ன் பைல் செய்தோம். மிகவும் எளிதாக இருந்தது.

பங்குச்சந்தையில் பணத்தை போட்டு நஷ்டம் அடைந்தவர்கள் அந்த தொகையை ரிடர்னில் குறித்துக் கொடுத்தால் அடுத்த வருடம் அந்த நஷ்டத்தில் கழித்து வருமான வரி கட்டினால் போதும்.

இப்படி அங்கங்கே பலன்கள் இருக்கத் தான் செய்கின்றன. அரை மணி நேர வேலை தான். கஷ்டம் பார்க்காமல் முடிப்பது நல்லது!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக