திங்கள், 30 மார்ச், 2015

பங்கினை பிரிப்பதற்கும், போனஸ் பங்கு கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 39)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

கடந்த வருடம் சந்தையில் ஏற்பட்ட உயர்வால் நிறைய பங்குகள் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளன.


ஆமாம். 1000 ரூபாயில் இருக்கும் பங்குகள் 4000 ரூபாயும் அடைந்துள்ளன. இதனால் குறைந்த தொகையில் முதலீடு செய்பவர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்ய யோசிக்கவே செய்வார்கள்.

இதற்காக இந்த பங்குகள் மேலும் உயராது என்று அர்த்தமில்லை. எல்லாரும் வாங்குமளவில் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக தான் Stock Split, Bonus Share என்று இரண்டு வழிமுறைகள் உள்ளன.

இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் வித்தியாசம். ஆனால் அந்த கோடு நிறைய விவரங்களை தரும்.

இரண்டின் முக்கிய நோக்கமும் ஒரு பங்கின் விலையைக் குறைத்து நிறைய பேரை வாங்க வைப்பது. தான்

இதனை Stock Split எளிதாக செய்து விடுகிறது. ஒரு பங்கின் விலையை குறை மதிப்புகளாக எளிதாக பிரித்து விடுவார்கள்.

ஆனால் நிர்வாக அளவில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. Stock Split செய்வதற்கு நிறுவனம் லாபத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் அவசியமில்லை. நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் கூட செய்யலாம்.

நஷ்டத்தில் இருந்தாலும் பங்கை பிரித்துக் கொள்ளலாம்.


நூறு ரூபாயை இரண்டு ஐம்பது ரூபாய்களாக சில்லறை மாற்றுவதற்கு கோடீஸ்வரனாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது தான் Stock Split.

ஆனால் Bonus Share என்ற ஒன்றை கொடுக்கும் போது நிறுவனம் கடன் ஏதுமில்லாது லாபத்தில் சென்று அதிக அளவு உபரி பணத்தை கையில் வைத்து இருக்க வேண்டும் என்பது அவசியமானது.

எப்படி என்றால்,

ஒவ்வொரு வருடமும் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் போது லாபத்தின் ஒரு சிறிய பகுதி தொகை தான் டிவிடென்ட்டாக பகிரப்படுகிறது.

மீதி லாபத்தை மீண்டும் விரிவாக்கங்கள் செய்வதற்கு நிறுவனம் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த லாபம் பங்கு விலை கூடும் போது முதலீட்டாளர்களுக்கு எதிரொலிக்கும்.

ஒரு வேளை இந்த மீதி லாபத்தை அப்படியே கையிருப்பு காசாகவும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பணம் சேரும் போது நிறுவனம் இந்த உபரி பணத்தை முதலீட்டாளர்களுக்கு பங்குகளாக கொடுக்க விரும்பும். இதை தான்  Bonus Share என்று அழைக்கிறோம்.

வெளிப்படையாக பார்த்தால் இதில் போனஸ் என்பது இலவசமில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பங்கு விலை என்பது ஏற்கனவே நிறுவனத்தின் நிதி நிலைமைக்கு தக்கவே மாறுதலாகி இருக்கும். நிறுவனம் அங்கு இருக்கும் பணத்தை இங்கு எடுத்து வைத்து விட்டதால் மட்டுமே நிறுவனத்தின் மொத்த மதிப்பில் மாறுதல் ஏதுமில்லை.

இந்த சமநிலையை ஏற்படுத்துவதற்காக போனஸ் பங்கு அறிவித்தவுடன் அதே விகிதத்தில் பங்கு விலையும் குறைந்து விடும்.

இப்படி ஏதும் லாப காசு இருந்தால் தான்
போனஸ் பங்கு கொடுக்க முடியும்

ஆனால் Bonus Share நடவடிக்கை எமது நிறுவனத்தில் கடன் எதுவும் இல்லை, தேவையான அளவு பணம் இருக்கிறது, நல்ல வளர்ச்சியில் சொல்கிறது என்பதை சொல்லும் சிக்னலாக சந்தையில் பார்க்கப்படும்.

இதனால் எதிர்காலத்தில் பங்கு விலை வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

நூறு ரூபாயை இரண்டு ஐம்பது ரூபாய்களாக மாற்றி, அதே பிரித்துக் கொடுத்த ஐம்பது ரூபாய்கள் மீண்டும் நூறு ரூபாயாக மாறும் என்ற நம்பிக்கையை கொடுப்பது தான் Bonus Share.

மொத்தத்தில் போனசாக பங்குகள் கிடைப்பது என்பது பங்குகளை பிரிக்கும் நடவடிக்கையை விட சாதகமான ஒன்றாக பார்க்கப்படும்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .
  • Debt-To-Equity விகிதம் கணக்கிட ஒரு கால்குலேட்டர் (ப.ஆ - 40)


  • « முந்தைய கட்டுரை
    Email: muthaleedu@gmail.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக