வெள்ளி, 27 மார்ச், 2015

ஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின்றன?

தற்போது நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 900MHz என்ற அலைக்கற்றை வரிசை எதிர்பார்த்த ஏல தொகையை விட 100% அதிக தொகையில் போனதாம்.


ஒரு ஆச்சர்யம் இருக்கலாம். ஏன் 900MHzக்கு மட்டும் அவ்வளவு போட்டி என்று.


காரணம் இல்லாமலும் இல்லை. நீங்கள் டெலிகாம் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக இருந்தால் கட்டாயம் தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும்.

இதனை கொஞ்சம் டெக்னிக்கலாக அணுகுவோம். டெக்னிக்கல் என்பதால் முடிந்த வரை போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

ஒருவர் பேசும் போது அது மற்றவருக்கு கேட்கிறது என்றால் அதற்கு அடிப்படை காரணம் அதிர்வலைகள். நாம் பேசும் பேச்சு காற்றில் அலைகளாக மிதந்து மற்றவரை அடைகிறது.

அதே போல் மொபைலில் நாம் பேசும் போது நமது பேச்சு அதிர்வலைகளாக மாற்றப்பட்டு ஒவ்வொரு டவர் வழியே சென்று கேட்பவரை அடைகிறது.

விரிவாக விளக்கம் வேண்டும் என்றால், தற்போது வந்துள்ள தமிழுக்கு எண்  ஒன்றை அழுத்தவும் என்ற படத்தை பார்க்கவும். இது தொடர்பாக நிறைய சொல்லி இருப்பார்கள்.



ஒவ்வொரு டவரும் தமக்கு வரும் அலைகளை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் சில அதிர்வு வரிசைக்கு(Frequency) ட்யூன் செய்யப்பட்டிருக்கும்.

இந்த Frequencyயை இஷ்டத்திற்கு பயன்படுத்த முடியாது. அதற்கு மத்திய அரசிடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டும். அதற்கு தான் ஏலமும் நடக்கிறது.

இந்திய அரசு 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz போன்ற அலை வரிசைகளை மொபைல் தொழில் நுட்பத்திற்காக ஒதுக்கியுள்ளது.

இதில் தான் 900 MHz வரிசைக்கு மட்டும் அவ்வளவு டிமேண்ட்.

ஏன் என்று பார்த்தால்,

800 MHz ஏற்கனவே CDMA நிறுவனங்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு விட்டது. அதில் மற்ற நிறுவனங்கள் போட்டி போட முடியாது. CDMA வாடிக்கையாளர்களும் பெரிய அளவில் இல்லாததால் இங்கு போட்டி குறைவு.

இதனால் வாடிக்கையாளர் அடிப்படையில் பார்த்தால் மற்ற மூன்று அலைவரிசைகளுக்கு அதிக நிறுவனங்கள் போட்டி போடும்.

இந்தியாவில் அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு
(பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும் )

அறிவியல் படி, அதிக அதிர்வு (Frequency) கொண்ட அலைகள் நீண்ட தூரம் செல்ல முடியாது. அதனால் 1800 MHz மற்றும் 2100 MHz கொண்ட அலைக்கற்றைகளை விட 900 MHz அலை அதிக தூரத்திற்கு செல்லும்.

குடித்துக் கொண்டு தள்ளாடி போகிறவன் நீண்ட தூரம் செல்ல முடியாது என்பதை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் அதிக அதிர்வு கொண்ட 1800 MHz அலைவரிசையை பயன்படுத்தினால் ஒவ்வொரு குறுகிய தூரத்திற்கும் டவர் வைத்து சிக்னல்களை பூஸ்ட் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் 900 MHz அலை தானாகவே அதிக தூரத்திற்கு செல்லும் வலிமை படைத்ததால் நீண்ட தூரத்திற்கு ஒரு முறை டவர் வைத்தால் போதுமானது.

ஒரு கணக்கின் படி, இந்தியாவில் 900 MHz அலைக்கற்றையை விட 1800 MHz அலைவரிசையில் 1,50,000 டவர்கள் அதிகமாக தேவைப்படும். இதற்கான செலவு மிகவும் அதிகம் என்பதால் எல்லா நிறுவனங்களும் 900 MHz அலைக்கற்றையை நோக்கி ஓடுகின்றன.

இது தவிர 1800 MHz அலைக்கற்றைகள் சுவர்களை தாண்டி செல்லும் வலிமை படைத்தது இல்லை. இதனால் வீட்டுக்குள் பேசும் போது சிக்னல் தரமாக இருக்கும் வாய்ப்பு குறைவு.

இறுதியாக உலகம் முழுவதும் 900 MHz என்பது பொதுவானதாக உள்ளது. இதனால் அதற்கான உபகரணங்களும் மலிவாக கிடைக்கும். அதே நேரத்தில் மற்ற அலை வரிசைக்கு நிறுவனங்கள் அதிக செலவு வேண்டியிருக்கும்.

இப்படி பல காரணங்களால் தான் காற்றும் கணிசமான விலைக்கு விலை பேசப்படுகிறது.

இந்த மதிப்பில்லாத ஸ்பெக்ட்ரத்தை தான் ராஜா ரேஷன் கடை போல் முதலில் வந்தவங்களுக்கு கொடுத்தேன் என்று சொல்லி மாட்டிக் கொண்டார்.

அடுத்த கட்டுரையில் தற்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் எந்த நிறுவனத்திற்கு அதிக பயன் கொடுக்கும் என்று விவரமாக பார்க்கலாம்.

இதுக்கு மேல் சந்தேகம் இருந்தால் கீழே கூகிள் ஆண்டவரிடமும் தேடிக்குங்க..


தொடர்புடைய கட்டுரைகள்:
ஸ்பெக்ட்ரம் ஏலத்தால் ஏறும் டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமை

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்: