செவ்வாய், 27 அக்டோபர், 2015

பீகார் தேர்தலால் சரிவிற்கு காத்திருக்கும் சந்தை

சில வாரங்களுக்கு முன்பு 25,000 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அருகில் சென்ற சந்தை 27,800க்கு அருகிலும் உயர்ந்து சென்றது.


தற்போது ஒரு நிலையாக  27,200க்கு அருகில் நிலை கொண்டுள்ளது.இந்த காலாண்டில் நிதி முடிவுகள் அவ்வளவு நன்றாக இருக்காது என்று கருதினார்கள்.

ஆனால் இதைக் கொஞ்சம் பொய்ப்பது போல் சில நிறுவனங்கள் கொஞ்சம் நல்ல நிதி அறிக்கைகளையே கொடுத்துள்ளன.

அதனால் நல்ல நிதி அறிக்கைகள் கொடுத்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் இந்த சூழ்நிலையில் உயர்ந்து வருகின்றன.

பங்கு மதிப்பீடல் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து முதலீடு செய்தவர்களுக்கு சென்செக்ஸ் மற்றும் அவர்கள் முதலீடுகளுக்கும் பெரிய அளவில் சம்பந்தமில்லை என்றே நினைக்கிறோம்.

நல்ல நிதி அறிக்கை கொடுத்த பங்குகள் சென்செக்ஸ் புள்ளிகளையும் தாண்டி மேலே உயரவும் தவறவில்லை என்பதையும் கவனிக்கவும். உதாரணத்திற்கு எமது இலவச போர்ட்போலியோ பரிந்துரை நிலவரங்களை பார்க்கவும்.

நேற்று கூட வெளிவந்த மாருதி மற்றும் Axis வங்கியின் நிதி முடிவுகள் மிக நன்றாக அமைந்தது. அதே சமயத்தில் Lupin நிறுவனம் எதிர்பார்த்த அளவு கொடுக்கவில்லை. அதற்கேற்ப அந்த பங்குகளும் எதிர்வினையாற்றின.

ஆனாலும் ஒட்டு மொத்தமாக சந்தையை மேலே உயர்த்தக் காரணிகள் ஒன்றும் வெளிப்படையாக இல்லை என்பது தான் உண்மையாக உள்ளது. அதே நேரத்தில் கீழே இழுத்து செல்லும் காரணிகளும் வலுவாக இல்லை.

அதனால் சந்தை ஒரு நாள் 100 புள்ளிகள் குறைந்து மறு நாள் 100 புள்ளிகள் உயர்ந்து ஒரு ஆட்டப்போக்கை காட்டி வருகிறது. இது அடுத்த வாரம் முழுமைக்கும் நீடிக்கலாம்.

அடுத்து, பீகார் தேர்தலில் பிஜேபி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பீகாரை பொறுத்தவரை சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன் நிறுத்தாதவரை கஷ்டம் தான்.

அதனால் மோடியின் பிரச்சாரம் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது கேள்விக்குறி தான்.

அந்த சூழ்நிலையில் சந்தை இன்னும் 26,500 வரை கீழ் இறங்க வாய்ப்பு உள்ளது என்றே கருதலாம்.

பீகார் முடிவு வரும் வரை கொஞ்சம் காத்து இருந்தால் பங்கு விலைகள் இன்னும் மலிவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பீகார் ஒன்றும் இந்திய பொருளாதரத்தை மாற்றி அமைக்கும் மாநிலமல்ல. ஆனால் வலுவற்ற சந்தையில் பீகாரும் ஒரு குறுகிய கால காரணியாக அமையலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக