திங்கள், 23 நவம்பர், 2015

தனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்? (ப.ஆ - 48)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

பார்க்க: பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

கடந்த வாரம் எமது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது சென்செக்ஸ் P/E மதிப்பு 19க்கு அருகில் வரும் போது முதலீடு செய்வதாக கூறினார்.


அவர் கூறிய நிறுவனங்களை பார்த்தால் எல்லாமே மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்கள் தான். சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் எந்த நிறுவனமும் அதில் வரவில்லை.

அதனால் உங்கள் நிறுவனங்கள் தான் சென்செக்ஸ் நிறுவனங்கள் பட்டியலிலே வரவில்லை. அப்புறம் எதற்கு அதனை அடிப்படையாக வைத்து காத்திருக்க வேண்டும் என்று கேட்டோம்?

அந்த கேள்வியும் அதன் பிறகு வந்த ஒரு செய்தியும் தான் இந்தக் கட்டுரைக்கும் காரணமாக அமைந்தது.

இன்று வந்த செய்தியை பார்த்தால் சென்செக்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து வேதாந்தா மற்றும் ஹிண்டால்கோ என்று இரண்டு நிறுவனங்களும் நீக்கப்படுகின்றன.

அதற்கு பதிலாக அடானி போர்ட், ஆசியன் பெயிண்ட் நிறுவனங்கள் பட்டியலில் நுழைகின்றன.

இதனால் என்னவொரு விந்தை ஆகிறது என்றால் இதுவரை சென்செக்ஸ் நிறுவனங்களின் P/E மதிப்பு 21க்கு அருகில் இருந்து வந்தது. அது உடனே 19க்கு அருகில் வரவுள்ளது.

காரணம் என்னவென்று பார்த்தால்,

சென்செக்ஸ் புள்ளிகள் என்பது மும்பை பங்குசந்தையில் அதிக சந்தை மதிப்புள்ள 30 நிறுவனங்களின் பங்கு விலைகளை வைத்துக் கணக்கிடப்படுகிறது.

அது போல், சென்செக்ஸ் P/E மதிப்பும் இந்த நிறுவனங்களின் லாப அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது.

ஆனால் கடந்த சில வருடங்களாக உலோகத்துறையில் ஏற்பட்டுள்ள மந்தத்தன்மை காரணமாக வேதாந்தா, ஹிண்டால்கோ போன்ற நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தன, இந்த நஷ்டங்கள் சென்செக்ஸ் புள்ளிகளையும் ஆட்டிப் படைத்தது வந்தது.

ஆனால் தற்போது இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு அடானி, ஆசியன் நிறுவனங்களை விட குறைந்து விட்டதால் அந்த நிறுவனங்கள் உள்ளே நுழைந்து விட்டன.

லாபத்தில் சென்று கொண்டிருக்கும் அந்த நிறுவனங்கள் சென்செக்ஸ் EPS வருமானத்தைக் கூட்டி விட்டன. அதனால் P/E மதிப்பும் கீழே குறைந்து மலிவு விலைக்கு வந்து விட்டது.

தற்போது பல வளரும் நாடுகளின் சந்தைகளோடு பார்க்கும் போது நமது சந்தை மலிவாக உள்ளது.

அப்படி என்றாலும் சில நீக்கலும் சேர்த்தலும் தான் நமது சந்தையை மலிவாக கொண்டு வந்துள்ளது. ஆனால் அடிப்படை மாறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது சந்தைக்குள் உள்ளே நுழையும் முன் மற்ற சந்தைகளுடன் ஒப்பிட்டு மலிவாக உள்ளதா இல்லையா என்று பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்த புள்ளிகள் மாறுபாட்டை தரலாம்.

அதே போல் தினமும் ட்ரேடிங் செய்பவர்களுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் மதிப்பீடல் அடிப்படையில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் மற்றும் இந்த நீக்கல்கள் பெரிய அளவு மாற்றம் தராது.

அதனால் முதலீடு என்று வரும் போது சென்செக்ஸ் புள்ளிகளை விட நிறுவனங்களின் P/E, P/B போன்ற மதிப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக