செவ்வாய், 13 அக்டோபர், 2015

தி மார்சியன் - திரைப்பட பார்வை

இது பொருளாதாரத்திற்கு அப்பாற்ப்பட்ட ஒரு பதிவு. அண்மையில் ரசித்து பார்த்த ஒரு திரைப்படத்தை பற்றி எழுதுகிறோம்.


கடந்த வாரம் தி மார்சியன் என்ற ஆங்கில திரைப்படத்தை 4Dயில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.4D என்பதால் சில சீன்களில் இருக்கைகளும் நம்மை ஆட்டுவிக்கின்றன. மின்னல் ஒளி திடீர் என்று வருகிறது. முதல் அனுபவம். நன்றாக இருந்தது.

வானவியலை மையமாக வைத்துக் கொண்டு ஆங்கில படங்கள் அதிக அளவில் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தான்.தி மார்சியன்.

கிட்டத்தட்ட காட்சிகள் அனைத்துமே செவ்வாய் கிரகத்தில் தான் நடக்கிறது. நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சி செய்ய ஒரு குழுவினர் செல்கின்றனர்.

கடந்த வருடம் Intersteller என்ற திரைப்படத்தை பார்த்தோம். படம் பார்ப்பதற்கே இயற்பியலில் ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டி இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் அறிவியல் விடயங்கள் . அதனால் எளிதில் புரிய முடியவில்லை.

ஆனால் இந்த படம் பரவாக இல்லை. கொஞ்சம் அறிவியல் தெரிந்தால் போதும். மற்றபடி இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றியபடியே செல்கிறது.

செவ்வாயில் திடீர் என்று வந்த ஒரு பெரும்புயலால் விண்கலத்தில் சென்றவர்கள் அவசரம் அவசரமாக மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர்.விண்கலத்தில் ஏறிய பிறகு தான் தங்களுடன் வந்த ஒருவரை செவ்வாயில் விட்டு வந்ததை உணர்கின்றனர். மீண்டும் சென்று வர முடியாததால் அப்படியே விட்டு விடுகின்றனர். நாசாவும் அவர் இறந்து விட்டார் என்று அறிவித்து விடுகிறது.

ஆனால் மயங்கிய நிலையில் செவ்வாயில் இருந்த நபர் மீண்டு எழுகிறார். அடுத்த விண்கலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செவ்வாயிக்கு வரும் என்பதை தெரிந்து வைத்து இருப்பதால் அது வரை உயிர் வாழ வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

அதற்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் கருக்கதை..

அவர்கள் விட்டு சென்ற விண்வெளி ஆராய்ச்சி மையமும், ஒரு ரோவர் காரும் மட்டும் செவ்வாயில் இருக்கிறது. அதில் உள்ள பொருட்களை வைத்து எப்படி எல்லாம் நிலைமையை சமாளிக்கிறார் என்பதை அழகாக உணர்த்துகிறார்கள்.

முதல் தேவை உணவு. அதற்கு தாங்கள் உணவிற்காக கொண்டு சென்ற உருளை கிழங்கு மூலம் செடிகளை பயிரிடுகிறார். உரமாக விண்கலத்தில் சேர்த்து வைக்கப்பட்ட மனித கழிவுகளை பயன்படுத்திக் கொள்கிறார். ஒரு வேதி ஆராயிச்சி மூலம் தண்ணீரையும் தயாரித்துக் கொள்கிறார்.ப்ளுட்டோனியம் கதரியக்கம் மூலம் அறை வெப்பநிலையை உருவாக்கி கொள்கிறார். சூரிய ஒளி கிடைக்கும் போது சோலார் பேட்டேரிகளை சார்ஜ் செய்து காரினை இயக்குகிறார்.

அடுத்து நாசாவிற்கு தகவல் அனுப்பி தாம் உயிருடன் இருப்பதை தெரிவிக்கிறார். அவர்கள் இவரை உயிருடன் மீட்க வேண்டும் என்று முனைந்து விண்கலத்தில் திரும்பி வந்து கொண்டிருப்பவர்களிடம் தெரிவிக்கின்றனர்.

பூமியின் சுற்று பாதை வேகத்தை பயன்படுத்தி அவர்களை மீண்டும் செவ்வாய் நோக்கி திருப்புகின்றனர். செவ்வாயில் சிக்கிய நபரை மீண்டும் வான்வெளியில் வைத்து மீட்கிறார்கள் என்பது தான் கதை.

விண்வெளியில் சில காட்சிகள் நம்ப முடியாத அளவு ரஜினிகாந்த் ஸ்டைலிலும் உள்ளன. ஆனாலும் பிரமிக்க வைக்கிறது.

இது தி மார்சியன் என்ற பிரபல நாவலை தழுவி தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தத்ரூபமாக வேகமாக படம் நகர்கிறது.

ஒரு முறை தாராளமாக பார்க்கலாம். 3Dயில் பார்த்தால் நன்றாக இருக்கும். படம் என்பதை விட விண்வெளி அறிவியல் பாடம் என்று சொல்லலாம்.

தி மார்சியன் நாவல் இணைப்பு கீழே உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக