செவ்வாய், 24 நவம்பர், 2015

டெலிகாம் துறையில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்

அண்மைய அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலங்கள் டெலிகாம் துறையில் பெரிய நிறுவனங்கள் தான் செயல்பட முடியும் என்று காண்பித்து உள்ளன.


சர்வதேச அளவில் இந்திய அலைக்கற்றைகள் மிகவும் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டன என்று சொல்லலாம்.



மொபைல் துறையில் இங்கு எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியும், அதிக அளவிலான ஜனத்தொகையும் இந்த டிமண்டிற்கு முக்கியு காரணம்.

ஆனால் இந்த வளர்ச்சி என்பது ஓரிரு வருடங்களில் நடந்து விடக்கூடியது அல்ல. குறைந்த பட்சம் ஐந்து வருடங்களாவது பலனைப் பெற காத்திருக்க வேண்டும்.

இவ்வளவு கூடுதல் தொகை ஏலம் கொடுத்து வாங்கிய நிறுவனங்கள் கடுமையான நிதிச்சிக்கல் மற்றும் கடன்களில் மூழ்கியுள்ளன.

மிக அதிக அளவில் பணப்புழக்கம் உள்ள குழுமங்களால் தான் இந்த நிதிச்சிக்கலை சமாளிக்க முடியும்.

அதனால் சிறு நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை பெரிய நிறுவனங்களுக்கு விற்று காசை பார்ப்பதில் குறியாக உள்ளன.

அதில் ஒரு பகுதியாக வீடியோகான் நிறுவனம் தனது உத்திர பிரதேசம், குஜராத் மாநில ஸ்பெக்ட்ர உரிமத்தை ஐடியா நிறுவனத்திற்கு விற்று உள்ளது.

இந்த டீலின் மதிப்பு மூவாயிரம் கோடி ரூபாய். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏலத்தில் எடுக்கப்பட்ட போது 1200 கோடி அளவிற்கு தான் வாங்கப்பட்டது. 2014ல் நடைபெற்ற ஏலம் இந்த ஸ்பெக்ட்ரத்தை இரண்டு மடங்காக மதிப்பு கூட்டி விட்டது.

இந்த தொகை வீடியோகான் நிறுவனத்தின் கடனை அடைக்கப் பயன்படும் என்று தெரிகிறது. இதே நிலை தான் ஏர்செல் போன்ற சிறிய நிறுவனங்களுக்கும் உள்ளது.

அதிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் டெலிகாம் துறையில் குதிக்க உள்ளது. பணபலம் மிக்க ரிலையன்ஸ் குழுமம் ஆரம்ப கட்டங்களில் நஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் நல்ல சலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களை பிடிக்க உள்ளார்கள்.

அதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற பெரிய நிறுவனங்களே கொஞ்சம் ஆடிப் போய் தான் உள்ளன. அதில் சிறு நிறுவனங்கள் நசுக்கப்பட அதிகம் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதனால் இந்த சிறு டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதே போல், டெலிகாம் துறையில் பெரிய நிறுவனங்களில் குறைந்த பட்சம் ஐந்து வருட கால நோக்கில் முதலீடை வைத்து இருந்தால் அதிக பலனை பார்க்கலாம். ஆனால் குறுகிய காலத்தில் பெரிய உயர்வுகளை எதிர்பார்க்க முடியாது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக