வியாழன், 29 அக்டோபர், 2015

ஏசிக்கு மாறும் இந்தியர்களால் குஷியில் ஏசி நிறுவனங்கள்

ஒரு செய்தி வெளியாகும் போது ஒவ்வொருவர் பார்வையில் வெவ்வேறு விதத்தில் உள்வாங்கப்படுகிறது.


நேற்று ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.



அமெரிக்காவில் 87% வீடுகளில் ஏற்கனவே ஏசி பொருத்தப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் வெறும் 2% வீடுகள் தான் ஏசி உள்ளது.

ஆனால் தட்பவெட்ப நிலையை பார்த்தால் நமக்கு தான் அதிக அளவு தேவை. நமது பொருளாதார நிலை பெரிதளவு உயராததால் மக்கள் ஏசியை ஒரு அத்தியாவசிய பொருளாக இன்னும் கருதவில்லை.

ஆனால் தற்போது இந்தியர்கள் தங்கள் வருமானம் ஓரளவு உயர்ந்து வருவதால் நமது ஊரின் சூடான காலநிலைக்காக குளிரூட்டும் சாதனங்களை அதிக அளவில் வாங்க துவங்கி உள்ளனர்.

அதனால் இனி அதிக அளவு மின்சார தேவை ஏற்படும். அதிக அளவு உற்பத்தி செய்ய வேண்டிய அளவிற்கு அரசு தள்ளப்படும் என்று செய்தி கூறியது.

அரசுக்கு இது ஒரு கவலை தரும் செய்தி தான்.

ஆனால் முதலீட்டாளனாக நாம் பார்த்தால் இரண்டு முக்கிய குறிப்புகளை தருகிறது.

ஒன்று, 
இனி மின்சார தேவை அதிகரிக்க உள்ளது. அதனால் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல டிமேண்ட் இருக்கும். ஒரு வேளை ஏசி இல்லாமல் போனாலும் மின்சார தேவையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று பல விதங்களில் சொல்லலாம்.

அதனால் இந்த குறிப்பை விட்டு விடுவோம்.

இரண்டாவது,
கடந்த மூன்று ஆண்டுகளில் ஏசி துறையானது வருடத்திற்கு 20% என்ற வளர்ச்சியை அடைந்துள்ளது. இது மற்ற துறைகளின் சராசரி வளர்ச்சியை விட மிக அதிகமாகும்.

ரொம்ப நாள் துவண்டு கிடந்த இந்திய எலெக்ட்ரிக்கல் நிறுவனங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம்.

இந்திய ஏசி சந்தையில் மூன்றில் ஒரு பங்கு Samsung, LG போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால் மற்ற இரண்டு பங்கு இன்னும் உள்நாட்டு நிறுவனங்களிடம் தான் உள்ளது.

குறைவான விலை மற்றும் அதிக அளவு மார்ஜின் என்பவற்றில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில அசௌகரியங்கள் இருக்கத் தான் செய்கின்றன. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம்.

இதில் Blue Star, Hitachi என்று கிட்டத்தட்ட எல்லா உள்நாட்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.

இது வரை தேங்கி கிடந்த இந்த துறையால் கடன், வட்டி போன்ற பிரச்சினைகளால் இந்த நிறுவனங்களின் பங்குகள் பெரிதளவு ஜொலிக்க முடியவில்லை. ஆனால் இனி இந்த நிலை மாறும் என்றே தோன்றுகிறது.

அதனால் ஓரளவு நல்ல நிதி நிலைமை மற்றும் நல்ல வளர்ச்சி எதிர்பார்க்கும் ஏசி நிறுவனங்களை இனங்கண்டு முதலீடு செய்யுங்கள். பென்னி பங்குகள் போல் ஐந்து வருடங்களில் இரட்டிப்பு வருமானம் பெறவும் வாய்ப்பு உண்டு.

தொடர்பான கட்டுரைகள்:
முதலீடு கட்டண சேவை பங்கு பரிந்துரைகள்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக