ஞாயிறு, 25 அக்டோபர், 2015

Indigo IPO பங்கை வாங்கலாமா?

இந்திய விமானத்துறை நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் ஈட்டித் தரும் நிறுவனங்களில் ஒன்று Indigo.


இது ஒரு Low Cost Carrier என்ற பெயரில் அறியப்படுகிறது.



அதாவது Air Asia போன்ற வியாபர மாடலைக் கொண்டது. டிக்கெட் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும்.

ஆனால் மேலும் வசதிகள் தேவைப்படின் உணவு, வசதியான இருக்கைகள் என்று ஒவ்வொன்றிற்கும் தனித்தனி கட்டணங்கள் கொடுக்க வேண்டும்.

இந்தியாவை போன்ற வளரும் நாடுகளில் அதுவும் உள்நாட்டு விமான சேவைகளில் மக்கள் பெரிதளவு சேவையை எதிர்பார்ப்பதில்லை.

சரியான நேரத்தில் போய் சேர்வது தான் முக்கியமான விடயமாக இருக்கும். அந்த வகையில் குறைவான கட்டணம் கொடுத்தாலும் 87% சரியான நேரத்தையும் பின்பற்றி வருகிறது.

ஒரே விமானத்தை பல வழிகளில் பயன்படுத்தி வருவதிலும் வெற்றி கண்டு உள்ளது. அதனால் கட்டணம் குறைவாக இருப்பது வேறு வழிகளில் சமநிலைப்படுத்தப்படுகிறது.

ஒரு விமானத்தில் ஆரம்பித்து இன்று 100 விமானங்களை இயக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எல்லாம் பத்து வருடங்களில் கிடைத்த வளர்ச்சி தான்.

அதே போல் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதும் மற்ற விமான நிறுவனங்களைப் போல் இந்த நிறுவனத்திற்கும் மார்ஜினை கூட்டிக் கொடுக்கிறது.

பார்க்க: எரிபொருள் விலை குறைவால் உச்சத்தில் விமான பங்குகள்

வருமான வளர்ச்சி சராசரியாகவே 25%க்கும் மேல் வளர்ந்துள்ளது. மேலும் 14 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

இதெல்லாம் இந்த நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக விடயங்கள்.

ஒரு முக்கியமான எதிர்மறை விடயம் என்னவென்றால் நிறுவனர்கள் லாபத்தின் பெரும்பகுதியை டிவிடென்ட் என்று எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

அதனால் நல்ல பேலன்ஸ் சீட் கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது எதிர்மறையில் உள்ளது. ஆனால் தொடர்ந்து லாபம் கொடுத்து வருவதால் இந்த நிலை விரைவில் மாறலாம்.

இது தொடரும் என்றும் உறுதி அளித்துள்ளார்கள். அதிக டிவிடென்ட் விரும்புவர்கள் இந்த நிறுவனத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை தாரளமாக வைத்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் கிடைக்கும் லாபத்தில் 80%த்தை டிவிடென்ட்டாக கொடுக்கும் வழக்கம் இந்த நிறுவனத்திற்கு உள்ளது.



பங்குச்சந்தையில் உள்ள மற்ற விமான நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இன்னும் முழுமையாக மாறவில்லை. அதனால் P/E மதிப்பை ஒப்பிடுவது சரியாக வராது.

ஆனால் தற்போதுள்ள காலாண்டு படி பார்த்தால் இந்த நிறுவனம் முழு ஆண்டிற்கு 2400 கோடி ரூபாய் லாபம் ஈட்டலாம்.

அந்த வகையில் உச்சத்தில் குறிப்பிடப்பட்ட பங்கு விலையான 765யின் P/E மதிப்பு 10க்கு அருகிலே வருகிறது.

அப்படிப் பார்த்தால் பங்கு விலை நியாயமாகவே வருகிறது. அதனால் இந்த ஐபிஒவை வாங்க பரிந்துரைக்கிறோம்.

ஆனாலும் கடந்த இரு ஐபிஒக்களில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டாமல் இருப்பது ஐபிஒ ப்ரீமிய லாபத்தைக் குறைக்கலாம்.

அக்டோபர் 27 முதல் அக்டோபர் 29 வரை இந்த IPOவிற்கு விண்ணப்பிக்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக