திங்கள், 16 மார்ச், 2015

பங்கு போர்ட்போலியோவை மறு சமநிலை செய்வது எப்படி? (ப.ஆ - 37)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

முதலில் இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்த நண்பர் ராஜா அவர்களுக்கு நன்றியைக் கூறி கொள்கிறோம்.


முதலீடுகளில் போர்ட்போலியோ என்ற பதமே சமநிலையைக் குறிப்பிடுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். ஒரே வழியில் நமது முதலீடுகள் முழுவதுமாக கரைவதை தடுக்க இந்த சமநிலை உதவும்.

இது தொடர்பாக நாம் எழுதிய முதலீடை பிரிப்பது எப்படி? என்ற தொடரை மேலும் விவரங்களுக்கு படிக்கலாம்.

முதலில் நாம் திட்டமிட்டு ஒவ்வொரு பங்கும் இவ்வளவு சதவீதத்தில் என்று ஒரு போர்ட்போலியோவை உருவாக்கி கொள்கிறோம்.

உதாரணத்திற்கு பத்து பங்குகள் ஒவ்வொன்றையும் பத்து * பத்து = நூறு சதவீதத்தில் என்று ஒரு போர்ட்போலியோவை சமநிலையில் உருவாக்கி இருப்போம்.


துவக்க நிலையில் திட்டமிட்ட போர்ட்போலியோ 

அதன் பிறகு ஒரு பங்கு 100% லாபத்திலும் மற்றொரு பங்கு 25% லாபமும் கொடுத்து சீரான வேகத்தில் செல்கிறது என்று கருதிக் கொள்வோம்.

இந்த நிலையில் ஒரு வருடம் கழித்து முதலீடை பார்த்தால் போர்ட்போலியோவில் ஒரு சமநிலையின்மையை பார்க்கலாம். 

அதாவது 100% லாபம் கொடுத்த பங்கு அதிக அளவிலும் 25% லாபம் கொடுத்த பங்கு குறைந்த அளவிலும் போர்ட்போலியோவில் நிலை கொண்டிருப்பதைக் காணலாம். ஒரு பங்கு 15% அளவிலும், மற்றொரு பங்கு 5% என்ற நிலைக்கும் சுருங்கி இருக்கும். இது ஒரே பங்கில் அதிக அளவில் சார்ந்து இருக்கும் நிலையை தோற்றுவித்து விடும். 


லாப நஷ்டங்களால் சமநிலையை
இழந்த போர்ட்போலியோ 

பொருளாதார தேக்கங்கள் வரும் போது அதிக லாபம் கொடுத்த பங்கு தான் அதிக அளவில் சரிய வாய்ப்புகள் அதிகம்.. இதனால் நமக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு சம்பாதித்த லாபம் இழக்கப்பட்டிருக்கும்..

இந்த நிலையில் அதிக லாபம் கொடுத்த பங்கின் சிறிய பகுதியை விற்று சீரான லாபத்தில் செல்லும் பங்கில் போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் வேகமாக சென்ற பங்கின் பகுதி லாபம் உறுதி செய்யப்படுகிறது. 

அதே நேரத்தில் போர்ட்போலியோவும் நாம் எண்ணியவாறு சமநிலையில் செல்வதால் சரிவுகளின் போதும் அதிக அடிபடாமால் காத்து விடலாம். 

நிகழ்தகவு என்று பார்த்தால் கூட கடந்த வருடத்தில் குறைந்த லாபம் கொடுத்த நல்ல பங்கு அடுத்த வருடம் தனது நிலையை சரி செய்து அதிக லாபம் கொடுக்கலாம். ஆனால் அதிக லாபம் கொடுத்த பங்கு தொடர்ச்சியாக உயரும் வாய்ப்புகள் என்பது குறைவே.

இதனால் பங்குகளில் ஏற்படும் லாப நஷ்டங்கள் நாம் உருவாக்கிய போர்ட்போலியோவின் வடிவத்தை மாற்றாத வகையில் என்றும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

இந்த மறு சமநிலையை ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு முறை சரி பார்த்துக் கொள்வது நன்றாக இருக்கும். இதனால் LTCG வரி பலன்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அருமையான பதிவு. இருப்பினும் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது, மேலும் சில உதாரணங்களுடன் சொன்னால் தெளிவாக புரியும்.

    பதிலளிநீக்கு