வெள்ளி, 6 மார்ச், 2015

லாபத்தை எதிர்பார்க்காதீங்க! பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்

சில விடயங்கள் திடிரென்று நடந்து விட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பங்கு சந்தையிலும் இந்த அடித்து துவைத்து போடும் பழக்கம் அதிகம் உண்டு.


அதனால் தான் சில நிறுவனங்கள் முன் எச்சரிக்கையாக எங்க கிட்ட எதிர்பார்க்காதீங்க என்று முன்னரே சொல்லி விடுவார்கள். அதன் பிறகு முதலீட்டாளர்களும் தம்மை தயார்படுத்திக் கொள்வார்கள். அதன் பிறகு முடிவுகள் நன்றாக வந்தால் இன்ப அதிர்ச்சியாக அமைந்து விடும்.



அதே போல் தான் தற்போது இன்போசிஸ் மற்றும் TCS முதலீட்டாளர்கள் கூட்டம் போட்டு இன்னும் இரண்டு வருடங்களுக்கு பெரிதளவில் லாபம் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள்.

இதற்கு தாங்கள் முதலீடு செய்த விடயங்களின் பலன் கிடைக்க இன்னும் இரண்டு வருடமாவது ஆகும் என்பது தான் காரணமாக சொல்லப்பட்டது.

மென்பொருள் துறையை பொறுத்த வரை மாற்றங்கள் வெகு விரைவில் நடந்து விடும். ஆனால் புரோக்கர் போன்று ஆட்களை அனுப்பி கமிசன் வாங்கும் Outsourcing முறையை பின்பற்றி வந்த இந்திய மென்பொருள் நிறுவனங்கள் துறையின் வேகத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

எம்மிடம் ஒரு வெளிநாட்டவர் கேட்டது. இந்தியர்கள் ஐடியில் சிறந்தவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்தவொரு இந்திய ஐடி நிறுவனமும் Google, Microsoft போன்று புகழ் பெறவில்லையே என்று கேட்டார்.

அது தான் உண்மையும் கூட..

பல நிறுவனங்கள் பல வருடங்கள் முன்னரே  Artificial Intelligence, Big Data, Cloud Computing போன்ற நவீன தொழில் நுட்பங்களுக்குமுதலீடு செய்து விட்டார்கள். பலனையும் அடைய ஆரம்பித்து விட்டார்கள். வரும் காலங்களில் இந்த தொழில் நுட்பங்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு போல் நம்மவர்கள் தற்போது தான் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதன் பலன் கிடைக்கும் சமயத்தில் போட்டியாளர்கள் அடுத்தக் கட்டத்திற்கு சென்று இருப்பார்கள்.

பார்க்கும் போது ஐயர் வருகின்ற வரையில் அமாவசை காத்திருக்காத பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

அதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் இந்த பின் வாங்கும் வார்த்தைகளை நம்பி முதலீட்டாளர்கள் காத்து இருப்பார்களா என்று தெரியவில்லை. காத்திருப்பதிலும் அர்த்தம் இல்லாமல் தான் உள்ளது.

ஐடி நிறுவனங்களிடம் அதிக அளவு கையிருப்பு பணம் உள்ளது. இது தான் ஒரே சாதகமான விஷயம். இதை வைத்து அந்தந்த துறைகளில் வலுவாக இருக்கும் நிறுவனங்களை கைப்பற்றுவதே ஒரே சாத்தியமான வழியாக உள்ளது.

இந்த குறுக்கு வழியைத் தான் அரசியலில் குதிரை பேரம் என்றும் சொல்லலாம்:)


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. என்ன சார் சொல்ல வர்றிங்க. IT stock வாங்கலாமா வேணாமா, வைத்திறுக்கலாமா வேண்டாமா.......

    பதிலளிநீக்கு