செவ்வாய், 6 அக்டோபர், 2015

புவி வெப்பமயமாதல் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம்?

அவ்வளவு சீரியசாக எடுக்கப்படாத ஒரு செய்தியின் தாக்கம் பங்குகளில் எப்படி எதிரொலிக்கலாம் என்பதை பார்ப்போம்.


கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் புவி வெப்பமயமாதல் தொடர்பாகவும் கூட்டம் நடந்தது.பூமியில் இருந்து வெளியாகும் கரியமில வாயு காரணமாக ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து பூமி சூடாகிறது, அதனால் பனி மலைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து விடுகிறது என்பது தான் இந்த பிரச்சினையின் முக்கிய சாராம்சம்.

அதில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகள் மீது பல நிபந்தனைகளையும் அழுத்தத்தையும் கொடுத்தன.

ஆனால் தொழிற்புரட்சியின் காரணமாக இது வரை அதிக அளவு காற்று படலத்தை மாசடைய வைத்ததும் வளர்ந்த நாடுகள் தான். நல்ல ஆண்டு அனுபவித்து விட்டு இப்பொழுது அறிவுரை சொல்ல கிளம்பி விட்டார்கள்.

அதிலும் பல சாரம்சங்கள் அவர்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டார்கள். கூடவே தங்கள் வியாபாரத்தையும் சேர்த்துக் கொண்டார்கள்.

சுற்றுசூழலை மாசுபடுத்தாத பசுமை உபகரணங்களை பயன்படுத்துமாறும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள். வளரும் நாடுகள் இதில் தொழில் நுட்பத்துவம் பெறாததால் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களின் சந்தைகளை விரிவாக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கு ஆற்றலை அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை. அதனால் முன்பை விட அதிகமாக நிலக்கரியை வெட்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க துவங்கி உள்ளனர்.

நிலக்கரி எரிப்பது என்பது பெரிய அளவில் காற்று மாசுக்கு காரணமாக இருப்பதால் தெர்மல் உலைகள் மூலம் மின்சாரம் எடுப்பதை குறைக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தான் தீர்க்க முடியும் என்பதால் இந்தியாவும் 2030க்குள் கரியமில வாயு வெளியீட்டை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாக கூறி உள்ளனர்.

இது தான் நமக்கு ஒரு முக்கிய குறிப்பை சந்தையில் தருகிறது.

மின்சார உற்பத்திக்காக தான் நாம் அதிக அளவில் தெர்மல் உலைகளை பயன்படுத்தி வருகிறோம். இந்த அழுத்தத்தின் காரணமாக அதில் மாற்றம் ஏற்பட்டு மாற்று வழிகளில் மின்சார உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படலாம்.

அதனால் ஒரு ஐந்து அல்லது பத்து வருட முதலீட்டுக் காலத்தில் சில பங்குகள் நேர்மறையாகவும், சில எதிரமறையாகவும் பாதிக்கப்படும்.

தெர்மல் உற்பத்தியில் அதிக அளவில் ஈடுபட்டு வரும் NTPC நிறுவனம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்து பகுதி தெர்மல் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் Tata Power போன்ற தனியார் நிறுவனங்களும் சிறிது பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் அவர்கள் தங்கள் வியாபரத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருவது கவனிக்கத்தக்கது.

இறுதியாக நிலக்கரி எடுக்கும் Coal Indiaவும் எதிர்மறை வாய்ப்புகளை பெற வாய்ப்பு உண்டு.ஆனால் காற்றாலை மின்சாரம் எடுக்கும் Suzlon Energy, சோலார் மின்சாரத்தில் மும்முரமாக இறங்கியுள்ள அதானி போன்றவர்கள் நேர்மறை பலன்களை பெற அதிகம் வாய்ப்பு உண்டு.

ஆனாலும் இந்த பங்குகள் தற்போது கடுமையான கடன் சுமையில் இருப்பதால் குறுகிய காலத்திற்கு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இந்திய அரசு இப்படி வாக்குறுதி கொடுத்து வந்தாலும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.

அதனால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நல்ல பயன்படுத்தி விட்டு அப்புறம் தான் சில நடவடிக்கைகளில் இறங்குவார்கள் என்று நம்பலாம்.

என்றாலும், அடுத்த ஆற்றல் உற்பத்தி ஜாம்பவான்கள் யார் என்பதை கவனிக்க இந்த குறிப்பு பெரிதும் உதவும்.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக