வியாழன், 5 டிசம்பர், 2013

ஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா?

இந்த கட்டுரை கெயில் என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த அளவுக்கு மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைப் பிடுங்க முயலுகிறது என்பதைப் பற்றியது.


***
தன் குடிமக்களிடம் இருந்து அளவுக்கு அதிகமாக வரிவாங்கினான் அறிவுடைநம்பி எனும் பாண்டிய மன்னன். பிசிராந்தையார் என்ற புலவர், இந்த மன்னனால் வருந்திய மக்களின் துயரக்கண்ணீரைத் கீழே உள்ள தமிழ்ப்பாடல் கொண்டு துடைத்தார்.

"யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்
உலகமும் கெடுமே"
என்று பாடி எச்சரித்தார்; மன்னனைத் திருத்தினார்.

“விளைந்த நெல்லை முறையாக அறுத்துக் கவளமாக உருட்டி யானைக்கு உணவு தருவார்கள். அப்படித் தரும்போது ஒருமிகச்சிறிய அளவு நிலத்தில் விளையும் நெல்லும் அந்த யானைக்குப் பலநாள் உணவு தருவதற்குப் போதும். ஆனால் வயல் முழுவதும் யானையைப் புகுந்து மேய விட்டால் என்ன ஆகும்.

அதன் வாய்க்குள் செல்வதைவிடக் காலில் மிதிபட்டு அழியும் நெல்லே அதிகமாக இருக்கும். அளவுக்கு மிஞ்சி வரிவிதித்து உன் ஆட்களால் மக்களை வருத்தி நீ பொருள் பெறுவதும் இதைப்போன்ற செயல்தான்” என்று உணர்த்தினார்.

தமிழ் இலக்கியத்தில் உள்ள இந்த நிகழ்வு வரி விதிப்பிற்கு மட்டும் சொல்லப்பட்டது.
***இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ. ஆனால் தற்போதுள்ள மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

கூடங்குளம், கெயில், மீத்தேன் என்று தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் பல திட்டங்களுக்கு யானை புகுந்த நிலம் போல சுற்றியுள்ள இடங்களை ரணகளமாக்கி, செயல்படுத்த முனைகிறார்கள்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசுக்கு எதிராக,கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது.

இதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

தென் இந்தியாவிற்கு விநியோக்கிக்கப்படும் எரிவாயு பெரும்பாலும் கொச்சி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு பெறப்படுகிறது.

இந்த எரிவாயு இறக்குமதி செய்யப்படும் போது உயர் அழுத்த திரவ நிலையில் இருக்கும். அதனை மத்திய அரசின் PETRONET என்ற நிறுவனம் மீண்டும் வாயு நிலைக்கு மாற்ற உதவுகிறது.

எமது முந்தைய ஒரு பதிவில் ஒரு முதலீட்டாளராக இதைப் பற்றி சொல்லி இருந்தோம்.
இது எமது பங்கு நஷ்டக் கணக்கு

இந்த எரிவாயு GAIL போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் மற்ற இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இப்பொழுது பிரச்சனையான இந்த திட்டம் கொச்சியில் இருந்து பெங்களுரூக்கு கொண்டு செல்லப்படுவதற்காக திட்டமிடப்பட்டது.

மொத்தம் 871 கி.மீ செல்லக்கூடிய இந்த திட்டத்தில் 310km தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், தருமபுரி உட்பட ஏழு மாவட்டங்களின் வழியாக செல்கிறது. இந்த 310kmல் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்களாக வருகின்றன.இது போக கெயில் நிறுவனம் போட்ட விதி முறைகள் விவசாயிகளை கடுமையாக பாதித்தது.

நிலத்தின் மதிப்பு என்று அரசினால் சொல்லப்பட்டது இருபது வருட பழமையானது. இந்த மதிப்பில் வெறும் 10% மட்டும் கெயில் கொடுக்கும். அதாவது ஒரு செண்டுக்கு சராசரியாக 300 முதல் 500 வரை மட்டும் கிடைக்கும்.

பைப் பதித்த பிறகு நிலத்தை உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். ஆனால் பதிக்கப்பட்ட நிலத்தின் இரு புறமும் 10 மீட்டர் தொலைவுக்கு அந்த நிலத்தை அவர்கள் எந்த வித செயலுக்கும் பயன்படுத்த முடியாது.

அவர்கள் நிலத்தில் பதிக்கப்பட்ட பைப்புகளுக்கு சேதம் வந்தால் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். மீறினால் கிரிமினல் நடவடிக்கையாகக் கருதப்படும்.

இப்படி எந்த விதத்திலும் பயன் தராததால் விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர்.

தமிழ்நாடு அரசும் இந்த எதிர்ப்பு காரணமாக விவசாய நிலத்திற்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம் என்று பரிந்துரைத்தது.

ஆனால் கெயில் நிறுவனம் சட்டபடி நெடுஞ்சாலையில் கொண்டு செல்ல முடியாது என்றும், அது அதிக செலவு பிடிக்கும் ன்று வாதிடுகிறது.

ஆனால் கேரளாவில் மட்டும் பைப்புகள் நெடுஞ்சாலையில் செல்ல எந்த சட்டம் அனுமதிக்கிறது என்று தெரியவில்லை?

செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் முழுச் சுமையும் விவசாயிகள் தலையிலா கட்டுவது?

அம்பானிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் சிகப்பு கம்பளம் விரிக்கும் அரசு சொந்த மக்களை ஏன் இப்படி விரட்டுகிறது?

அப்புறம் நாட்டில் நக்சல்கள் தான் பெருகுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இழப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை..

மக்களின் வளர்ச்சிக்காக தான் திட்டங்கள் தேவையே தவிர, திட்டங்களுக்காக மக்கள் வாழ வேண்டிய தேவையில்லை..


நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக