ஞாயிறு, 8 நவம்பர், 2015

நிதிஷ் வெற்றியும், நாளைய பங்குச்ச்சந்தையும்..

இன்று பீகார் மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட இந்தக் கூட்டணி கலைஞர், அம்மா இணைந்து கூட்டணி அரசு அமைந்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இருக்க வாய்ப்புள்ளது. நிதிஷ், லல்லு என்று இரண்டு பேருமே சம பலம் பெற்றவர்கள். அதனால் குடைச்சல்களுக்கு பஞ்சம் இருக்காது.



ஆனால்  சந்தையை பொறுத்த வரை பிஜேபியுடன் தொடர்பு படுத்தி தான் இந்த முடிவுகள் பார்க்கப்படும்.

லோக்சபா தேர்தலை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அதிக அளவில் ராஜ்யசபா எம்பிக்களை பெறலாம் என்று பிஜேபி எதிர்பார்த்து இருந்தது. முடங்கி கிடக்கும் மசோதாக்களுக்கு இது தான் ஒரு நிரந்தர வழியாகும் என்று நினைத்து இருந்தது. அதன்படியே ஹரியானா, மஹாராஷ்டிரா என்று பல மாநிலங்களில் தொடர்ச்சியாக வெற்றியை பெற்று வந்தது.

இந்த நிலையில் பார்லிமெண்ட் தேர்தலுக்கு பிறகு ஒரு பெரிய மாநிலத்தில் பிஜேபி அடையும் முதல் தோல்வி இது என்பதால் பீகார் அதிக அளவில் உற்று நோக்கப்படுகிறது.

பீகார் போன்ற பெரிய மாநிலத்தில் அதிக அளவு ராஜ்யசபா எம்பிக்கள் இருப்பதால் இந்த தோல்வி என்பது மத்திய அரசை நடத்துவதற்கு அவர்களுக்கு ஒரு பின்னடைவே ஆகும். அதிலும் ஏற்கனவே இருந்த எம்எல்ஏக்களையும் இழந்து இருப்பதால் அங்கிருந்து வரும் ராஜ்யசபா எம்பிக்கள் எண்ணிக்கை இனி குறையவே வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல்கள் வர உள்ளது. இந்த மாநிலங்களில்  பிஜேபி குறைந்த பட்ச வலு கூட இல்லாமல் உள்ளது. இதனால் பெரிய அளவில் ராஜ்யசபா பலத்தை குறுகிய காலத்தில் நிலை நிறுத்துவது என்பது கடினமே.

தற்போது மோடி அரசு மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளை அரவணைத்து செல்வது கட்டாயமாக மாறி உள்ளது. இனி இந்த ராஜதந்திர நிலைகளில் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இதனால் சந்தை குறுகிய காலத்திற்கு எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவே வாய்ப்பு உள்ளது. நாளைய சந்தையில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை தாழ்வு நிலை எதிர்பார்க்கலாம்.

இருந்தாலும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்கள் இந்த சரிவுகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக