சனி, 31 அக்டோபர், 2015

மோடியின் ஆட்சிக்கு மூடி தரும் எச்சரிக்கை

தினசரிகளில் வரும் முக்கிய செய்திகளை பார்த்தால்  மாட்டுக் கறியைப் பற்றியதாகத் தான் உள்ளது.


அந்த அளவிற்கு மாட்டுக் கறியைப் பிரபலப்படுத்தியதற்கு பெரும் பங்கு பிஜேபி எம்பிக்களுக்கு உள்ளது என்று சொனால் மிகையாகாது.



அவர்களுக்கு போட்டியாக அதே கொள்கைகளுடைய சிவசேனாவும் ஏட்டிக்கு போட்டியாக வம்பு செய்தவதால் செய்தி தாள்களிலும் டிவி விவாதங்களிலும் அவர்களே அவ்வளவு இடத்தையும் ஆக்கிரமித்து கொள்கின்றனர். மற்றவர்கள் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.

கடந்த பிஜேபியின் வாஜ்பாய் ஆட்சியில் இந்த மாதிரியான வலது சாரிக் கொள்கைகள் கட்டுக்குள்ளே இருந்து வந்தன. அதனால் வளர்ச்சியும் தடை இல்லாமல் சென்று வந்தது.

ஆனால் மோடி ஆட்சியைப் பொறுத்தவரை ஆள், ஆளுக்கு போட்டி போட்டுக் கொண்டு நாங்கள் சொன்னதை சாப்பிட்டால் இங்கே இரு, இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு செல் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் ஒரு மாநில முதல்வரே சொல்லும் போது சகிப்புத்  தன்மையின் அளவு எவ்வளவு குறைந்து வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.

மோடியை பொறுத்த வரை இரண்டு கால்களையும் வேறு பாதைகளில் வைத்துக் கொண்டு வளர்ச்சி கோஷம் எழுப்பி வருகிறார் என்று சொல்லலாம்.

வெளிநாட்டில் சென்றால் வளர்ச்சி என்று சொல்வதும், உள்நாட்டில் அவர் கட்சியினர் செய்யும் அழிச்சாட்டியங்களை கண்டு கொள்ளாமல் தீவிர வலது சாரி சிந்தனையாளராக இருப்பதும் இலக்கை அடைய உதவாது. வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கத் தான் உதவும்.

ஒரு அடிக்கு வளர்ச்சியை பற்றி சிந்தித்தால் இரண்டு அடிக்கு அவரது கட்சி எம்பிக்கள் பின்னோக்கி இழுத்து செல்கின்றனர்.

ஒரு நாட்டில் உள்நாட்டு பிரச்சினைகள் அதிகரிக்குமாயின் வளர்ச்சி சரியான வேகத்தில் இருக்காது. தேவையில்லாத பிரச்சினைகளுக்கு தான் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும்.  இதைத் தான் நிதி தர வரிசை கொடுக்கும் மூடி நிறுவனம் எச்சரித்துள்ளது.

வளர்ச்சி தடைப்படுமாயின் நமது நிதி தர வரிசை குறையும். அதன் பிறகு வெளியே கடன் வாங்குவதற்கு கூட நாம் அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும். தற்போதைய நிலையில் இது தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

மற்றவர்களை மாட்டுக் கறி சாப்பிட்டால் இங்கு இருக்கக் கூடாது என்று சொல்லும் போது தலிபான்களின் பிற்போக்கு சிந்தனைகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசத்தை உணர முடியவில்லை.

உண்மையில் நாட்டுப் பற்று இருக்குமானால் ஆக்கப் பூர்வ வளர்ச்சிக்கு பிஜேபி எம்பிக்கள் உதவ வேண்டும்.

பல நல்ல மசோதாக்கள் பார்லிமெண்டில் எதிர்க்கட்சி அரசியலால் முடங்கி கிடக்கின்றன. அவர்களது அரசியல் ராஜ தந்திரங்களை அங்கு காட்டி வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்.

இதனை பாதை மாறும் போது மூடி நிறுவனம் கொடுத்த ஒரு துணிச்சலான எச்சரிக்கை என்றே சொல்லலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக