செவ்வாய், 3 நவம்பர், 2015

பங்குச்சந்தையில் RoE ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? (ப.ஆ - 47)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
500 ரூபாய்க்கு குறைவாக பங்கினை பிரிக்க முடியாது (ப.ஆ - 46)

பொதுவாக பங்குகளை தேர்ந்தெடுக்கும் போது Price-To-Earning(P/E) என்ற விகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது.



முன்பு ஒரு பதிவில் P/E என்றால் என்ன என்றும், அதனை வைத்து ஒரு பங்கினை எப்படி மதிப்பிடுவது என்பது பற்றியும் விரிவாக எழுதி இருந்தோம்.

பார்க்க: P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

சுருக்கமாக சொனால், பங்கின் விலையை நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்துடன் ஒப்பிடுவதற்கு இந்த P/E விகிதம் பெரிதும் உதவுகிறது.

ஆனாலும் இந்த விகிதம் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை திறன், திட்டமிடல் மற்றும் வரலாற்று மதிப்பீடல்கள் போன்றவற்றை புறந்தள்ளி விடுவதால் சில சமயங்களில் தவறாகவும் சென்று விடுகிறது.

பத்து கோடி பணத்தில் ஒரு நிறுவனம் ஒரு கோடி ஆண்டு வருமானம் ஈட்டுவதற்கும், ஐந்து கோடி பணத்தில் ஒரு நிறுவனம் ஒரு கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.

அதில் தான் ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்திறன் வெளிப்படுகிறது.

இந்த விடயங்களை கருத்தில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விகிதம் தான் Return on Equity (RoE) என்பது.

அதாவது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட லாபத்தை சம்பாதிப்பதற்கு எவ்வளவு சொத்து அல்லது முதலீடு தேவைப்படுகிறது என்பதை இந்த விகிதம் தெளிவாக உணர்த்தும்.

கீழே உள்ள சூத்திரம் மூலம் இந்த விகிதத்தை கணக்கிடலாம்.

Return on Equity = Net Income / Shareholder's Equity
Return on Equity = மொத்த வருமானம் / பங்குதாரர்களின் முதலீடு

இதில் பங்குதாரர்களின் முதலீடு என்பது பங்குகளின் மொத்த மதிப்பு மற்றும் நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள பணம் என்ற இரண்டையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.

உதாரணத்திற்கு Amara Raja Batteries என்ற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

இந்த நிறுவனத்தின் மொத்த பங்குதாரர்களின் முதலீடு மார்ச் 2015 முடிந்த நிதி ஆண்டில் 1699 கோடியாக இருந்தது. அதே சமயத்தில் அந்த ஆண்டில் இந்த நிறுவனம் 410 கோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்து இருந்தது..

(இந்த இரண்டு மதிப்புகளையும் Moneycontrol தளத்தின் இந்த இணைப்புகளில் எடுத்துள்ளோம். 1.ARB மொத்த வருமானம், 2.ARB பங்குதாரர்களின் முதலீடு)

அப்படி என்றால்,
RoE = 410/1699 = 24% என்று வருகிறது.

அதாவது நூறு ரூபாய் முதலீடு செய்தால் இந்த நிறுவனம் 24 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த RoE விகிதம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு நிறுவனத்தின் நிர்வாகம் திறன்பட செயல்படுகிறது என்று கருதிக் கொள்ளலாம்.

பொதுவாக வேகமாக வளரும் நிறுவனங்களில் இந்த RoE விகிதம் அதிகமானதாக இருக்கும்.

Amara Raja நிறுவனம் கார், டெலிகாம் மற்றும் UPS போன்றவற்றிற்கு பேட்டேரிகளை தயார் செய்யும் ஒரு நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை இதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டால் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது இன்னும் தெரிய வரும்.

அதனால் முன்னணியில் இருக்கும் EXIDE Industries நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இரண்டிற்கும் வியாபரத் தன்மையில் பெரிதளவு வித்தியாசம் இல்லை. அதனால் ஒப்பிடுதலும் எளிது.

EXIDE நிறுவனத்தின் மொத்த முதலீடு மதிப்பு 4031 கோடியாக மார்ச் 2015 முடிந்த நிதி ஆண்டில் இருந்தது. அதே வருடத்தில் 907 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து இருந்தது.

இதன்
RoE = 545/4031 = 13.6% என்று வருகிறது.

அதாவது நூறு ரூபாய் முதலீடு செய்தால் இந்த நிறுவனம் 13 ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

EXIDE நிறுவனம் Amara Rajaவை விட அதிக லாபம் சம்பாதித்தாலும் அந்த லாபத்தை சம்பாதிப்பதற்கு அது எடுத்துக் கொண்ட முதலீடு அமர ராஜாவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.

இதில் தான் Amara Rajaவின் நல்ல நிர்வாகத் திறமை வெளிப்படுகிறது.

அதனால் தான் 2013ம் ஆண்டு இறுதியில் பகிரப்பட்ட இலவச போர்ட்போலியோவில் Amara Raja பரிந்துரை செய்து இருந்தோம். 320 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்பட இந்த பங்கு இன்று 900 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது.

ஆனால் அதே காலக்கட்டத்தில் 135 ரூபாய்க்கு வர்தகமாகிக் கொண்டிருந்த EXIDE பங்கு இன்று 150 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. EXIDE நிறுவனத்தின் லாபம் அதிகமாக இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பெரிதளவு பலன் தரவில்லை.

இன்னும் EXIDE நிறுவனத்தின் P/E மதிப்பு Amara Rajaவை விட நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அமர ராஜாவின் நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக அதன் பங்கு விலை நல்ல ப்ரீமியத்தில் சென்று கொண்டிருக்கிறது.

நீண்ட கால முதலீட்டில் இருக்கும் சிலர் மட்டும் எப்படி பங்கு முதலீடுகளை மடங்குகளில் பெருக்கிறார்கள் என்பது இந்த மாதிரியான சூத்திரங்களில் தான் ஒளிந்து கிடக்கிறது.

நாம் பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் வாயிலாக விவரிக்கும் சூத்திரங்களை எளிதாக்குவதற்காக stockcalculation.com என்ற தலத்தில் கால்குலேட்டர் வடிவத்தில் இணைத்து வருகிறோம். அதில் RoE கால்குலேட்டரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பை பார்க்க:
http://www.stockcalculation.com/2015/11/return-on-equity.html

இன்னும் ஒவ்வொரு சூத்திரத்தை பற்றி விளக்கும் போதும் அடுத்தடுத்த கால்குலேட்டர்களை இணைக்கிறோம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
தனிப்பட்ட முதலீடுகளுக்கு சென்செக்சை எவ்வளவு அடிப்படையாக வைக்கலாம்? (ப.ஆ - 48)

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக