திங்கள், 26 அக்டோபர், 2015

4G மொபைல் போனுக்கு மாறும் காலம் இது..

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு அல்லது மூன்று செய்தி குறிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன.

மூன்றும் சேர்ந்து ஒரு முக்கிய குறிப்பை உணர்த்துகின்றன என்று சொல்லலாம். மொபைல் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விடயமாக இருக்கும்.



ஒன்று, 
நேற்று வெளியான ஏர்டெல் நிதி முடிவுகளில் மொபைல் டேட்டா பிரிவு 50% வளர்ச்சி அடைந்து இருந்தது. இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு சௌகரியமாக மாறி விட்டார்கள் என்று கருத முடிகிறது.

இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தாவிட்டால் உலகம் நம்மை ஏற்றுக் கொள்ளாது போல. அந்த அளவிற்கு மாறி விட்டது.

இரண்டாவது, 
அதே ஏர்டெல் நிதி முடிவுகளில் 334 நகரங்களில் 4G சேவையைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறி உள்ளார்கள். அப்படி என்றால், இனி 4G சேவையை அதிக அளவில் ப்ரொமோட் செய்ய முயலுவார்கள். இன்னும் வேகமாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

பார்க்க: எதிர்பார்ப்பை மிஞ்சிய ஏர்டெல் நிதி முடிவுகள்

மூன்றாவது,
ப்ளிப்கார்ட் தனது இந்த வருட பிக் பில்லியன் டேயை முடித்து உள்ளது. அதில் அதிக அளவு விற்றது மொபைல் போன் தானாம். அதிலும் 4G மொபைல்கள் தான் 75% விற்று உள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மொபைல்கள் எதிர்கால சேவைகளுக்கும் பயன்படுத்துமாறு வாங்குவது இங்கு குறிப்பிட்டத்தக்கது.

அதிலும் கீழே உள்ள நான்கு மாடல்கள் தான் அதிக அளவு டிமேண்டில் விற்று உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்கள்.


(இதில் குறிப்பிடப்பட்ட விலைகள் அக்டோபர் 26 அன்றைய நிலவரம் மட்டுமே)

அதனால் நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் எதிர்முனைகளில் தொடர்பு கொள்பவர்களின் நிர்பந்தத்தால் நாமும் 4G சேவைகளை பயன்படுத்த வேண்டியது நிலை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

உதாரணத்திற்கு வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை. போன் கால், எஸ்எம்எஸ் சேவைகளை விட தனிமையை பாதிக்கும் ஒரு ஆப் என்றே சொல்லலாம்.

ஆனாலும் மற்றவர்கள் அதை பயன்படுத்தும் போது நாமும் அவர்களை தொடர்பு கொள்ள அதை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது.

அது போல் தான் 4G சேவை மூலம் வீடியோ கான்பெரென்ஸ்  போன்றவை பொதுவாக பயன்படுத்துவதாக மாறும் போது நமது மொபைலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.



4G சேவையில் LTE என்ற வேகமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி வேகத்தின் காரணமாக வீடியோ மூலம் பேசுவது, மொபைல் டிவி என்று ஏராளமான அப்ளிகேசன் வர வாய்ப்பு உள்ளது.

இவ்வளவு நாள் 4G சேவைக்காக அதிக அளவு டவர்கள் நிறுவ வேண்டும். அது அதிக செலவு பிடிக்கும். இது போக, நமது ஆட்களும் டேட்டாவை பயன்படுத்த பரிச்சயமாகவில்லை. அதனால் தான் டெலிகாம் நிறுவனங்களும் 4G சேவைக்கு பெரிதளவு விருப்பம் காட்டவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.

இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லாததால் மொபைல் தயாரிப்பவர்களும் இது வரை இந்த சேவையை தங்கள் மொபைலில் இணைக்கவில்லை. தற்போது  அதிக மொபைல்கள் இந்திய சந்தையில் வந்துள்ளன.

அதனால் நாமும் இனி வாங்கும் மொபைல்களில் இப்போதுள்ள 3G மற்றும் இனி வரும் 4G சேவைகள் என்று இரண்டும் இருக்குமாறு வைத்துக் கொண்டால் 4Gக்காக மட்டும் புது மொபைல்கள் வாங்க செல்ல வேண்டாம்.

மொபைல் வாங்கும் பொது இதனைக் கவனித்துக் கொள்ளவும்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக