வியாழன், 1 அக்டோபர், 2015

மோடியின் கருப்பு பண திரட்டல் நடவடிக்கை பலன் தரவில்லை

இந்த தேர்தலில் பிஜேபி அரசு ஜெயித்த பிறகு கருப்பு பணத்தை மீட்போம். மீட்ட பிறகு ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.


இது ஒரு தேர்தல் விளம்பரத்திற்காக சொல்லப்பட்டாலும் யதார்த்ததிற்கும் பதார்த்ததிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தது.



கடந்த செப்டம்பர் 30ந் தேதி வரை கருப்பு பணம் வைத்து இருப்பவர்களுக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டது.

அதற்கு முன் தானாகவே ஒத்துக் கொண்டு வரி கட்டாத வருமானங்களை காட்டிக் கொண்டால் 30% வரியும் 30% அபராதம் என்று மொத்தம் 60% கட்ட வேண்டும் என்பது விதி.

அப்படிக் காட்டாமல் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கி கொண்டால் 120% வருமானத்திற்கு வரியும், சிறைத் தண்டனையும் கிடைக்கலாம் என்றும் சொன்னார்கள்.

ஆனால் எதுக்கும் நம்ம ஆட்கள் அசரவில்லை.

இந்தியா முழுவதும் மொத்தமாகவே 3000 கோடி ரூபாய் தான் வசூலாகி உள்ளது.

பிஜேபி சொன்னது போல் முப்பது லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் இருப்பதாக கருதி கொண்டாலும் அதில் 3000 கோடி என்பது வெறும் ஒரு சதவீதமே.

இதற்கு முன்னாள் 1997ல் இதே போன்று வரி வசூல் செய்த போது பத்தாயிரம் கோடியைத் திரட்ட முடிந்தது குறிப்பிட்டத்தக்கது.

இந்தியாவில் நடைமுறை சிக்கல்கள் நிறையவே உள்ளது.

வங்கிகளில் சென்றால் பத்து வருடத்திற்கு மேல் உள்ள தரவுகளை பார்ப்பது என்பது மிகவும் கடினம்.

இந்த சூழ்நிலையில் இவங்க எப்படி கண்டுபிடிப்பாங்க என்று பலர் இருந்து இருக்கலாம்.

இது போக, 60% சொத்து மதிப்பை வரியாக கட்ட வேண்டும் என்றால் அந்த சொத்தை விற்று தான் கட்ட வேண்டும்.

மக்களை வருமான வரித்துறை விரட்டி விரட்டி பிடிப்பதை விட வருமான வரியை குறைத்தால் பலர் தாமாகவே வரி கட்டுவார்கள்.

சில நாடுகளில் வருமான வரி அதிகம். அதே போல் வருமான வரி கட்டுபவர்களுக்கு பின்னால் அதிக சமூக பாதுகாப்பு பலன்களும் கிடைக்கும்.

ஆனால் நமது ஊரில் வரி கட்டி விட்டு ஏன் ரோடு போடல என்று கூட யாரிடமும் கேட்க முடியாது.

பல நாடுகளில் உள்ளவாறு 15 முதல் 20% வரை வரி வரம்பு வைத்தால் வரி செலுத்துபவர்கள் கூடுவார்கள். அதனால் வரி வசூலும் கூடும்.

இதை விட்டு மாத சம்பளம் வாங்குபவர்களிடம் மட்டும் மொத்தமாக கறந்து எவ்வளவு காலம் தான் ஓட்ட முடியும்?



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக