வியாழன், 26 நவம்பர், 2015

மீண்டும் பார்லிமென்ட் கூட்டம், GST நிறைவேறுமா?

இன்று நாடாளுமன்ற மழை கூட்டத் தொடர் கூடுகிறது.

கடந்த சீசனில் சுஷ்மா சுவராஜ் தொடர்பான அமளியிலே கூட்டத் தொடர் முழுவதும் வீணானது.



அதன் பிறகு சிறப்புக் கூட்டம் ஏதாவது நடத்தி GST மசோதா கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிஜேபி-காங்கிரஸ் கட்சிகளின் அக்கப்போர் தொடர்ந்து கொண்டே இருந்ததால் எதுவும் நடக்கவில்லை.

காங்கிரஸ் ஒரு பக்கம் அவர்களால் கொண்டு வரப்பட்ட GST மசோதாவையே  எதிர்த்து எதிர்ப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போக செய்தது.

அதே நேரத்தில் பிஜேபி அரசியல் ராஜ தந்திரம் ஏதும் இல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தது.

ராஜ்யசபாவில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாதது என்பது இப்பொழுது மட்டும் இருந்ததில்லை. கடந்த இருபது வருடங்களாகவே தொடர்ந்து தான் வருகிறது.

ஆனால் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் நடத்தும் பேச்சு வார்த்தைகளே இது வரை பல மசோதாக்கள் நிறைவேறுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இதனை இந்த தொடர் துவங்கும் முன்னரே பிஜேபி புரிந்து கொண்டது என்றே தெரிகிறது. அதனால் தான் பிரதமர் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இருந்தது.

இந்த முறை காங்கிரஸ் கட்சி தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் நாங்கள் மசோதாவிற்கு ஆதரவு தருவோம் என்று கூறி உள்ளனர். இதனை ஓரளவு மென்மையான போக்கு என்றே கருதலாம்.

கடந்த முறை காங்கிரஸ் கட்சி செய்த அமளி அவர்கள் பெயரை மேலும் கெட செய்தது. மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒன்று கூடி ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு கேட்டதும் சூழ்நிலையை மாற்ற உதவலாம்.

அந்த நம்பிக்கையின் காரணமாக இன்று சந்தையும் உயர்விலே காணப்பட்டது.

GST வரி நடைமுறைக்கு வரும் போது நுகர்வோர் முனையில் மட்டும் வரி விதிக்கப்படும். உற்பத்தி வரி, சுங்க வரி என்ற பல முனை வரி விதிப்புகள்  தவிர்க்கப்படும்.

இதனால் பிராண்ட் இல்லாமல் லோக்கலில் உறபத்தியாகும் பொருட்களும் வரி விதிப்புக்குள் வரும். அதே நேரத்தில் பிராண்ட் நிறுவனங்களுக்கு பல முனை வரி காணாமல் போவதால் அவர்களுக்கு வரிகள் குறைந்து விடும். இதனால் பொருட்கள் விலை குறையும். அவர்கள் சந்தை விரிவாக்கத்திற்கும் பெரிது உதவும்.

அதாவது சில்லறை முறையில் விற்பனை செய்யப்படும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் பிராண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் பயன் பெறும்.

மொத்தத்தில் இந்த GST வரி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், காலனி நிறுவனங்கள், பிஸ்கட் நிறுவனங்கள், ஆட்டோ நிறுவனங்கள் போன்றவற்றிற்கு அதிக அளவு பயன் கொடுக்கும்.

GST வரி நிறைவேற்றப்படுமாயின் டிசம்பர் மாத தினங்களில் சென்செக்ஸ் புள்ளிகளில் கணிசமான உயர்வை பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக