சனி, 21 டிசம்பர், 2013

மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி? -4

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் தொடரின் கடந்த பாகங்களில் எந்த பிரிவு மியூச்சல் பண்ட் நமககு உகந்தது? என்பதை முடிவு செய்வது பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

தற்பொழுது எந்த பிரிவு நமக்கு தேவை என்று முடிவு செய்யப்பட்டதால் சந்தையில் இருக்கும் 200 மியூச்சல் பண்ட்களில் 20 நிதிகளாக பில்டர் செய்யப்பட்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதனை பார்ப்போம். அதற்கு தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி தெரிந்திருத்தல் நலம்.



நடத்தும் நிறுவனம்?


எந்த நிறுவனம் அந்த மியூச்சல் பண்டை நடத்துகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக Mutual Fund முதலீடுகள் என்பது ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் வகையாகும்.

அந்த சூழ்நிலையில் அந்த நிதியை நடத்தும் நிறுவனங்கள் நன்றாக இருப்பதும் அவசியமாகும். அண்மையில் கூட பிரபலமான Franklin Templeton நிறுவனத்தின் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்ற நிலையும் வந்தது.

பார்க்க:
மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து 
சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

அதனால் மியூச்சல் பண்ட் சார்ந்து இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் கடந்த பத்து வருடங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்காமல் இருத்தல் அவசியம்.

நிதி மேலாளர்?


மியூச்சல் பண்ட்டில் நிதி மேலாளர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது முடிவுகள் தான் பலரது முதலீடைத் தீர்மானிக்கின்றன. அதனால் இணையத்தில் இவர் நிர்வகித்து வரும் மற்ற நிதிகள் எப்படி செயல்படுகின்றன? என்பதையும் ஆராய வேண்டும்.


கட்டணங்கள்:


பல சிறு முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யாமல் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்கு இந்த கட்டணங்கள் ஒரு முக்கிய காரணம். இவை கொஞ்சம் அதிகமான அளவிலே உள்ளது. அண்மையில் செபி இந்த கட்டணங்களை நெறிமுறைப்படுத்தியுள்ளது. இது போக ஏதாவது மறைமுக கட்டணங்கள் இருக்கிறதா? என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தற்போது மியூச்சல் பண்ட்டில் entry load ஒழிக்கப்பட்டு விட்டது. இது போக Transaction Charges, Exit load, Fund Running Charges போன்ற கட்டணங்கள் உள்ளது.

பொதுவாக 1000 கோடிக்கு மேல் நிர்வாகமுள்ள பண்ட்களின்  Fund Running Charges குறைவாக இருக்கும். அதனால் பெரிய அளவான மியூச்சல் பண்ட்களில் முதலீடு செய்வது நல்லது. இதனை Expense Ratio என்ற விகிதம் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த விகிதம் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நிதி அளவு


பொதுவாக பரஸ்பர நிதிகள் நூறுகளின் அல்லது ஆயிரம் கோடிகள் என்று பெரிய அளவில் இருக்கும். இதில் பெரிய அளவு நிதிகளைக் கொண்டிருக்கும் பரஸ்பர நிதிகள் கொஞ்சம் பாதுகாப்பானவை.

ஏனென்றால் சிறிய அளவு நிதிகளில் ஏதேனும் பெரிய அளவில் உள்ள முதலீட்டாளர் விலகி விட்டால் மற்ற சிறு முதலீட்டாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பெரிய அளவு நிதிகளில் இந்த விலகல் என்பது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். இது போக Expense Ratio விகிதமும் குறைவாக இருக்கும். குறைந்த பட்சம் 1000 கோடியாவது அந்த பண்ட் வழியாக நிர்வகிக்கப்படுவது நல்லது.

நிலைத்தன்மை:


பாதுகாப்பான நீண்ட கால முதலீட்டிற்கு பரஸ்பர நிதியின் நிலையானத் தன்மை என்பது மிக முக்கியம். சில நிதிகள் சில காலங்களில் அதிக லாபம் கொடுத்து இருக்கும். அதன் பின் மாற்றங்கள் இருக்காது. இந்த மாதிரியான நிதிகளை தவிர்க்கலாம்.



இதனை நாம் Beta என்ற மதிப்பின் மூலம் எளிதில் கண்டு பிடித்து விடலாம். இந்த Beta அளவானது ஒன்றுக்கு அருகில் இருந்தால் சந்தையுடன் ஒத்துப் போகிறது என்று அர்த்தம். அல்லது 1.5 என்று இருந்தால் சந்தை 10% கூடினால்/ குறைந்தால் இந்த நிதி 15% கூடுகிறது அல்லது குறைகிறது என்று பொருளாகும்.


சீர்தன்மை:


சில நிதிகள் சில காலங்களில் மட்டும் நல்ல திறனாக செயல்படும். மற்ற காலங்களில் அமைதியாக இருக்கும். இந்த நிதிகளையும் தவிர்க்கலாம். இதனை Standard Deviation என்ற மதிப்பை வைத்து எளிதில் கண்டு பிடிக்கலாம்.

உதாரணத்துக்கு Standard Deviation மதிப்பு 4% என்றும் வருட லாபம் 12% என்றும்  இருந்தால் அதனுடைய லாபம் 8 முதல் 16% என்ற இடைவெளியில் இருக்கலாம்.

பரவலாக்கம்:


மியூச்சல் பண்ட் நிதி அதிக அளவில் பரவலாக்கப்பட்டிருப்பதும் அவசியமானது. இந்த நிதிகள் கொஞ்சம் பாதுகாப்பானவை. அதிகமான, நிலையான வருமானம் கொடுக்கும் வகையில் இருக்கும்.

இதனுடைய பரவலாக்கம் பல துறை பங்குகள், LARGE CAP, MID CAP, SMALL CAP என்று பல அளவுகளில் இருப்பது நல்லது.

CRISIL RATING:


இது பொதுவாக நிறுவனங்களுக்கு, பரஸ்பர நிதிகளுக்கு வழங்கப்படும் அளவுகோல். இந்த அளவுகோல் ஒன்று முதல் ஐந்து ஸ்டார் அளவில் உள்ளது. இதில் அதிக அளவு பெற்ற நிதி நல்லதாகக் கருதப்படும். அதனால் 4, 5 ஸ்டார் ரேடிங் உள்ளதா என்பதையும் பார்த்து முதலீடு செய்யுங்கள்.

நமது தேவை?:


கடைசியான ஒன்று..நமது தேவை என்ன என்பதைப் பார்க்கவும்..அதாவது வயதானவர்களுக்கு உடனடியாக ஒரு பாதுகாப்பான முதலீடு தேவைப்படும். அதே சமயத்தில் இளைஞர்களுக்கு சிறிது காலம் பிறகு ஒரு பெரிய தொகை தேவைப்படும். அவர்கள் கொஞ்சம் அதிக வருமானம் எதிர்பார்க்கலாம். கொஞ்சம் அதிக RISK கூடிய நிதிகளில் முதலீடு செய்யலாம்.

இவ்வளவு தகவல்களையும் சரி பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முதலீட்டில் நஷ்டம் வாரது. அதனால் முதலீடு செய்யும் முன் கொஞ்சம் பொறுமையாக இருந்து முடிவு பண்ணுவது அவசியமானது.ஏதோ வருமான வரி விலக்கு பெறுவதற்காக அவசரம், அவசரமாக முதலீடு செய்ய வேண்டாம்.

தொடரின் அடுத்த பாகத்தில் மியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள்- 5என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக