திங்கள், 23 மார்ச், 2015

பொய்த்து பெய்த மழையால் பணவீக்கம் கூடுகிறது

நீண்ட நாட்களாக பணவீக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. இதற்கு மழை இல்லாத வறட்சியும் காரணமாக சொல்லப்பட்டது.


அதன் பிறகு கடந்த நாலைந்து மாதங்களாகத் தான் பணவீக்கம் கட்டுக்குள் வந்தது. ஒரு கட்டத்தில் எதிர்மறைக்கும் சென்று ஆச்சர்யமளித்தது.



இதனால் ரிசர்வ் வங்கி கூட வட்டி விகிதங்களை அரை சதவீதம் அளவு குறைத்தது.

கடந்த காலத்தில் பொய்த்து கெடுத்த மழை இன்று பெய்து கெடுக்கிறது. இந்தியாவில் பல இடங்களில் தற்போது அறுவடை காலம் நிலவி வருகிறது. இந்த சமயத்தில் மழை தேவையில்லாமல் பெய்து விளைந்த பயிர்களை அளித்துள்ளது.

இதன் பாதிப்பு ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் கடுமையாக உள்ளது. கிட்டத்தட்ட 25% பயிர்கள் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிகிறது.

வறட்சி காரணமாக பயிரையே விளைவிக்காமல் இருப்பதை கூட தாங்கி கொள்ளலாம். ஆனால் எல்லாம் முடிந்து கனி கிடைக்கும் சமயத்தில் அழிவு என்பது தாங்க முடியாதது.

அந்த வகையில் இந்திய விவசாயிகளுக்கு விடிவு காலம் இல்லை. அது கார்பரேட் மோடி வந்தாலும் கூட.

அருண் ஜெட்லி உணவு பற்றாக்குறை வராது. சமாளித்து விடலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் விலைவாசி கூடும் என்று குறிப்பையும் கொடுத்து இருக்கிறார்.

இதனால் விவசாய மூலப்பொருட்களை பயன்படுத்தும் நுகர்வோர் நிறுவனங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

கோதுமை, சோளம், டீ போன்றவற்றின் விலைகள் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. அதனால் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

இது போக, வட்டி விகிதங்கள் அதிக அளவில் குறைக்கப்படும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் பங்குச்சந்தைக்கு ஏமாற்றமாக அமையும்.

மொத்தத்தில், பங்குசந்தைக்கு எதிர்பாராத ஒரு கெட்ட செய்தி இது.

பாதிப்பின் தாக்கத்தை மெல்ல வரும் தரவுகளில் தான்  ஓரளவு கணிக்க முடியும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக