வியாழன், 1 அக்டோபர், 2015

சாதகமாகும் உள்நாட்டு பொருளாதார காரணிகள், மீட்சிக்கு வாய்ப்பு

கடந்த இரண்டு மாதங்களாக கரடியின் பிடியில் இருந்த சந்தை பலருக்கு முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

அந்த சமயத்தில் முதலீடு செய்தவர்கள் நம்பிக்கை வீண்போக வாய்ப்பில்லை என்றே தற்போது தோன்றுகிறது.



நமது பொருளாதாரம் வலுவாக இல்லாவிட்டால் உலக அளவில் விழும் சிறு அடியும் நமக்கு பெரிதாக விழும். அது தான் கடந்த இரு மாதங்களாக நடந்தது.

22,000 புள்ளிக்கும் கீழ் செல்லும் என்றும் சந்தையில் சில கணிப்பாளர்கள் கணித்து இருந்தனர்.  நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. நடக்கவும் வாய்ப்பு குறைவு என்று தான் கருதினோம்.

தற்போது 26,000 புள்ளிகளை சந்தை கொஞ்சம் வலுவாக தாங்கி பிடித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அரை சதவீதம் குறைத்த போதே சந்தையின் திசை ஓரளவு மாறி விட்டது என்று கருதலாம்.

அதிலும் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வட்டியை குறைத்தது கொஞ்சம் சாதகமாக போனது.

நாம் அரை சதவீத வட்டித் தானே என்று நினைக்கிறோம். ஆனால் அதிக அளவில் கடன் வாங்கி இருக்கும் பெரிய நிறுவனங்களை பொறுத்த வரை இந்த வட்டிக் குறைப்பு அதிக அளவில் பலனைத் தரும்.

உதாரணத்திற்கு L&T நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அளவு குறைவாக வட்டி கட்டினால் போதுமாம். குறைவாக கட்டினால் அது லாபத்தில் தானே எதிரொலிக்கும்.

இது போக, ரிசர்வ் வங்கி முக்கியமான பண்டிகை சீசன் நேரத்திற்கு முன்பு குறைத்து ஆட்டோ நிறுவனங்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுத்துள்ளது.

தீபாவளிக்கும், ஆயுத பூஜைக்கும் வாகனங்கள், வீடுகள் வாங்குவது நமது வழக்கம். அதிலும் வட்டி குறைந்துள்ளது என்றால் கடன் வாங்கியாவது வாங்குவார்கள்.

இதனால் ஆட்டோ நிறுவனங்களும் குசியில் உள்ளன.

அடுத்து, நம்மைப் போல் நிறுவனங்கள் வருடத்திற்கு ஒரு முறை வருமான வரி கட்டுவது கிடையாது. ஒவ்வொரு காலான்டிற்கும் தவணை முறையில் வரி கட்டும்.

செப்டம்பர் மாதம் முடிந்த காலாண்டில் கடந்த வருடத்தை விட ஏழு சதவீதம் அதிகமாக வரி கட்டியுள்ளது. லாபம் அதிகமாக இருந்தால் தான் அதிகமாகவும் வரி கட்ட முடியும் என்ற நோக்கில் பார்த்தால் நேர்மறை செய்திகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளது.

இறுதியாக, உற்பத்தி தரவுகள் கடந்த காலாண்டில் 51.8 என்று இருந்தது. தற்போது 52.1 என்று அதிகரித்துள்ளது.

ஆக, உற்பத்தி துறை, ஆட்டோ, இன்ஜினியரிங் போன்ற துறைகளில் டிமேண்ட் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்.

அரசும் தமது பங்கிற்கு அதிகமாக செலவிட ஆரம்பித்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40% தொகையை ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவே செலவிட்டுள்ளது.

இதனால் பல நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.

மேற்சொன்ன தரவுகள் நிறுவனங்கள் பார்வையில் அடிப்படைகளுடன் இணைந்த தரவுகள். அதனால் மீண்டு வருவதை நம்பலாம்.

நம்பிக்கையுடன் முதலீடு செய்யும் நேரமிது!

எமது தனிப்பட்ட சேவைகளுக்கு muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக