புதன், 18 நவம்பர், 2015

எஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு

இன்றும் இந்தியாவில் 40% மக்கள் வங்கி சேவைகளை பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.


அதனால் ரிசர்வ் வங்கி முடிந்த அளவு வேகமாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருக்கிறது.அதன் ஒரு பகுதியாகத் தான் கடந்த சில வருடங்களாக பல புதிய வங்கிகள், பேமென்ட் வங்கி என்று புதிய அனுமதிகளை கொடுத்து வருகிறது.

ஆனாலும் புதிய வங்கிகள் பெரும்பாலும் தனியார் வங்கிகளாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும் நகர்ப்புறங்ளையே குறி வைக்கின்றன. கிராமங்கள் மற்றும் தொலை தூர பிரதேசங்களுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.


இதனால் அரசு வங்கிகள் மூலமாக வங்கிகளை கிராமப்புறங்களுக்கு எடுத்து செல்லும் திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

இதனை KISOK வங்கி என்று அழைக்கிறார்கள். புரிகிற வகையில் மினி வங்கி என்றும் அழைக்கப்படுகிறது. தனி நபர்களும் அரசு வங்கிகளின் கிளை போல் ஒரு சிறிய வங்கியை தங்கள் ஊர்களில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் விசேசம் என்னவென்றால் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றவர்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி இந்த திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த துவங்கி உள்ளது.

அதாவது, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தங்கள் ஊரில் 200 சதுர அடி உள்ள இடம் இருந்தால் இந்த மினி வங்கிகள் அமைத்துக் கொள்ளலாம்.

இந்த மினி வங்கிகளில் மூலம் வங்கி கணக்குகளை திறந்து கொள்ளலாம். அது போல மற்ற வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பிக் கொள்ளலாம்.

அதே போல், எஸ்பிஐ மூலம் வழங்கப்படும் PPF, NSC பத்திரங்கள், இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு திட்டங்கள் போன்றவற்றையும் மினி வங்கி மூலம் விற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமாக கமிசன் எஸ்பிஐ வங்கி மூலம் வழங்கப்படும். மாதம் 20,000 முதல் 30,000 வரை வருமானம் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

சிறிய வங்கி வேலைகளுக்கு கூட பஸ் பிடித்து நகரங்களுக்கு செல்லும் மக்கள் இந்த வங்கிகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிக நேரம் நீண்ட வரிசைகளில் நிற்கவும் தேவையில்லை.

இந்த வங்கிகளில் திறக்கப்படும் கணக்குகளுக்கு no-frills account என்று அழைக்கிறார்கள். இதில் மினிமம் பேலன்ஸ் எதுவும் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் 50,000 ரூபாய் வைத்துக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 10,000 ரூபாய் வரை மற்றவர்களுக்கு பணம் அனுப்பிக் கொள்ளலாம். அவசர தேவைகளுக்கு பணம் அனுப்பவர்கள், தேர்வு பணம் அனுப்புவார்கள் இந்த சேவைகளை பயன்படுத்தலாம்.

எஸ்பிஐயின் வீட்டுக் கடன்கள் போன்ற சேவைகளுக்கும் இந்த மினி வங்கி முகவர் போன்று செயல்படும்.அதே நேரத்தில் எஸ்பிஐ தங்களை சாராத பணிகளுக்கும் இந்த மினி வங்கி மூலம் அனுமதி அளிக்கிறது. உதாரணத்திற்கு மின்சார கட்டணம் செலுத்துதல், பஸ், ரயில் டிக்கெட் புக் செய்தல், மொபைல் ரீசார்ஜ் செய்தல் போன்ற கணினி சார்ந்த மற்ற வேலைகளையும் செய்து கொள்ளலாம்.

இந்த மினி வங்கி சேவைகளை ஆரம்பிப்பதற்கு நகர்ப்புறங்களில் இருந்தால் 25,000 ரூபாயும் கிராம புறமாக இருந்தால் 15,000 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன் பிறகு எஸ்பிஐ மினி வங்கி என்று பொறித்த தகவல் பலகை நமது பெயருடன் எஸ்பிஐ வங்கி சார்பில் வழங்கப்படும்.

நல்ல திறனுடன் கூடிய கணினி, ஒரு பிரிண்டர், ஒரு ஸ்கேன்னர், ஒரு வெப் கேமரா போன்றவை மினி வங்கி தொடங்க தேவையான முக்கிய முதலீடுகள். மொத்தமாக ஒரு லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கலாம்.

அரசு வங்கி எஸ்பிஐ என்பதால் நம்பிக்கையான சுயதொழில் வாய்ப்பு. எஸ்பிஐ மூலம் கிளை வைத்து இருப்பதால் வாடிக்கையாளர்களும் நம்மை நம்புவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கலாம்.
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/business-correspondent-bc-arrangement 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படாத ஒரு நல்ல சுயதொழில் வாய்ப்பு. முதல் நாளில் இருந்து வருமானமும் ஈட்டிக் கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: